புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 2)

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது. 

கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின. 

ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன. இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன. 

படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை. இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

(தொடரும்)