ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணைகள் தொடர்பில், அண்மைக்காலமாக பொதுவெளியில் வெளியிடப்படுகின்ற கருத்துகள் அரசாங்கத்தைச் சினமூட்டி வருகிறது. இதன் பின்னணியில், ஞாயிற்றுக்கிழமை (18) நினைவேந்தல் நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, “ஈஸ்டர் தாக்குதல்களானது மதத் தீவிரவாதத்தாலோ, மதம் மீதுள்ள அதீத பற்றாலோ நடத்தப்பட்டதொன்றாக நாம் கருதவில்லை. மாறாக, சில அரசியல் சக்திகள், தமது அதிகாரத்தை நிலைநாட்டி, வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியாகவே கருதுகின்றோம்” என்று தெரிவித்திருந்தார்.
மறுநாள், தான் அவ்வாறு கருத்துப்படத் தெரிவிக்கவில்லை என்று மறுத்துரைத்தார். இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால அரசியல் வரலாற்றை, நன்கறிந்தவர்களுக்கு இவ்வாறு முன்கூறியவற்றை, பின்னர் மறுத்துரைப்பது புதிதல்ல என்பது புரியும்.
பெயரளவுக்காவது இலங்கை இன்னமும் ஜனநாயக நாடு என்பதை நாம் ஏற்றாக வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான குரல்களின் தன்மை, தொடர்ச்சியாக மாறிவந்திருக்கிறது.
1971ஆம் ஆண்டு முதல், இலங்கையில் அரசாங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிகளும் வன்முறைப் போராட்டங்களும் தொடராக இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலைமைகளில், ஏனைய மூன்றாமுலக நாடுகளில், நாடு எளிதாக சர்வாதிகார ஆட்சியை நோக்கித் தள்ளப்பட்டு விடுகிறது. இதன் சான்றுகளை, தென்னாசியாவிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் காணலாம்.
1965இல் இந்தோனேசியாவும் 1970களில் பிலிப்பைன்ஸ், கம்போடியா ஆகியனவும் சர்வாதிகார ஆட்சிக்குத் தாவின. 1958இலும் பின்னர் வேறு இரு தடவைகளிலும் பாகிஸ்தான் சர்வாதிகாரத்தைத் தழுவியது. 1970களின் நடுப்பகுதியில் பங்களாதேஷ் அப் பாதையைத் தேர்ந்தெடுத்தது. விதிவிலக்காக, இலங்கையும் இந்தியாவும் தமது ஜனநாயக நிறுவனங்களை, இன்னும் தக்கவைத்துள்ளன. ஆனால், அவை பெயரளவிலானவையே என்பதை, தற்போதைய இந்திய, இலங்கை நிலைவரங்கள் உணர்த்துகின்றன.
தீவிரமான உள்நாட்டு நெருக்கடிகளின் நடுவில், பாராளுமன்ற ஜனநாயக முறை தப்பிப்பிழைத்ததும், நாடு இராணுவத்தினதோ அலுவலர் ஆட்சியினதோ அவற்றின் கூட்டினதோ சர்வாதிகார ஆட்சிக்குள் அகப்படாது விலகியது, விதிவிலக்கான போக்குகளாகும்.
ஆனால், 1962ஆம் ஆண்டில் ஐ.தே.க ஆதரவான பொலிஸ்-இராணுவ அதிகாரிகளின் சதிப் புரட்சியின் தோல்விக்கு, பிந்திய நெருக்கடிகளின் போதும், மூன்று தசாப்த உள்நாட்டுப் போரின் போதும், இலங்கை ஒரு ஜனநாயக நாடாக நிலைத்துள்ளது. எனினும், இலங்கை அரசு, கடந்த அரை நூற்றாண்டில் பல முறை, சர்வாதிகாரப் போக்குகளுடன் இயங்கியிருக்கிறது. ஆனால், வியக்கத்தக்கவாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை, ஜனநாயகக் கட்டமைப்பைத் தக்கவைத்துள்ளது.
