ஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார். ( சுலோகம் – ஆச்சரியம் )
( சஹாப்தீன் நானா )
நமது சிறிலங்காவில் யாருக்குமே, சாதாரண பொதுமக்கள் யாருக்குமே எதுவுமே புரியல.
புரிந்தாலும், அதை விரிவாக புரிஞ்சிக்க முடியல.
அரசியலும், அரசியல் வாதிகளும் என்ற வர்ணப்படம் இன்று சிறிலங்காவையும் தாண்டி
உலகம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கின்றது.
யார் நல்லவர் என்பதுதான் இந்தப்படத்தின் பெயர்.
நமது நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும் மிக மிக நல்லவர்கள் என்பதில்
மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
இவர்கள் பிறக்கும்போது, தாய் தந்தையர்களால் வளர்க்கப்படும்போது, அரசியலில்
கால் வைக்கும்போது அனைவரும் மிக நல்லவர்களே.
அன்புடையீர் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள்; மேல்படி தேர்தல் தொகுதியில்
வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றீர்கள் என்று, பாராளுமன்றத்தில் இருந்து
அரச இலட்சினை தாங்கிய ஒரு கடிதம் வரும், வந்ததும்.
நம்மாளுக்கு முதல் கிளு கிளுப்பு வரும்.
அப்புறம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு நேர் பின்னே “மாதிவெல” இல் அமைந்துள்ள
கட்டிடத்தில் உங்களுக்கு ஒரு வீட்டு தொகுதி சகல செளபாக்கியங்களுடனும், அத்துடன்
ஒரு சமையல் ஆள்,ஒரு உதவியாள் , இரண்டு அரச பாது காப்பு உத்தியோகத்தர்கள் என
இன்னொரு மடலும் அல்லது அவசர ஈமெயிலும் வரும்.
அந்த கிளு கிளுப்பு இப்போது, மத மதப்பாக மாறும்.இந்த மத மதப்பு மாற முதல்,
இலவச எரிபொருள், ஐந்து வருடத்துக்கு சொகுசாக ஓடுவதற்கு வாகனம்,
அதற்கு ஒரு சாரதி என்று இன்னொரு மடலும் அந்த வாகனத்தை இறக்குமதி செய்ய
“கோட்டா”வும் பல்லை இளித்து கொண்டு வந்து நிற்கும்.
சிறிலங்காவில் ஏதோ ஒரு கிராமத்தில்; அல்லது நகரத்தில்; அன்பான தாய் தந்தை,
அருமையான அயலவர்கள், துடிப்பான ஆசிரியர்கள், சுகமான நண்பர்கள் என
வாழ்ந்த இவருக்கு,
குறிஞ்சி, முல்லை, மருதம்,பாலை,நெய்தல் எதுவுமே இப்போது கண்ணுக்கு தெரியாது,
இது வேறு நிலம், ஆறாவது நிலம். பணமும் பணம் சார்ந்த இடமும்.மதுவும் மது சார்ந்த இடமும்,
வரட்டு கெளரவமும். வங்குரோத்து தனமும் சார்ந்த இடமும். என்றும் சொல்லலாம்.
நான் வேற, நான் வேற ஆள், என்னுடைய தகுதியே வேற,என்னை யாருமே கட்டுபடுத்த முடியாது
என்ற ஒரு வைரஸ் உடம்புக்குள் ஏறி சாஸ்டாங்கமாக உட்கார்ந்து கொள்ளும்.
கொழும்பு புறப்படுவார்.
கொழும்பில் இரண்டு குரூப் இப்போது இவரை வரவேற்க காத்திருக்கும்.
ஒன்று
கொழும்பில் வாழும் இவரது முன்னாள், இந்நாள் நண்பர்கள், உறவினர்கள்.
வாமச்சான் நம்ம வீட்டில தங்கலாம், நம்ம மச்சான் வீட்டில தங்கலாம்
என்று வெள்ளை கொடி காட்டுவார்கள்.
மற்றது நம்பர் டூ.
நண்பர்களின் நண்பர்கள். நிச்சயமாக இவர்கள் வியாபார மற்றும்
பிழைப்பை நோக்கமாக கொண்ட கொழும்பையும் – உலகையும்
உள்ளங்கைக்குள் வைத்துள்ள வெறி பிடித்த ஒரு கூட்டம்.
