அட்டைக்கத்தி நாயகர்கள்

(கருணாகரன்)

“எழுக தமிழ்“ என்றொரு யுகப் புரட்சி நடக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் இதற்கான தடல் புடலான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த எழுச்சியை எப்படியும் கலையாடக்கூடியமாதிரி ஆக்க வேணும் என்ற நோக்கில் அங்கங்கே எழுதிக் குவிக்கிறார்கள் பலரும். விண்தொடக்கூடியமாதிரியான சுலோகங்கள் தயார்ப்படுத்தப்படுகின்றன. மக்களை அலையாகக் கடலாக எழுச்சி கொள்ள வைப்பதற்கான பயிற்சிகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்த நிகழ்வைப்பற்றிய அறிவிப்புகளை ஒலிபெருக்கிகளில் ஊர்ஊராகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பொங்குதமிழுக்கு தம்பியாகவோ தங்கச்சியாகவோ இது இருக்கலாம். வரலாற்றுக்கும் இப்படிச் சங்கதிகள் எதாவது தேவையே. இல்லையென்றால், அது எதைத்தான் தன்னுடைய பக்கத்தில் எழுதுவது? சும்மா தன்னுடைய பக்கத்தை வெற்றிடமாக வைத்துக் கொள்ள முடியுமா? இந்த “எழுக தமிழ்“ எழுச்சியின்போது, தமிழ்ப்பகுதிகளில் பௌத்த விரிவாக்கம் தடுக்கப்படவேண்டும் என்ற முழக்கங்கள் செய்யப்படப்போவதாகத் தகவல். காணாமல் போனவர்களுக்கும் கொல்லப்பட்டவர்களுக்கும் நீதியும் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றும் கேட்கப்படவுள்ளது. சனங்களின் காணிகளிலிருந்து படையினர் வெளியேறி விட வேணும் எனும் கட்டளைகள் பிறப்பிக்கப்படப்போகின்றன. அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற உத்தரவுகளும் விடுக்கப்படவுள்ளன.

யுகப் புரட்சியென்றால் சும்மாவா!

இந்த “எழுக தமிழ்“ எழுச்சியோடு தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலை இலக்கை எட்டிவிடப்போகிறார்கள்!? இனியென்ன, கவலையே வேண்டாம். “எல்லாம் சுபம்“ என நல்லபடி நடந்து முடிந்து விடப்போகின்றன. ஆகவே, மக்களே! வீடுகளில் உறங்காதீர்கள். எழுந்து வீதிகளுக்கு வருக. யுகப்புரட்சியில் இணைக.

இப்படி நான் எழுதுவதைப் பார்ப்பவர்கள், இது ஏதோ நடக்கப்போகும் எழுச்சிக்கு எதிரானது என்று கருதத்தேவையில்லை. இந்த மாதிரியான எழுச்சிப்பேரணிகளின் விளைவு என்ன? இவை சாதித்தவை என்ன? சாதிக்கப்போவது என்ன? இதனால் யாருக்கு லாபம்? இதில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றவர்கள் யார்? கலந்து கொள்கின்றவர்கள் யாராக இருக்கும்? இந்தப் பேரணி எதற்காக நடக்கவுள்ளது? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டே இதை எழுதுகிறேன்.