இது எப்படி இயலுமாயிற்று? அரசவிரோத வன்முறையும் கலகங்களும் அரசின் உறுதிநிலைக்கு அச்சுறுத்தலாக அமைந்த போதும், இலங்கை அரசு, ஜனநாயக நிறுவனக் கட்டமைப்புக்குள் இயங்கும் அரசாக நிலைத்துள்ளது. இந்த நிலை இனியும் தொடருமா என்ற கேள்வி இப்போது அடிக்கடி எழுகிறது.
சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் இரண்டு முரண்பட்ட அரசு வடிவங்கள் சகவாழ்வு நடத்தி வந்துள்ளன. பாராளுமன்ற அரசியல் என்ற அரசு வடிவமும், சர்வாதிகாரம் என்ற அரசு வடிவமும் கூடி வாழ்வதற்கான சமரசத்தை ஏற்படுத்தின.
பாராளுமன்ற ஜனநாயகம் ஒழிக்கப் படவேண்டும் என்று சர்வாதிகாரம் வற்புறுத்தவில்லை. மறுபுறம், பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரம் தேவையாயிருந்தது. எனவே, அந்தச் சகவாழ்வு சிக்கலற்றதாக இப்போது வரை இருந்து வந்திருக்கிறது.
முதலாளித்துவ ஜனநாயகமும் சர்வாதிகாரமும் அறவே முரண்பட்டவையல்ல. சர்வாதிகாரம் தனது சட்டரீதியான அங்கிகாரத்துக்கு ஜனநாயகத்தை நாடுகிறது. ஜனநாயகம் தனது இருப்புக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கவும் சர்வாதிகாரத்தைத் துணைக்கழைக்கிறது.
1970களின் இறுதிப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையும் 1990களில் இலங்கையைச் சூழ்ந்த உலகமயமாக்கலும் ஜனநாயக-சர்வாதிகார இணைவுக்கு உதவின. எனவே, இலங்கைச் சூழலில் இரண்டும் ஒன்றோடொன்று இணங்கி, நவகொலனித்துவ தாராளவாத ஜனநாயக வடிவத்தைப் பெற்றுள்ளன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், அரசாங்கத்தின் சர்வாதிகாரம் நோக்கிய நகர்வுகளை மக்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர். தேர்தல் ஜனநாயகத்தினூடு ஆட்சிமாற்றங்களை நிகழ்த்தி, மக்கள் இதைச் செய்திருப்பதை வரலாற்றில் காணலாம்.
அநியாயத்தையும் எதேச்சதிகாரத்தையும் எதிர்க்கும் பண்பு, இலங்கையர்களின் உள்ளார்ந்த இயல்புகளில் ஒன்றாக வெளிப்படுகிறது. இப்பண்பு, இன்றுவரை தேர்தல்களுக்கு அப்பாலான வழிகளில் வளர்க்கப்படவில்லை.
இது தேர்தல்களின் வழி, சர்வாதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளையும் தனக்குள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. ஹிட்லர் அவ்வாறுதான் பதவிக்கு வந்தார். இவ்விடத்தில், கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் ஒருவர், “ஹிட்லர் போல செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்” என்று தெரிவித்திருந்ததையும் நினைவுகூரல் தகும்.
இதற்கு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், தனது டுவிட்டரில் ‘மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளுக்கும் மனித துயரங்களுக்கும் காரணமாக விளங்கியவர் ஹிட்லர். அவர், அரசியல்வாதிகளுக்கான முன்னுதாரணம் இல்லை’ எனப் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், சகவாழ்வு நடத்திய ஜனநாயகமும் சர்வாதிகாரமும், இன்று பரஸ்பரம் நெருக்கடியில் உள்ளன. இந்த நெருக்கடி, இந்தச் சகவாழ்வை விரும்பியோ விரும்பாமலோ முடிவுக்குக் கொண்டுவரும் திசையை நோக்கி நகர்த்தக்கூடும். ஆட்சியின் பாசிசம் நோக்கிய நகர்வுகளே, இங்கு கவனிக்கப்பட வேண்டியவை.