எதையும் செய்யும் என்னவும் செய்யும்.
பணத்தை நீராக கொட்டும், தேவையானால் தலைகளையும் தீர்த்தும் கட்டும்.
ஆனால் இது மிக, மிக சாந்தமான கூட்டமாகத்தான் வெளியே
காட்டிக் கொள்ளும்.
இதற்குள் அனைத்தும் அடங்கும், வெளிநாட்டு சக்திகள், வெளிநாட்டு உளவாளிகள்,
துறைமுகம், விமான நிலையம்,பாதுகாப்பின் அதி உச்ச அதிகாரிகளின் உள்வீட்டு
தொலைபேசி இலக்கங்கள் வரை சுண்டு விரல் நுனியில் இருக்கும். அந்த அளவுக்கு
செல்வாக்கனவர்களாக இருப்பார்கள்,இவர்களில் நிறைய பேர் படிக்காத மேதைகள்.
நம்ம ஆள்,
நமது தொகுதி பா.உ; நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் தங்கினாலும்,
எண்ணி ஒரு பத்து நாளில், நம்பர் டூக்களுடன் இணைந்து கொள்வார்.
அல்லது இணைக்கப்படுவார். அது அவருக்கே தெரியாது.
இவருக்குரிய அரச வாகனம் வரும் வரை, பாராளுமன்றத்துக்கு செல்ல
அதி உச்ச வாகனம், கலதாரி மெரிடியன் அல்லது சினமன் கார்டன் அல்லது
ஹில்டன் போன்ற ஹோட்டல்களில் ரூமும் சாப்பாடும் வழங்கப்படும்.
நம்மாளுக்கு உலகின் அதிஉச்சம் படமாக ஓடும்……. ஊரில்,கிராமத்தில்
இருமலுக்கு அசமதாகமும், சூடமும் ( கற்பூரம் ), நல்லெண்ணையும்
பாவித்தவர்.
ஹில்டன் ஹோட்டல் லாபியில் ஹாட் சவர் சூப் (Hot Sawer Soup )பும்,
பிராந்தியில் ஜின்ஜெறேலும் ( Gingerale) கலந்து குடித்து கொண்டிருப்பார்.
உடம்பில் ஒரு மிடுக்கு ஏறும், முன்னாள் நண்பன், இந்நாள் நண்பன், ஊரான், உறவினன்,
படிப்பித்த வாத்தியார் முதல் கண்டவன் நிண்டவன்,படித்தவன், பாமரன், வல்லான் ,
சுள்ளான் எல்லாருமே, சேர் போடுவார்கள்.
சேர் ……!!!!!!
சேர் ……………!!!!!!!!!!!!!!!!
சேர் ………………!!!!!!!!!!!!!!!!!!!!!
சேர் ………………………!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார்த்தை காதுகளை தாண்டி, செவிப்பறைகளையும், தொண்டை குழிகளையும் தாண்டி,
அடிவயிறை ஜில்லென்றாக்கி, நாடி நரம்புகள் அனைத்தையும் ஒரு உலுக்கு உலுக்கி
எடுக்கும்……..வாவ் ……..எவ்வளவு சுகம் …….என்ன கிளுகிளுப்பு….
இது; இந்த “சேர்” ( Sir) நாம் சாகும் வரை தேவைப்படும்.
இது நாம் ஆசிரியர்களுக்கும், படித்தவர்களுக்கும், மரியாதைக்குரியவர்களுக்கும் சொல்லும்
கம்பீரமான, அன்பான, நேர் கொண்ட பார்வையுடைய சேர் கிடையாது.
நாம்
கூனிக்குறுகி, நமது சகல கெளரவங்களையும் விட்டு கொடுத்து, ஏதோ ஒரு தேவைக்காக போடும் “சேர்”
இது இந்த சேர் ஒரு பா.உ க்கு சாகும் வரை தேவைப்படும்.
இதனால்தான் இன்று நமது நாட்டில் இவ்வளவு களேபரங்கள்
08–12–2018 ( தொடரும் )