பொதுவாகவே இந்தமாதிரி எழுச்சிகளையும் பேரணிகளையும் கண்டனக்கூட்டங்களையும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் கண்டுவிட்டன. அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூட கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி, கொட்டும் மழைக்குள்ளும் ஐந்து நாட்கள் நடை பவனி செய்திருந்தார். அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளின் பொதுக்கூட்டணி, பல கூட்டங்களை தென்னிலங்கையில் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன. இதைவிட, வரலாற்றிலும் ஏராளமான எதிர்ப்பு ஊர்வலங்களை அதிகார வர்க்கம் கண்டு விட்டது. அதிகாரத்தரப்புகளுக்கு எதிரணிகள் ஒன்றும் பொருட்டேயல்ல. கரும்புலிகளையும் உண்ணாவிரதிகளையும் கண்டே பயப்படாத, கல்லிதயம் படைத்த அரசுக்கு கருணைக்குரலும் கண்ணீர்க்கதறலும் கண்டனக் கோஸங்களும் ஒன்றும் செய்து விடாது. ஆயிரக்கணக்கான சனங்கள் கொல்லப்படுவதைக் கண்டும் கருணை கசியாத சர்வதேச சமூகத்துக்கு ஒரு நாள் பேரணியின் கூச்சல்கள் எந்த நரம்பையும் சுண்டி விடாது. இதைப்போல பல ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஈழத்தமிழர்களே சர்வதேச நகரங்களில் நடத்திக் களைத்து விட்டார்கள். கையெழுத்துப்போராட்டங்கள், தொடருந்துப் பயணங்கள் என எதையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தாயிற்று.

அதற்காக மக்கள் எழுச்சிகள் பயனற்றவை என்று இங்கே வாதிடவில்லை. அவை அடுத்த கட்ட மாதிரிகளை அடைய வேண்டும். தொடர்போராட்டங்களாகப் பரிணாமமடைய வேணும். அதில் மக்கள் மட்டும் பாடுகளைச் சுமப்பவர்களாக இல்லாமல், தலைவர்களும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கத் துணிய வேண்டும். அப்படி அடுத்த கட்டப் போராட்டத்துக்கான வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்வதே இந்தப்போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்களின் கடமையாகும். அதைச் செய்வதற்கு இந்தத் தலைவர்கள் தயாரா? அது காந்தி முன்னெடுத்த தொடர் போராட்டத்தைப்போன்றதாகும். மண்டேலா சந்தித்த வாழ்க்கையைப் போன்றதாகும். குறைந்த பட்சம் அரசியற் கைதிகளாக இன்னும் சிறைகளில் அடைபட்டிருப்போருக்கு நிகரானதாக இருக்க வேண்டும். அதாவது, கைது, சிறை, சித்திரவதை என்ற துன்பியல் நிகழ்ச்சிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு யார் தயார்?

நிச்சயமாக இந்தத் தலைவர்கள் இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை. எனவே, இது எதையும் சாதிக்கப்போவதில்லை. பதிலாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு நெருக்கடியைக் கொடுப்பதற்கே இப்போது எழுக தமிழ் முயற்சிக்கப்படுகிறது. அதிலும் சம்மந்தன் தரப்புக்கு ஒரு அழுத்த நெருக்கடியைக் கொடுப்பதற்காக. அரசாங்கத்துடன் வழுவழுத்துக் கொண்டிருக்கும் சம்மந்தனை வெளியரங்குக் கொண்டு வந்து அம்பலப்படுத்துவது, அதன் மூலமாக அவருக்கு நெருக்கடியைக் கொடுப்பது. இவை இரண்டுமே இதனுடைய நோக்கமாகும். இதை மறுவளமாகச் சொன்னால், அல்லது சரியாகச் சொன்னால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்தி விட்டுத் தன்னைப் பலப்படுத்தி் கொள்ள முற்படும் தமிழ் மக்கள் பேரவையின் நோக்கமாகும். ஆகவே, இது இரண்டு தரப்புகளுக்கிடையிலான கட்சிப்போட்டியே. இந்தக் கட்சிப்போட்டி சிரிப்புக்கிடமான ஒன்றே.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்களே, தமிழ் மக்கள் பேரவையிலும் இருக்கிறார்கள். இதைவிட ஒரு தொகுதியினர் இன்னும் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றனர். இதைத் தவிர, உன்னிப்பாகப் பார்த்தால் இரண்டும் ஒன்றே. ஒன்று மோதகம் என்றால், மற்றது கொழுக்கட்டை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிகாரத்துக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களாகிய நாம் ஒரு கணம் சிந்தித்துப்பார்த்தால் எல்லாக் கணக்குமே விளங்கி விடும். ஆகவே, இது அதிகார இழுபறிக்கான போட்டியின் விளைவான ஒரு நிகழ்ச்சி என்பது மிகத் தெளிவானது. ஆகவே, இதில் மக்களுக்கு நன்மை கிட்டும் என்பதை விட, அவரவர் தமக்கான அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்வதற்காக சனங்களைக் கருவியாக்க முற்படும் ஒரு உத்தியாகும்.

