அரசியல் களத்தில் தமது ஆதரவு வீழ்ச்சி காணும் போதெல்லாம், இலாவகமாக அதனை மீட்டெடுப்பதில் ராஜபக்ஷர்கள் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளில் வீழந்துபோன தமது பிம்பத்தை மீட்டெடுக்க மீண்டும் பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
நுகேகொடை கூட்டம் போன்று கொழும்பில் ஒரு கூட்டத்தை நடத்தாது, அவர்கள் அநுராதபுரத்தில் இந்த எழுச்சியை நடத்தியமை கவனிக்க வேண்டியதாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ராஜபக்ஷர்களின் ஆட்சியில் அதிகம் பாதிப்பைச் சந்தித்தது இலங்கைப் பொருளாதாரம்தான். அந்த பாதிப்பை நேரடியாக அனுபவித்தவர்கள் பெரும்பாலும் நகர்ப்புற மக்கள்தான்.
உரப்பிரச்சினை, உரத்தட்டுப்பாடு தவிர்ந்த ஏனைய பிரச்சினைகள் பலவும் நகர்ப்புறத்தைத் தாண்டிய பகுதிகளில் பெரும்பிரச்சினையாக இன்னும் உருவெடுக்கவில்லை. உரப்பிரச்சினைதான், நகர்ப்புறங்களைத் தாண்டிய பகுதிகளில் ராஜபக்ஷர்களுக்கெதிரான பெரும் சவாலாக எழுந்து நிற்கிறது. அதனைத் தாண்டிய விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம், எரிவாயுத் தட்டுப்பாடு என்பன நகர்ப்புறங்களில் ஏற்படுத்திய தாக்கம் அளவிற்கு, நகர்ப்புறத்தைத் தாண்டிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆகவே சரிந்துபோயுள்ள தமது பிம்பத்தை, குறைந்த பாதிப்பு உள்ள பகுதிகளிலிருந்து சரிசெய்யவே ராஜபக்ஷர்கள் விரும்புகிறார்கள் என்பதை நாம் ஊகிக்கக் கூடியதாகவுள்ளது. கொழும்பு என்பது ராஜபக்ஷர்களின் கடைசி முன்னுரிமைதான். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் அவர்களுடைய வாக்குவங்கி என்பது நகர்ப்புறமல்லாத சிங்கள-பௌத்த மக்களின் வாக்கு வங்கி என்பது. அதனை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியில்தான் தற்போது அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகிறார்கள்.
மத்தியவங்கி பில்லியன் கணக்கில் அச்சடிக்கும் பணத்தைக் கொண்டு, அது ரூபாவின் மதிப்பை வீழ்த்தினாலும், இலங்கையின் பொருளாதாரத்தைச் சீரழித்தாலும், இலங்கையை சிம்பாப்வே, அல்லது லெபனான் போன்ற நிலைக்கு இட்டுச்சென்றாலும் கவலையில்லை. ஆட்சியில் தாம் இருப்பதை உறுதிப்படுத்தினால் போதும் என்ற சுயநல பிடிவாதத்தோடு, ராஜபக்ஷர்கள் அடுத்த இரண்டு வருடங்களில் தீவிரமான தமது வாக்கு வங்கியை கவரத்தக்க பணிகளை முன்னெடுப்பார்கள். இதுதான் பசில் ராஜபக்ஷவின் தந்திரோபாயமாக இருக்கும் என்பதை இலகுவில் ஊகித்துக்கொள்ள முடியும்.
தௌிந்த அரசியல் அறிவு இல்லாத, குறைந்த ஞாபகத்திறனுள்ள, பேரினவாத உணர்ச்சி ததும்பும் வாக்குவங்கியைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில், தனது தந்திரோபாயம் வேலைசெய்யும் என்று பசில் ராஜபக்ஷ நம்புவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதேவேளை இது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷர்கள் பாசறையிலிருந்து போட்டியிடப்போவது யார் என்ற கேள்வியையும் எழுப்பி நிற்கிறது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல்பற்றிப் பேசுவதற்கு இன்னும் நிறையக் காலமிருக்கிறது என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், எல்லாத் தரப்புக்களும் அதற்கான ஆரம்பகட்ட முஸ்தீபுகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
ராஜபக்ஷர்களைப் பொறுத்தவரையில், மீண்டும் கோட்டாவே போட்டியிடுவாரா, அல்லது பசில் போட்டியிடுவாரா என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது. யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இரண்டாண்டுகளில் ஒரு தெளிவு கிடைக்கும்.
