தேசிய அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பில் மாபெரும் மக்கள் எதிர்ப்பு கூட்டமொன்றை நடத்துவதற்கு பொது எதிரணி எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியினர் தீர்மானித்துள்ளனர். நல்லாட்சி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அரசுக்கு எதிரான சக்திகளின் செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி சில அமைப்புகள் இணைந்து கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளன. இதில் ஐக்கிய தேசியக் கட்சியும் பங்கேற்கவுள்ளது. இந்தக் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே 17ஆம் திகதி கூட்டத்தை மஹிந்த அணி ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மேற்படி கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்தார். “விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்துக்கு நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு ஆப்படித்துள்ளது. அரச ஊழியர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். பொருளாதாரமும் வீழ்ச்சிகண்டுள்ளது. எனவே, இவை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி அரசை விரட்டியடிப்பதற்காதே கூட்டத்தின் நோக்கம்” என்றும் அவர் கூறினார்.