“மாட்டிறைச்சிக்கு, மாடுகளை சந்தையில் விற்கக்கூடாது” என்று கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாண்டு நிறைவு விழாக் கொண்டாடும் நேரத்தில், எழுந்துள்ள இந்தச் சர்ச்சை, அக்கட்சியின் சாதனைப் பிரசாரங்களைத் திசைதிருப்பியிருக்கிறது.
மூன்றாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையை சாதனையாக அக்கட்சியினர்
முன்வைத்தனர். இந்தியாவில் ஊழலை ஒழிக்க, கறுப்புப் பணத்தை அறவே ஒழிக்க, இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என்ற முழக்கம், எல்லாத் திசைகளிலும் கேட்டது.
அதில் ஓரளவு உண்மையிருக்கிறது. கடந்த மூன்று வருட பா.ஜ.க ஆட்சியில், ஊழல் புகார்கள் தலைதூக்கவில்லை. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், ஊழல் புகார் ஏதும் எழவில்லை.
ஏறக்குறைய 2004இல் வந்த, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் முதல் மூன்று ஆண்டுகள்போல், பா.ஜ.க அரசாங்கத்தின் இந்த மூன்று ஆண்டுகள், ஊழல் புகார்கள் இல்லாத ஆண்டுகளாக முடிவடைந்துள்ளன. அந்த வகையில் பா.ஜ.கவினருக்கு இது ஒரு சாதனை.
இந்த மூன்றாண்டுகளில் அப்படி நிகழ்த்திய சாதனை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், மாபெரும் வெற்றியை பா.ஜ.கவுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அங்கு ஆட்சியில், அமர்ந்திருக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யானந்தா, மாட்டிறைச்சிக்கு எதிரான போரைத் தொடங்கியிருக்கிறார். மாட்டிறைச்சிக் கூடங்களை மூடியிருக்கிறார். நிறையக் கெடுபிடிகளைக் கொண்டு வந்து உத்தரப் பிரதேசத்தில் ‘பா.ஜ.கவின் பசுவதைத் தடுப்பு’ என்றக் கொள்கையை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
இந்தியாவில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலம், அகில இந்திய அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரும் ஆற்றல் படைத்தது என்பதை மறப்பதற்கில்லை. இதுபோன்ற சூழ்நிலையில்தான் அகில இந்திய அளவில் மாட்டிறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதில் கெடுபிடிகள் நிறைந்த விதியை, மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றன.
இந்தப் புதிய விதிகள், எதிர்பார்த்ததுபோல், எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. மேற்குவங்கம், கேரளம், திரிபுரா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள், இந்த விதியை அமுல்படுத்த முடியாது என்று தெரிவித்து விட்டன.
அம்மாநில முதலமைச்சர்கள் அனைவரும் மத்திய அரசாங்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். நடந்து முடிந்த உத்தரப் பிரதேச தேர்தலில் முதலமைச்சராகியிருக்கும் யோகி ஆதித்யனாந்தாவின் அதிரடி அரசியல் மற்றும் வரப்போகும் குஜராத் சட்டமன்ற தேர்தல் போன்றவற்றை மனதில் கொண்டு, மாட்டிறைச்சி பற்றிய புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று ஒரு புறம் விவாதிக்கப்படுகிறது.
இன்னொரு புறமோ, மூன்றாண்டு பா.ஜ.க ஆட்சியில் சாதனைகள் இல்லை. அதை திசைதிருப்பவே இந்த மாதிரி புதிய மாட்டிறைச்சி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் விவாதிக்கப்படுகிறது.
ஆனால், இதில் எது உண்மையாக இருந்தாலும் ‘சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதி’யிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம்.
பிரதமர் மோடிக்கு எதிராக, அணி அமைக்க எதிர்க்கட்சிகள் ஒன்று திரளவில்லை என்பது, அவருக்கு இருந்த சாதகமான அம்சமாக இருந்தது. அந்தநிலையில் வரப்போகும் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வில், எதிர்க்கட்சிகள் அணி சேரத் தொடங்கியுள்ளன.
ஜூன் மூன்றாம் திகதி, தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94ஆவது பிறந்த நாள் மற்றும் அவர் தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்து, 60 வருடமாகிறது என்ற வைர விழாவை, சென்னையில் தடல்புடலாக கொண்டாடியிருந்தது தி.மு.க.
அந்த விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சுதாகர் ராவ், மார்க்ஸிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐயின் தேசியச் செயலாளர் டி. ராஜா, பிஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஓ பிரையன், ஜம்மு – காஷ்மிரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் சென்னையில் பங்ேகற்றிருந்தார்கள்.
தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பாராட்ட இந்த விழா என்றாலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர முயற்சி செய்கின்றன என்பதன் தொடக்கம், இந்த நிகழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாம். இதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் இதே எதிர்க்கட்சிகள் பேரணி நடக்கிறது.
பிறகு லாலு பிரசாத் யாதவ் தலைமையில் பீஹாரில் ஒரு பேரணி நடக்கப் போகிறது. இப்படி குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள், இப்போது மாட்டிறைச்சித் தடை விவகாரத்திலும் ஒன்று சேருகின்றன.
