தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை,உடுப்பிட்டி என்று முன்னேறியபடி அல்வாய் மேற்கு,அல்வாய் வடக்கை நெருங்கிகொண்டிருந்தது. கடற்படையும் வான்படையும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இராணுவம் விரைவாக முன்னேறிக்கொண்டிருந்தது. 1986 இறுதியோடு மாற்று இயக்கங்களை புலிகள் தடைசெய்ததின் பலாபலன்களை மக்களும் புலிகளும் அனுபவிக்கத் தொடங்கிய காலம் எனவும் குறிப்பிடுவதில் தவறில்லை.
எமது கிராமமான அல்வாய் வடக்கிலும் சரமாரியாக செல்வீச்சில் குண்டுகள் வந்து வீழ்ந்துகொண்டிருந்தது. பலர் மோசமாக காயப்பட்டனர். சிலரை நாமும் மந்திகை வைத்தியசாலைக்கு அருளைய்யாவின் காரில் கொண்டு சென்று விட்டிருந்தோம். அதில் எமது வீட்டின் எதிர்பக்கத்தில் வசித்துவந்த எனது சித்தப்பாவான இராசலிங்கம் என்பவரும் அடங்குவார்.
அவரை மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு சென்றோம். பின்னர் அவர் அங்கு இறந்துபோனார். 29.05.1987 அன்று எமதுகிராமத்தை நோக்கி செல்வீச்சுகள் அதிகமானதால் எமது கிராமத்தவர் அனேகமானோர் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சரணடைந்திருந்தனர். அன்று இரவு நான் எனது நண்பர்களுடன்அம்மன் கோவிலில் அடைக்கலமானோம். எனது தம்பி அச்சுதனும் தனது வயதுடைய நண்பர்களுடன் அம்மன் கோவிலின் உட்பகுதியில் தஞ்சமடைந்திருந்திருக்கிறார் என்பது அப்போது எனக்கு தெருந்திருக்கவில்லை. நான் கோவில் வெளிப்பகுதியில் எனது நண்பர்களுடன் இருந்துகொண்டேன்.
எனது தாயாரும் கோவிலிலேயே இருந்தார். எமது தந்தை ஆழியவளையில் வைத்தியராக பணிபுரிந்துகொண்டிருந்ததால் அவர் எம்முடன் இருக்கவில்லை. இரவு கோவிலை நோக்கி செல்கள் சரமாரியாக விழுந்துகொண்டிருந்தன. கோவில் மண்டபத்திற்குள்ளும் செல்கள் வீழ்ந்தன. உள்ளிருந்து அவலக்குரல்கள் கேட்டன. மக்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடியவண்ணமிருந்தனர். நானும் எனது நண்பர்களும் எமது கிராமத்தை நோக்கிச்சென்றோம். அங்கிருந்த பங்கருக்குள் பதுங்கிகொண்டிருந்தோம். சில மணி நேரத்தின் பின் எனது தம்பியும் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாவும் கூட இருப்பதாகவும் எமது உறவினர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
எனது தம்பிக்கு சிறிய காயமென்றும் தேறிவருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். ஆயினும் எனது மனம் அமைதியற்றே இருந்தது. நான் நேரில் சென்று பார்க்க முடியாத அவல நிலை அன்று.. 31.05.1987 அன்று காலை எனது தம்பி அச்சுதனின் மரண செய்தியுடன் விடிந்தது.மிகவும் துரமான பொழுதாகியது. மந்திகை வைத்தியசாலையிலிருந்து எனது தம்பியின் உடலை மாட்டு வண்டியில் பல சிரமங்களுடன் உறவினர்கள் கொண்டுவந்தனர். எனது அம்மாவும் அழுதபடி வந்த காட்சி கண்களுக்குள்.
