அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பாடசாலைகள் வழங்கபட வேண்டும்; அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்களின் கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்

– மக்கள் ஆசிரியர் சங்கம்

அதிபர் சேவை தரம் IIIற்கு ஆட்சேர்க்க நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெற்ற அனைவருக்கும் பாடசாலைகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எனவே, அதனை உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்களை அரசாங்கம் அரசியல் நியமனம் என்ற வகையில் அடக்கி அவர்களின் இதுவரை கால பணியை கொச்சைப்படுத்துவதை தவிர்த்து, அவர்களின் நெறிமுறையான எதிர்பார்ப்புக்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். கஸ்ட பிரதேச பாடசாலைகள் இயங்குவதற்கும், குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களின் உள்ள பாடசாலைகள் யுத்த காலத்திலும் தொடர்ச்சியாக இயங்குவதற்கு காரணமாக அதிபர்களாக பதிற்கடமையாற்றிய ஆசிரியர்கள் இருந்துள்ளனர். அத்துடன் அவர்களில் பலர் 10 வருடங்களுக்கு அதிகமான காலம் பதிற்கடமையாற்றியுள்ளனர். எனவே, அவர்களின் சேவையை உணர்ந்து அவர்களுக்கு நியாயத்தை பெற்று கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று மக்கள் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

போட்டி பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்கள் எவ்வித அரசியல் தலையீடுமின்றி அதிபர் சேவையில் இணைக்கப்படல் வேண்டும் என்பதே எமது சங்கத்தின் நிலைப்பாடாகும். அந்த வகையில் அதிபர் சேவை தரம் III பரீட்சையில் சிந்தியடைந்து நியனம் பெற்றவர்களுக்கு அதிபர்களாகவோ, உதவி அல்லது பிரதி அதிபர்களாக இயங்குவதற்கு பாடசாலைகளை வழங்க கல்வி அமைச்சும், மாகாண கல்வி அமைச்சுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மேலும் தாமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு, அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்களின் சேவையை கருத்திற்கொண்டு அவர்களை அதிபர் சேவையில் உள்ளீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான நடவடிக்கையை கல்வித்துறையை அரசியல்மயமாக்கும் நடவடிக்கையாக நாம் கருதமுடியாது. காரணம் அதிபர்களாக பதிற்கடமையாற்றும் முறைமையை ஆசிரியர்கள் ஏற்படுத்தவில்லை. மாறாக அரசாங்கங்களினதும் அரசியல் தலைவர்களினதும் கல்விமுறையை சீரழிக்கும் கொள்கை நடைமுறைகளினாலேயே இந்நிலையை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்கள் தொடர்பான பிரச்சினையை ஆட்சி செய்த அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை அதிபர்களாக பதிற் கடமையாற்றியவர்களின் பிழை என நோக்கி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க மத்திய அரசாங்கமோ மாகாண அரசாங்கங்களோ நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இவ்விடயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்கள் அரசியல் காரணிகள் எதுவுமின்றி சமூக நலனை அடிப்படையாக கொண்டு தமது சேவையை வழங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இதற்கு முற்பட்ட காலத்தில் அதிபர்களாக பதிற்கடமையாற்றிய ஆசிரியர்கள் விஷேட ஏற்பாடுகளின் அடிப்படையில் அதிபர் சேவைக்கு உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறானதொரு விஷேட ஏற்பாட்டை பின்பற்றி தற்போது அதிபர்களாக பதிற்கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதேநேரம் இனிவரும் காலங்களில் அதிபர் சேவைக்கு போட்டிப் பரீட்சை மூலம் மாத்திரம் அதிபர்கள் நியமிக்கப்படுவதனை உறுதிப்படுத்தி அரசியல்வாதிகள் கல்வியில் அத்துமீறி தலையிடுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.