நிச்சயமாக இந்தத் தலைவர்கள் இந்த “ஒரு நாள் பேரணி“ முடிந்த கையோடு வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அல்லது தங்கியிருக்கும் உயர் ரக விடுதிகளில் போய் இளைப்பாறிக் கொள்வார்கள். அதேவேளை இதில் கலந்து கொள்வது, பெரும்பாலும் கிராமங்களிலுள்ள சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டவர்களுமே. அவர்களுக்கு இவற்றினால் எந்தத்தீர்வும் நன்மையும் கிட்டிவிடப்போவதில்லை. இதற்கு வெளியே இளைஞர்களில் ஒரு தொகுதியினரும் “தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள்“ எனப்படுவோரில் ஒரு தொகுதியினரும் கலந்து கொள்வர்.

உண்மையில் இந்தப் பேரணி குறிப்பிடும் அரசியற்கைதிகளின் விடுதலை, போர்க்குற்ற விசாரணை, அரசியற்தீர்வு, காணி விடுவிப்பு, படைக்குறைப்பு, சிங்கள மயமாக்கல், தமிழ்ப்பிரதேசங்களில் பௌத்த விஹாரைகளை அமைத்தல் போன்றவை எல்லாம் நியாயமான கோரிக்கைகளே. ஆனால், இந்தக் கோரிக்கைகளுக்கான வயது என்ன? இவற்றில் ஒன்றைக்கூட ஏன் தமிழ் அரசியலை முன்னெடுக்கும் புரட்சிகரச் சக்திகளால் தீர்வை நோக்கி முன்னெடுக்க முடியாமல் போனதேன்? இந்தச் சக்திகள் முன்னர் பாராளுமன்றப் பதவிகளை வகித்த காலத்திற் கூட இவர்களால் இந்தப் பிரச்சினைகளுக்கான அழுத்தங்களை, நடைமுறை வெற்றியை நோக்கிப் பிரயோகிக்க முடியவில்லையே. இந்தப் பேரணியில் அங்கம் வகிக்கின்ற சிலர் இன்னும் பாராளுமன்றப் பதவிகளை வகித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தை நினைத்தால், ஒன்றில் சிரிப்பு வரும். அல்லது வெறுப்பு வரும். 70 ஆண்டுகால அனுபவத்தில் அவர்கள் எதைக் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்திற்கூட அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. யுத்தத்திற்குப் பிந்திய ஏழு ஆண்டுகால நிலைமைகளில் கூட தமிழர்களுடைய சிந்திக்கும் முறையில், அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்னும் பழைய பஞ்சாங்கங்களோடுதான் தமிழ்த்தலைவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சொல்கூட மாறாத அதே சுலோகங்கள். ஒரு வரி கூட மாற்றமடையாத அதே கண்டனங்கள். நமத்துப்போன பழைய சலங்கை. சலித்துப்போன அதே தளர்ந்த ஆட்டம் எந்தப் புதுமையுமில்லாத அதே காட்சிகள். மொத்தத்தில் பழைய நாடகம்.

ஆனாலும் தலைவர்கள் இதில் சலிப்புமின்றி ஆடுகிறார்கள். அட்டைக்கத்திகளைப் புரட்சியின் வாளாகச் சுழற்றி வித்தை காட்டுகிறார்கள். அட்டகாசமாகக் கூச்சலிடுகிறார்கள். இவை எல்லாம் மாவோவின் நீண்ட பயணத்தைப்போலவோ, மண்டேலாவின் நீண்ட சிறைவாசத்தைப்போலவோ, காந்தியின் நீண்ட நடையைப்போலவே பல நாள் நிகழ்ச்சியாக நடப்பதல்ல. மணித்தியாலங்களுக்குள் முடிந்து விடும் வித்தையே இவை. இந்த வித்தைகளையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்கு இப்பொழுது சின்னப் பயல்களுக்கும் ஆர்வமில்லை. ஆனால், தலைவர்கள் தங்களை வீர்களாக, நாயகர்களாக, பெரும்பிம்பங்களாக, விக்கிரகங்களாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்களின் ஆலாய்ப்பறப்புகள் சிரிப்புக்கிடமானவை.

இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது, ஒரு நண்பர், யுவகிருஸ்ணா என்ற எழுத்தாளர் எழுதியிருந்த சுவாரசியமான பதிவொன்றை அனுப்பியிருந்தார்.

தமிழனுக்கு கலவரமே செய்யத் தெரியாது என்றுதான் தோன்றுகிறது. கர்நாடகா வங்கியை அடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏதோ ஷாப்பிங் காம்ப்ளக்ஸை அட்ரஸ் மாறி அடித்து நொறுக்கியிருக்கிறான். கடைசியில் அந்த காம்ப்ளக்ஸ் யாரோ பச்சைத்தமிழனுடையதாம்.

எல்லைப் பகுதிகளில் கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன் பஸ்ஸையெல்லாம் கொளுத்தலாம் என்று பெட்ரோல் பங்கில் காசு கொடுத்து பெட்ரோல் வாங்கிப் போயிருக்கிறான். ஆனால், அந்த ரெஜிஸ்ட்ரேஷனில் இருப்பவையும் தமிழனின் பேருந்துகளே என்று ஆம்னி பஸ் சங்கம் அறிவித்தபிறகு, வாங்கிய பெட்ரோலை டூவீலருக்கு ஊற்றிக்கொண்டு ‘இருமுகன்’ பார்க்க போய்விட்டான்.

கடந்த இருபதாண்டுகளில் இவன் நடத்திய உச்சபட்ச கலவரமே, ‘காவிரியை வெச்சிக்கோ. எங்கம்மாவை கொடுத்துடு’ காலத்தில் நடத்திய களேபர கலவரம்தான்.

மற்றபடி பேரணி, ஊர்வலம், உண்ணாவிரதம், மறியல், பந்த் என்று அறவழியில்தான் நவீனத் தமிழனின் சமகால கலவர வரலாறு பதிவாகிறது.

ஒருவேளை இதனால்தானோ என்னவோ உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் தமிழனை கூப்பிட்டு காரணமேயில்லாமல் கண்டவனும் நாலு அறை அறைந்து அனுப்புகிறான்.

அவ்வளவு ஏன்? கலவரம் செய்யக்கூடியவர்கள் என்று பொதுவான பிம்பம் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தலைவர்கள் யார் யாரென்று பாருங்களேன். ………………….. இவர்களையெல்லாம் நினைத்துப் பார்த்தால் கலவர உணர்வு வருமா, காமெடி உணர்வு வருமா?

நிலைமை இப்படியிருக்க, புரட்சிகரப் பட்டாசு வெடிக்க ஆளாளுக்கு அவதிப்படுவது சிரிப்பன்றி வேறென்ன? இதைப் பார்த்து அரசாங்கம் கலங்குமா? குலுங்கிச் சிரிக்குமா?

மிகப் பெரிய போராட்டத்தை நடத்திய மக்கள் இப்படி ஆகியிருக்கிறார்கள். உச்சமான தியாகங்களை உயிரைக் கொடுத்துச் செய்த சமூகம் சுருங்கிப்போய் அதிகாரங்களுக்காக நாடகப் போராட்டம் நடத்துகிறது. சர்வதேசத்தின் கவனத்தையும் அரசாங்கத்தின் கவனத்தையும் கோரும்வகையில் போராட்டத்தை நடத்தக்கூடிய தயார்ப்பு என்பது இவற்றுக்கு அப்பாலானது. அது முற்றிலும் வேறு விதமாக நடத்தப்பட வேண்டியது. அதில் தலைவர்களே முதற்பாடுகளைச் சுமக்க வேண்டியவர்கள்.

அதற்கெல்லாம் தயாரா சித்தப்பா!