அதன்பின் அவசர அவசர அவசரமாக சிறியளவான மரண சடங்குகளோடு எனது தம்பியின் உடல் எரியூட்டாமல் மாறாக புதைக்கப்பட்டது. எமது வாழ்வில் ஏற்பட்ட நாம் அனுபவித்த பெரும் துயரம். எனக்கென்றிருந்த ஒரேயொரு சொந்த சகோதரன் அவன். இதில் மிகப்பெரிய துயரனமானது எனது தந்தை ஆழியவளையில் இருந்ததனால் எனது தம்பி அச்சுதன் இறந்த செய்தியை தாமதமாகவே அறிந்திருந்தார். அந்தவேளையும் கூட இறந்தது எனது தம்பியா அல்லது நானா என்பதும் அவருக்கு உறுதிப்படுத்தப்படாமலேயேசெய்தி அவரை சென்றடந்திருக்கிறது.
அந்தவேளை ஒரு தந்தையின் வேதனை எப்படியிருக்கு மென்பதை கற்பனைசெய்து பார்க்கவே துயரமாக இருக்கிறது. அவர் ஒரு நாள் தாமதித்து வந்த பொழுது தம்பியின் உடைகளும் கட்டிய வாச்சும் அவரின் பார்வைக்காக இருந்தன.எனது தம்பி அச்சுதன் எமது கிராம பாடசாலையான அல்வாய் சிறிலங்கா வித்தியாசாலையில் ஆரம்ப கல்வியையும் பின்னர் ஹாட்லி கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார். அந்த காலப்பகுதியில் விடுதலை அமப்புகளின் தீவிர செயற்பாடுகளில் உந்தப்பட்டு, நான் இயங்கிகிக் கொண்டிருந்த விடுதலை அமைப்பான EPRLF இல் மாணவர் அமைப்பில் தன்னையும் ஈடுபடுத்தி தடைசெய்யப்படும் வரை செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
எனது பாடசாலை காலங்களில் நான் எனது அம்மம்மாவுடனும் அம்மாவின் சகோதரர்களுடனும் கொழும்புத்துறையில் இருந்ததனால் எனது தம்பியின் சிறு பராயத்தில் அவனுடன் இணைந்து வாழும் வாய்ப்பை இழந்தது இன்றுவரை துயரமானதே. நாம் இணைந்து ஒரு போட்டோ கூட எடுத்ததில்லை.எனது தம்பி ஒரு நல்ல கவிஞனாக பரிணமிக்கவேண்டியவன். வர்க்கரீதியான சிந்தனை அவனது சில கவிதைகளில் நான் காணக்கூடியதாக இருந்தது.
தோழமையும் மனிதநேயமும் நிறைந்திருந்தான். அவனது இறுதி காலப்பகுயில் என்னுடன் மிக நெருக்கமாகியிருந்தான். தனது அன்பை பரிமாறுபவனாக எப்போழுதும் இருந்துகொண்டான். அதேபோல அன்று நான் திருமணமாகு முன்பே இன்று எனது மனைவியான பத்மபிரபாவுடனும் தனது அன்பை பாராட்ட தவறுவதில்லை. அவன் எம்மிடம் இல்லையே என்பது இன்றுவரை நினைவுகள் வரும்போதெல்லாம் துயரமானதாகவே இருக்கும்.
எமது பிள்ளைகளுக்கு நல்லதொரு சித்தப்பா இல்லாமல் போய்விட்டது. எமக்கு இருந்திருக்கவேண்டிய ஒரு அன்புக்கரம் இல்லையே என்பது எப்பொழுதும் வருத்தமானதே.அந்த நாட்களில் எமது கிராமத்தில் பல தொடர் மரணங்கள். குறிப்பாக எங்கள் நெருங்கிய உறவினர் திரு.அருளானந்தம் அவர்களும் அவரது மகன் சுதாகரனும் கொலை செய்யப்பட்டதும் எமது எதிர்வீட்டு சித்தப்பா இராசலிங்கம் அவர்கள் செல்வீச்சில் படுகாயமடைந்து மரணித்த சம்பவங்கள் தொடர்ந்து துரத்தும் துயரங்களே. அவர்களையும் மற்றும் அந்த நாட்களில் அவலமாக மரணித்த அனைவர்க்கும் எமது நினைவு அஞ்சலிகள்.!!!!எனது தம்பி அச்சுதனின் நினைவுகளோடு நானும் எம் குடும்பமும்.