வாய்ப் பேச்சு பேசும் வீரர்கள் அல்ல சூரர்களாம்

இவ்வாறான நிலையில், பாராளுமன்றத்திற்கு இவர்களை  அனுப்பி வைக்கும் வாக்காளர்களான  மக்கள் ‘வாக்கு’ எனும் தமது ஆயுதத்தை பயன்படுத்தும் போது, பாராளுமன்றம்  தொடர்பிலும் அங்கு தம்மால் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட எம்.பிக்கள் தமது மக்களுக்காக செயற்பட்ட விதம் தொடர்பிலும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற கட்சிகளுடன் அல்லது அரசுடன் சேர்ந்து தமது மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும்.

தம்மை மக்கள் ஏன் பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்பதை உணர்ந்தும், வாக்களித்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கும் மக்கள் தமக்குக் கொடுத்த உயர்நிலை வாழ்க்கைக்குப் பிரதி உபகாரமாகவேனும் அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையாவது பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கு ஊடாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். 

இலங்கைப் பாராளுமன்றத்திலுள்ள  225 எம்.பிக்களில் 196 எம்.பிக்கள்   22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 எம்.பிக்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர்.

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 15 சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் கட்சிகளைப் பிரதி நிதித்துவப்படுத்தி 176 சிங்கள  எம்.பிக்களும்  21 முஸ்லிம் எம்.பிக்களும்  19 தமிழ் எம்.பிக்களும்  9  மலையக தமிழ்  எம்.பிக்களுமாக  225 எம்.பிக்கள்  உள்ளனர்.

இவர்கள்  தமது மக்களுக்காகக் கடந்த பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் manthri.lk என்ற பிரபல இணையத்தளம் ஆய்வொன்றை நடத்தியது. இதில் 
எம்.பிக்களாக இருக்கும்போதே காலமானவர்கள், பதவி விலகியவர்கள், அவர்களுக்குப் பதிலாகப் பதவியேற்றுக் கொண்டவர்களும் கணக்கில் எடுக்கப்பட்டதால்  மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 238 வரையுள்ளது.

பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், எம்.பிக்கள், தம்மைத் தெரிவு செய்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை, நியாயங்களைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வசதி வாய்ப்புகள் பல இருக்கின்றன.

பாராளுமன்ற அமர்வுகளின் போது, மனுக்கள் சமர்ப்பணம்  அல்லது வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் அல்லது சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை, தனி உறுப்பினர் பிரேரணை அல்லது  27/2 இன் அடிப்படையில் முன்வைக்கப்படும் விசேட கூற்று அல்லது பிரதமரிடத்திலான நேரடிக் கேள்வி நேரம், விவாதங்களில் பங்கேற்றல் என தமது   மக்களின் பிரச்சினைகளைச் சபையின் கவனத்திற்கு  கொண்டுவரப் பல வாய்ப்புகள் உள்ளன.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் பாராளுமன்றத்திற்கு அவ்வாறான நிர்வாக ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நபர் தொடர்பான மனுக்களைச் சமர்ப்பிக்க முடியும்.

அவ்வாறு மனுவைச் சமர்ப்பிக்கும் போது, அந்த மனு பரிசீலனைக்காக பொது மனுக்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுக் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வுகள் அல்லது அதற்கான பதில்கள் அதனுடன், தொடர்புபட்ட அமைச்சரினால்  பெற்றுக்கொடுக்கப்படும்.

அதேபோன்று, வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களிடம் தமது மக்களின் பிரச்சினை அல்லது தமது பிரதேசத்தின் பிரச்சினை அல்லது தமது மாவட்ட,  மாகாணத்தின் பிரச்சினை அல்லது ஏதாவது ஒரு விடயம் தொடர்பில்  ஒரு எம்.பி. பாராளுமன்றம் கூடும் நாட்களில் ஒரு நாளில்  இரண்டு  வினாக்களை எழுப்ப முடியும்.