இன்றைய சூழலில், கோட்டாபய தன்னுடைய பிரபல்யத்தையும், கவர்ச்சியையும் இழந்து நிற்கும் நிலையில், மீண்டும் போட்டியிட்டால் கடந்தமுறை கிடைத்தளவு வாக்குகள் கிடைக்குமா என்பது ஐயமே. இந்த நிலையை அவரால் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மாற்றிவிட முடியுமா என்பது ஐயத்திற்குரியதே.
ராஜபக்ஷ ர்களின் தரப்பில் போட்டியி டுவது யாராயினும், அவர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானி ப்பதில் அவர்களை எதிர்த்துப் போட்டியி டுவது யார் என்பதும் முக்கியமானது. ஐக்கிய தேசிய கட்சி உயிரற்றுப் போயிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளுக்குள் உடைந்துபோய் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி தனிவழி போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு வழியில் மைத்ரிபால சிரிசேனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ராஜபக்ஷர்களை எதிர்த்துக் களம் காணப்போவது யார் என்பதில் கடுமையான போட்டி உருவாயிருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவர்கள் அனைவரும் தனித்தனியே போட்டியிட்டால், ராஜபக்ஷர்கள் இலகுவாக வெற்றிபெற்று விடுவார்கள். ராஜபக்ஷர்களினை எதிர்க்கும் அனைவரும் ஒன்றிணைந்து தமக்கு ஆதரவுதராத வரை தம்மால் வெல்ல முடியாது என்பது இந்தப் போட்டியிலுள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆகவே ராஜபக்ஷர்களை வெல்வதற்கான தற்காலிக சூத்திரமாக அமைவது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததொரு பொதுவேட்பாளரைக் களமிறக்குவதுதான் என்பது பொதுவானதொரு நம்பிக்கையாக மட்டுமல்லாமல், தேர்தல் அரசியல் யதார்த்தமாகவும் மாறிவிட்டது. அப்படிப்பட்ட பொது வேட்பாளர் என்பவர், சிங்கள-பௌத்த வாக்கு வங்கியின் பாதியளவையேனும் பெற்றுக்கொள்ளக் கூடியவராக இருப்பதுடன், சிறுபான்மையின வாக்குவங்கியையும் கவர்ந்துகொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்!
மைத்ரிபால சிரிசேனவின் வெற்றி, பொது வேட்பாளரானால் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியிருந்ததனால், பலருக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது. இன்றிருக்கும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பொது வேட்பாளராகக் கூடிய நிலையில் எவரும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில், அதற்குள் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவு குறைந்துள்ளது என்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதிலிருந்து சம்பிக்க ரணவக்க “43 படையணி” என்ற பெயரில் தனிப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். பொன்சேகாவிற்கும் ஜனாதிபதிக் கனவு இருந்துகொண்டிருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கிறது.
மீண்டும் தன்னை பொதுவேட்பாளராக நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை மைத்ரிபால சிரிசேனவிடம் இருக்கிறது. அதற்காகத்தான் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறார். ஜே.வி.பியின் பெயர் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தைக் கொண்டிராத நிலையில், அந்தப் பெயருடன் ஒரு பலமான தேசிய சக்தியாக வளர முடியாது என்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஜே.வி.பி இயங்கிக் கொண்டிருக்கிறது. அநுர குமாரவை பொது வேட்பாளராகக் களமிறக்கும் கனவு நிச்சயம் தேசிய மக்கள் சக்திக்கு இருக்கும் எனலாம்.
