(Amirthalingam Baheerathan)
திரு பொன்னுத்துரை சிவகுமாரன் தமிழரின் உரிமைப் போராட்டத்தில் நிரந்தரமாக நிலைத்துவிட்ட ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பெயர். ஆனால் ஜனநாயக போராட்டத்தை மதித்து அதன் பங்கையும் உணர்ந்து போராடப்புறப்பட்ட இளைஞனின் அடையாளம். உரும்பிராய் மண் பெற்றெடுத்த புனித ஆத்மாவின் பெயர்.
அன்றைய காலகட்டத்தில் தனித்தனி தீவுகளாக ஆயதம்போராட்ட இளைஞர்கள் செயல்பட்ட நேரம். மாணவர் பேரவையினரை அடையாளம் கண்டு காவல் துறையினர் கைது செய்து சிறைச்சாலைகளை நிரப்பிக்கொண்டிருந்த காலம்.
தன்னுடைய தனித் தன்மையினாலும், புன் சிரிப்பினாலும் பலரையும் கவர்ந்தவர் அண்ணன் சிவகுமாரன் அவர்கள்.
அவரை முதல் முதல் நான் சந்தித்தது 1972ல் கொக்குவில் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில். எனது தந்தையார் பேசி முடித்து விட்டு புறப்பட்ட போது கூட்டத்தின் பிற்பகுதியிலிருந்து விரைந்து வந்து “அண்ணன் நான் உங்களிடம் ஒரு விடயம் பேச வேண்டும் என கூறியபடியே எனது தந்தைக்கு அருகில் காரில் ஏறி அமர்ந்தார். வழக்கம் போலவே அன்றும் என் தந்தை தானே காரை ஓட்டி வந்திருந்தார். கார் கூட்ட இடத்தை தாண்டி ஒரு சிறிய ஒழுங்கையினூடாக சென்ற போது சட சடவென கற்கள் வந்து காரில் விழுந்தது. ஓடிக் கொண்டிருந்த காரின் கதவை திறந்து இறங்க முயற்சித்தவரை எனது தந்தை தடுத்து நிறுத்தினார். பிரதான சாலைக்கு கார் வந்த பின்னர் இப்படி நடக்கும் என தெரிந்து தான் எம்முடன் தான் வந்ததாக கூறினார். எனது தந்தையின் பாதுகாப்பிற்காக தான் அவர் வந்திருந்தார் என்பதை அப்போது தான் உணர்ந்தேன், எனது தந்தையிடம் அவர் வைத்திருந்த அன்பையும் பற்றையும் உணர்ந்தேன்.
பின்னர் பல தடவைகள் 1972க்கும் 1974 ற்கும் இடையிலே சந்தித்திருந்தேன். பல தமிழர் விடுதலை கூட்டணி உண்ணாவிரத போராட்டங்களில் பின்னணியில் வந்து நிற்பார். சமயத்தில் வந்திருந்து கலந்துரையாடுவார். என்னை அன்பாக தட்டிக்கொடுப்பதை மறக்க முடியாது.
அவரை கடைசியாக நான் கண்டது 4வது தமிழாராய்ச்சி மாநாட்டின் குழப்பத்தின் போது வீரசிங்கம் மண்டபத்தினுள் எமது மக்கள் பட்ட அவலத்தை பார்த்து உணர்ச்சி பிழம்பாக நின்ற போது தான். என்ன செய்வது என தெரியாது குமுறிய வண்ணம் நின்ற அவர் அந்த கொடுமையின் பின்னணியில் நின்ற அரச அடிவருடிகளையும் பொலிஸ் அதிகாரியையும் பழிவாங்க முடிவெடுத்து செயல்பட்டார். ஆனால் அவர் அதில் வெற்றி பெறவில்லை.
சுன்னாகம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டிருந்த போது அந்த இடத்திற்கு வந்த பொலிசாருடன் மோதி அந்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்த போதும் அந்த அதிகாரியின் கெஞ்சலை செவிமடுத்து அந்த அதிகாரியை தாக்கவில்லை. அவருடன் வந்த மற்ற மூவரும் தப்பியோட காலில் இருந்த காயத்தால் ஓட முடியாத நிலையில் மற்றவர்களை காட்டி கொடுக்க ஒரு சந்தர்ப்பம் நேரக் கூடாதென உடன் தான் வைத்திருந்த சயனைட்டை பருகினார். வீரியமில்லாத அந்த மருந்து அவர் உயிரை உடன் குடிக்கவில்லை.
இரவு 7 மணியளவில் யாழ் அஞ்சல் -தொலைபேசி அலுவலகத்திலிருந்து எனது தந்தையுடன் தொடர்பு கொள்ள ஒருவர் முயற்சித்தார். யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலே பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தொலை பேசி அழைப்பின் மூலம் விபரங்களை அறிந்த அந்த தொலை தொடர்பு உத்தியோகத்தர் அந்த செய்தியை எனது தந்தைக்கு உடனே தெரிவிக்க விரும்பினார். செய்தியை அறிந்த நான் எனது தாயாரின் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த எனது பெற்றோரை தேடிச் சென்றடைந்தேன். அன்று சிறுவனாக இருந்த நான் எனது தந்தையிடம் விம்மி அழுதபடியே அந்த சோக செய்தியை கூறியது இன்று போல உள்ளது. செய்தி கேட்டு பதறிய எனது தந்தை உடன் யாழ் அரசு மருத்துவ மனைக்கு உடன் சென்று மரணத் தறுவாயில் கூட கைகளுக்கு கட்டிலுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்த அந்த வீர மறவனை கண்டார் . உடன் பொலிசாரிடம் வாதாடி அவரது விலங்குகளை அகற்ற வைத்தார் எனது தந்தை. சிகிச்சை பலனளிக்காது தான் விரும்பிய படியே மரணத்தை தழுவினார் அண்ணன் சிவகுமாரன்.
ஒரு மனித நேயம் மிக்க அந்த வீரன் இப்படி இடையில் மரணத்தை தழுவி மறைந்து
இருக்காவிட்டால் எமது
போராட்டம் வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ.
அண்ணன் சிவகுமாரனின் வீரத்தை வணங்குவோம்.