இவ்வாறான வினாக்களுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சரோ, இராஜாங்க  அமைச்சரோ பிரதி அமைச்சரோ கண்டிப்பாகப் பதில் வழங்க வேண்டும். சில வேளைகளில், கால அவகாசம் கோரினாலும் அக்கேள்விக்கு அவர்கள் பதிலளித்தே ஆகவேண்டும்.

பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட கேள்வியாக இருந்தால் மட்டும் சில வேளைகளில் பதில் வழங்கப்படமாட்டாது.

தனிநபர் பிரேரணையும் இதுபோன்ற இவற்றைவிட,  கட்சித் தலைவர் ஒருவரினால் 27/2 இன் அடிப்படையில் முன்வைக்கப்படும் விசேட கூற்று மிகமுக்கியமானது. பொதுமக்களின், நாட்டின் முக்கியம் கருதிய விடயங்கள் தொடர்பில் சபையில் கவனத்திற்குக் கொண்டுவந்து அது தொடர்பான பதிலையும், தீர்வையும் இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

இவற்றையும்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்  பாராளுமன்ற  அமர்வுகளுக்கு சமூகமளித்த நாட்களையும் அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராக   இருக்கும் பட்சத்தில் அவர் எம்.பிக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், கேள்விகள்  தொடர்பில் செயற்பட்ட விதம் என்பனவற்றைக் கவனத்தில் எடுத்தே இந்த  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறான இந்த ஆய்வின் முடிவில் மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய 9 தமிழ்  எம்.பிக்களின் மக்களுக்கான செயற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் கணக்கில் எடுக்கப்பட்ட 238 எம்.பிக்களில் மலையக தமிழ் மக்களுக்காக அதிகமாகக் குரல் கொடுத்துச் செயற்பட்ட ஒருவராக  வேலுகுமார் 54ஆவது இடத்தைப்பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்ததாக மலையக மக்கள் முன்னணித் தலைவரான இராதாகிருஷ்ணன் 68ஆவது இடத்திலும் உதயகுமார் 82ஆவது இடத்திலும் வடிவேல் சுரேஷ் 93ஆவது இடத்திலும் இலங்கைத் தொழிலாளர்  காங்கிரஸ் பொதுச்செயலரான ஜீவன் தொண்டமான 111ஆவது இடத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரான மனோகணேசன் 141ஆவது இடத்திலும் அரவிந்தகுமார் 175ஆவது இடத்திலும் ராமேஸ்வரன் 184ஆவது இடத்திலும்  தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரான திகாம்பரம் 226ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதற்கு அடுத்ததாக  முஸ்லிம் எம்.பிக்களை எடுத்துக்கொண்டால், பாராளுமன்றத்தில் அதிக செயற்பாடுகளை வெளிப்படுத்தியவராக அலிசப்ரி 24ஆவது இடத்தைப்பெற்று முதலிடத்தில் உள்ளார் அவருக்கு அடுத்ததாக மரிக்கார்  28ஆவது இடத்திலும் முஷாரப்  34ஆவது இடத்திலும் முஜிபுர் ரஹ்மான்  37ஆவது இடத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான  ரவூப் ஹக்கீம் 43ஆவது இடத்திலும் கபீர் ஹாசிம் 53ஆவது இடத்திலும் இம்ரான் மஹ்ரூப் 72ஆவது இடத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான ரிஷாத் பதியுதீன் 83ஆவது இடத்திலும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்  85ஆவது இடத்திலும்  இஷாக்  ரஹ்மான் 89ஆவது இடத்திலும் முஷம்மில்  92ஆவது இடத்திலும் தேசிய காங்கிரஸ் தலைவரான அதாவுல்லா 134ஆவது இடத்திலும் நசீர் அஹமட் 153ஆவது இடத்திலும் மஸ்தான் 168ஆவது இடத்திலும் ஹரிஸ் 176ஆவது இடத்திலும்  பைசல் ஹாசிம் 196ஆவது இடத்திலும் தௌபீக் 208ஆவது இடத்திலும் அப்துல் ஹலீம் 210 ஆவது இடத்திலும் அலிஸாகிர் மௌலானா 222ஆவது இடத்திலும் அலிசப்ரி ரஹீம் 225ஆவது இடத்திலும் மர்ஜான் பளீல் 231ஆவது இடத்திலும் பௌசி 232ஆவது 
இடத்திலும் உள்ளனர்.