இவர்களெல்லாம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் இலங்கையின் செல்வந்த தொழிலதிபர்களில் ஒருவராக தம்மிக்க பெரேரா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஊகங்களும் பேசுபொருளாக இருக்கின்றன. தம்மிக்க பெரேரா அவ்வப்போது வௌியிடும் கொள்கைப் பத்திரங்கள், தீர்க்கதரிசனக் குறிப்புக்கள் என்பன இந்த ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கலாம்.
எது எவ்வாறாயினும், ஒருவர் யதார்த்தத்தில் வெற்றிவாய்ப்புள்ள பொது வேட்பாளர் ஆக வேண்டுமென்றால், வாக்குவங்கி செல்வாக்குள்ள கட்சிகள் அனைத்தும் அவரை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் வாக்குகள் சிதறுண்டு, அது ஆளுந்தரப்பிற்கே சாதகமானதாக அமையும். மேலும், முன்னர் குறிப்பிட்டது போல, குறித்த பொது வேட்பாளர் சிங்கள-பௌத்த வாக்கு வங்கியின் பாதியளவிலான வாக்குகளையேனும் பெற்றக்கொள்ளக் கூடியவராக இருப்பதுடன், சிறுபான்மையின வாக்கு வங்கிகளையும் கவரக்கூடியவராக இருக்கவேண்டும்.
இது மிகக் கடினமானது. சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று ஒரு பொது வேட்பாளர் இரகசியமாக சிறுபான்மையினக் கட்சிகளிடம் ஒத்துக்கொண்டால் கூட, அந்தச் செய்தி பெரும்பான்மையின வாக்குகளை பாதிப்பதாகவே பெருமளவிற்கு நம்பப்படுகிறது. ஆகவே ஏற்றதேர் அரசியல் தந்திரோபாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரை உதாசீனம் செய்துவிட்டால், அவர்கள் வாக்களிக்கவே மாட்டார்கள். அதுவும் பொது வேட்பாளருக்கே இழப்பாக அமையும்.
ஆகவே பெரும்பான்மையினத்தவரும், சிறுபான்மையினத்தவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு தளத்திலிருந்து தன்னுடைய அரசியலை முன்வைக்கக்கூடியவராக பொது வேட்பாளர் இருக்கும் போதுதான், அவர் வெற்றிபெறக்கூடிய பொது வேட்பாளராக அமைவார். வெறும் ராஜபக்ஷ எதிர்ப்பு என்பது போதாது.
ராஜபக்ஷர்களுக்கு இந்தப் பிரச்சினையில்லை. அவர்களால் பெரும்பான்மையின வாக்குவங்கியை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் வெற்றிபெற முடியும். அதனைத்தான் அவர்கள் 2019-ல் செய்தார்கள்.
அவர்களுக்கு சிறுபான்மையினரின் வாக்குவங்கி அத்தியாவசியம் இல்லை. அதனால்தான் அவர்கள் சிறுபான்மையினர் பற்றிக் கவலைகொள்வதில்லை. சிறுபான்மையினர் பற்றிய அவர்களின் கவலையெல்லாம், சர்வதேச அழுத்தத்தைச் சமாளிக்க மட்டும்தான். தேர்தலில் சிறுபான்மையின வாக்குகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. ஆனால் பொது வேட்பாளரின் நிலை இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
மைத்ரிபால சிரிசேன செய்த காரியங்களினால் பொது வேட்பாளர் என்பதன் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பெருமளிவிற்கு உடைந்துபோயுள்ளது. ராஜபக்ஷ எதிர்ப்பில் தொடங்கி, ராஜபக்ஷ
சரணாகதியில் முடிந்த சிரிசேனவின் பயணம், மக்களுக்கு பெரும் நம்பிக்கையீனத்தையே அளித்துள்ளது.
ஆகவே அடுத்த பொது வேட்பாளரை மக்கள் நம்பிக்கையோடு அன்றி, ஐயத்தோடே அணுகுவார்கள். அடுத்த பொது வேட்பாளராவது சிரிசேன பொது வேட்பாளரானதைப் போன்றதோர் இனிய பயணமாக இருக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.