தேசியவாதமும் இனவாதமும் மதவாதமும் பாசிசத்துக்கு என்றும் பயனுள்ள கருவிகளாகும். பெரும்பான்மைச் சமூகத்தின் மேலாதிக்கச் சிந்தனையை, பாசிசம் பயன்படுத்தினாலும் பாசிசம் என்பது, வெறுமனே அடையாளப் பகைமையைப் பற்றியதல்ல; அதற்குள் சுரண்டும் அதிகார வர்க்க நலன்கள் பொதிந்துள்ளன.
இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஐரோப்பிய மக்கள் பாசிசத்தை அறிந்து கொண்டனர். அதன் ஒரு வெளிப்பாடே, ஜேர்மன் தூதுவரின் கருத்து. தற்போதைய பாசிச நகர்வுகள், இலங்கைக்கு மட்டும் உரியனவல்ல. தென்னாசியாவுக்குப் பொதுவானவை.
மதம் சார்ந்த தேசியமும் தேச அடையாளமும் தேசப்பற்றும், அத்தேசிய அடையாளமற்ற சக சமூகத்தினரைப் பகையாகக் காட்டலும் தென்னாசிய பாசிசத்தின் தேவைகளாக உள்ளன. தென்னாசியாவில் எழுந்துள்ள இந்துத்துவ, இஸ்லாமிய, பௌத்த மதவாத அரசியல் சக்திகள் இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் பேரினவாத அரசியலை முன்னெடுக்கின்றன. தம் உடனடிச் சூழல்களில், இலக்குவைக்க வாய்ப்பான சிறுபான்மையினரை அவை வெளிப்படையாக இலக்கு வைக்கின்றன.
அவ்வகையில் இன்றைய பாசிசம், ஜனரஞ்சகமானதாக உள்ளது. இது ஆபத்தானது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பாசிசம் போலன்றி, நவீன பாசிசம், தனது வேலைத்திட்டத்தை அதிகாரத்திலுள்ள கட்சியாகவும் கூட்டரசாங்கத்தின் பங்காளியாகவும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வலுவான அழுத்தக் குழுவாகவும் செயற்படுத்துகிறது. இலங்கைக்கு இது சாலப் பொருந்தும்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணிகளை பலர் அடித்துள்ளார்கள். ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உள்ள கோளாறுகள் குறித்து, ஹரீன் பெர்ணான்டோவின் கருத்துகள், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவுக்கான எதிர்ப்புகள், அதற்கு அரசின் எதிர்வினைகள் என்பன சில அறிகுறிகள்.
ஜனாதிபதி தொலைபேசியில் மிரட்டினார் என்று முறையிடுகின்ற விஜயதாஸ, அரசாங்கத்தில் இருக்கிறார். இவரும் ஜனாதிபதியும், பெருந்தேசியவாத சிறுபான்மை வெறுப்பில் ஒரே பக்கத்தில் நிற்பவர்கள். நல்லாட்சியில் ஜனாதிபதி கோட்டாபயவின் கைதைத் தடுத்தவர் என்று, இன்றும் பலர் விஜயதாஸ மீது விரல் நீட்டுகிறார்கள். எனவே, தனது நல்லதொரு கூட்டாளியின் விமர்சனத்தையே ஏற்க, ஜனாதிபதி தயாராக இல்லையா என்ற வினா எழுவது இயல்பானது.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமானவர் என்று விமர்சிக்கப்படுவர். அதேவேளை, ஒரு பேராயராக, கர்தினாலாக அதிஉயர்ந்த மதிப்பார்ந்த பதவியில் இருப்பவர். தான் சொன்ன கருத்தைத் தானே மறுதலித்து, 24 மணித்தியாலங்களுக்குள் ‘அந்தர்பல்டி’ அடிக்க நேர்ந்திருக்கிறது. ஆண்டகைக்கும் அழைப்பு வந்ததோ?