(கருணாகரன்)
2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி நம்பினாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாரில்லை. ஏற்றுக்கொள்ளத்தான் வேணும் என்று உள்மனது சொன்னாலும் அதை நடைமுறையில் எப்படி ஏற்றுக்கொள்வது என்ற சிக்கல்கள் இருந்தன. இருக்காதே பின்னே, அவ்வளவு பெரிய இயக்கம். நாற்பதாண்டு காலப் போராட்டம். ஏராளம் படையணிகள். உலகமெங்கும் விரிந்த கட்டமைப்பு. வேண்டிய அளவுக்கு நவீன ஆயுதங்கள். போதாதென்று உயிரையே ஆயுதமாக்கிக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள். அனுபவம் வாய்ந்த தளபதிகள். ஏறக்குறைய ஒரு நிழல் அரசு என்ற நிலையில் ஆட்சியும் அதற்கான நிலமும் அதிகாரமும். உள்நாட்டிலும் சர்வதேசப் பரப்பிலும் பெருகிய தமிழாதரவுத்தளம். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படிப் புலிகள் இல்லாத ஒரு சூழல் வரும்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அவர்கள் இந்த முக்கிய பிரமுகர் சென்னதைக் கேட்டு நகைத்தனர். அப்படிச் சொன்னவரை எண்ணி உள்ளே சிரித்தனர். உலகமே புலிகளைப் பற்றி, அவர்களுடைய வீரதீரச் செயல்களைப்பற்றிச் சரியாக மதிப்பிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது இவர் என்ன புதுக்கணக்குச் சொல்கிறார். புதுசாகக் கதை விடுகிறார்கள் என்று எண்ணினார்கள்.