இதற்கு அடுத்ததாகத் தமிழ்  எம்.பிக்களை எடுத்துக்கொண்டால் பாராளுமன்றத்தில் அதிக செயற்பாடுகளை வெளிப்படுத்தியவராக சிறிதரன்  12ஆவது இடத்தைப்பெற்று தமிழ், முஸ்லிம், மலையக எம்.பிக்களிடையில்  முதலிடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்ததாகச் சாணக்கியன்   19ஆவது இடத்திலும், சார்ள்ஸ் நிர்மலநாதன்   26ஆவது இடத்திலும், கஜேந்திரன்  35ஆவது இடத்திலும், தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 62ஆவது இடத்திலும், சுமந்திரன் 64ஆவது இடத்திலும், 
சுரேன் ராகவன் 81ஆவது இடத்திலும், ஈ.பி.டி.பி தலைவரான டக்ளஸ் தேவானந்தா 86ஆவது இடத்திலும், ரெலோ இயக்கத்தலைவரான செல்வம் அடைக்கலநாதன் 105ஆவது இடத்திலும்,  கருணாகரம் 109ஆவது இடத்திலும், கலையரசன் 126ஆவது இடத்திலும், வினோநோகராதலிங்கம் 150ஆவது இடத்திலும், வியாழேந்திரன்  161ஆவது இடத்திலும், தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரான  சந்திரகாந்தன் 162ஆவது இடத்திலும், புளொட் தலைவரான சித்தார்த்தன் 170ஆவது இடத்திலும், திலீபன் 188ஆவது இடத்திலும், தமிழ் மக்கள் கூட்டணி தலைவரான விக்னேஸ்வரன் 197ஆவது இடத்திலும், அங்கயன் இராமநாதன் 215ஆவது இடத்திலும், குகதாசன் 238ஆவது இடத்திலும் உள்ளனர்.

வெறுமனே வந்து பாராளுமன்ற   கதிரைகளைச் சூடாக்கிவிட்டு,  விவாதங்களில் வீர முழக்கமிட்டு  பேசிவிட்டு, சலுகைகளை அனுபவித்து விட்டுச் சென்றால் மட்டும் போதாது. 

தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க பாராளுமன்றத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்குரிய சிறப்புரிமைகள், வசதிகள் தொடர்பில் மக்களுக்கு இதுவரை தெரியவராததாலேயே இவர்களில் பலரும் மீண்டும் மீண்டும்  எம்.பிக்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆய்வின் முடிவைப் பல எம்.பிக்கள்  நிராகரிக்கலாம்.

நாம் பாராளுமன்றத்திற்கு  சென்று வாய்ப் பேச்சு பேசும்  வீரர்கள் அல்ல. மக்களுக்கான சேவைகளைச்  செயலில் காட்டும் சூரர்கள் என தம்மை நியாயப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இவர்களினால் தமது  பிரதேசங்களில்   என்ன அபிவிருத்திகள் நடந்துள்ளன.

தமது பிரச்சினைகளுக்கு என்ன தீர்வுகள் கிடைத்துள்ளன என்பது மக்களுக்கு நன்கு தெரியும் என்பதனால், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தமது வாக்குகளைக் கடந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய எம்.பிக்களின்  மக்களுக்கான செயற்பாடுகளை நன்கு ஆராய்ந்தே பயன்படுத்துவார்கள்  என்று நம்பலாம்.