இதேவேகத்தில் போனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2019இல் வருவதற்குள், எதிர்கட்சிகள் மத்தியில் ஒரு வலுவான ஒற்றுமையை பா.ஜ.கவே உருவாக்கிவிடும் போலிருக்கிறது. அந்த வகையில்தான் மத்தியில் உள்ள பா.ஜ.கவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்பது பிரதமர் மோடி சென்ற தேர்தலில் முன் வைத்த, மிக முக்கிய முழக்கம். “பிரதமர் மட்டும் டீம் இந்தியா அல்ல; மாநில முதலமைச்சர்களும் டீம் இந்தியா” என்பது அவர் எடுத்து வைத்த,
உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள்.
ஆனால், மூன்றாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு விடயத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை மீறி, மத்திய அரசாங்கம் தன் மூக்கை நுழைத்திருக்கிறது. அதே போல் இப்போது, மாட்டிறைச்சி விவகாரம் மாநிலங்களின் அதிகாரத்துக்குட்பட்ட மாநிலப் பட்டியலில் (மாநிலம் சட்டம் இயற்றும் அதிகாரம்) இருந்தாலும், ‘விலங்குகள் வதை தடுப்பு’ என்ற பொதுப்பட்டியலில் (மத்திய அரசாங்கமும், மாநில அரசும் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள பட்டியல்) புகுந்து மாநில பட்டியலில் உள்ள அதிகாரத்தைப் பறித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை, கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் முன்வைத்திருந்தது.
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்துக் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தொன்று தொட்டு மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதன் செயல் தலைவர் ஸ்டாலின், கருத்துக்கூறி போராட்டமே நடத்தியிருக்கிறார்.
ஆகவே, மாநில அதிகாரத்துக்குட்பட்ட விடயங்களில் மத்திய அரசாங்கம் தன் அதிகாரத்தைச் செலுத்த முனைவதைக் ‘கூட்டுறவுடன் கூட்டாட்சி’ என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மாநில அரசாங்கங்களை, மத்திய அரசாங்கம் ஆட்டி வைக்கும் என்ற போக்கு, கடந்த 1989க்கும் பிறகு, செய்தியாக வெளிவரவில்லை.
ஏனென்றால், 1989 முதல் 2014 வரையிலான இந்திய அரசியலில் மாநிலக் கட்சிகளின் தயவில்தான், மத்தியில் தேசிய முன்னணியோ, (பிரதமர் வி.பி.சிங்) ஐக்கிய முன்னணியோ, (பிரதமர்கள் தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால்) தேசிய ஜனநாயக கூட்டணியோ, (பிரதமர் வாஜ்பாய்) ஐக்கிய முற்போக்குக் கூட்டணியோ (பிரதமர் ெடாக்டர் மன்மோகன் சிங்) ஆட்சி செய்து வந்தன.
ஆனால், 2014 தேர்தலுக்குப் பிறகு, அந்தநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இன்றைக்கு மக்களவையில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கிறது. மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு, பிரதமர் மோடிக்கு, வேறு மாநில கட்சிகளின் ஆதரவு தேவையில்லை.
அதாவது, சுருங்கச் சொன்னால் பிரதமராக நரேந்திர மோடி நீடிக்க மாநிலக் கட்சிகளின் ஆதரவு இன்றைய நிலையில் தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்த அரசியல் மாற்றம் தற்போது மீண்டும் மாநில அதிகாரங்களில், மத்திய அரசாங்கம் ஈடுபடும் சூழலை உருவாக்கியிருக்கிறது.
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்’ பரீட்சையும் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு மாடுகளை வெட்டுவதில் புதிய விதிகளும் இந்த அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. இதனால்தான் மீண்டும் சில கட்சிகள், மாநில அதிகாரம், மாநில சுயாட்சி போன்ற கோஷங்களை முன் வைக்கத் தொடங்கியுள்ளன.
இதுவும் ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்தியிருக்கிறோம் என்று கூறும் பா.ஜ.கவின் மூன்றாண்டு சாதனைக்குத் தேவையில்லாத பிரச்சினைகள். தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, ஒரிஸா, உத்தரபிரதேசம், பீஹார், பஞ்சாப், காஷ்மீர் போன்ற மாநிலங்களில், மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு இன்னும் குறைந்து விடவில்லை.
இந்த மாநிலக் கட்சிகள் எல்லாம் அடுத்து வரும் 2019இல் நாடாளுமன்றத் தேர்தலில், கனிசமான இடங்களில் வெற்றி பெரும் சூழல் எழுந்தால், அது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.கவுக்கே ஆட்சியமைக்கும் சிக்கலை உருவாக்கும்.
ஒரு காலத்தில் காங்கிரஸுக்கு எதிராக, ‘பெடரல் பிரன்ட்’ என்று மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தன. தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றெல்லாம், காங்கிரஸுக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்தித்தன.
அந்த நிலை, இன்றைக்கு மூன்றாண்டு கால பா.ஜ.க ஆட்சியில், மத்திய அரசாங்கத்துக்கே அதிகாரம் உண்டு என்ற நினைப்பில் செயல்படுவதால் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிராக, மாநிலக் கட்சிகள் முன்பு போல் ஓர் அணியை உருவாக்க முயலலாம்.
அதற்கான களம், தென்னகத்தில், குறிப்பாக தமிழகத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் அைமக்கப்பட்டிருக்கின்றது. என்பதே இன்றைய யதார்த்த சூழ்நிலையாக அமைந்திருக்கிறது.