அநுர அரசாங்கம் கடன் மேல் கடன் பெறுகிறதா?

இந்த செயற்பாடு தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது. அதாவது, புதிய ஜனாதிபதி மற்றும் அவர் சார்ந்த கட்சியின் அங்கத்தவர்களைக் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற அசாதாரண செயலாக குறிப்பிட்டுவிட முடியாது.

சாதாரணமாக அரசாங்கத்தின் நாளாந்த செலவுகளை ஈடு செய்வதற்கும், ஏற்கனவே வழங்கப்பட்டு முதிர்வடையும் திறைசேரி உண்டியல்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்கள் வாராந்தம் வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படுவது வழமை.

இந்நிலையில் புதிய அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் கடன் பெற்ற வண்ணமுள்ளது என எதிர் தரப்பைச் சேர்ந்த ஒரு சாராரும், தமது கொள்கையை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்றது என இன்னொரு சாராரும் தமக்கு சாதகமான வகையில் கருத்துகளை வெளி மேடைகளில் வெளியிடுவதை அவதானிக்க முடிந்தது.

உண்மையில், இந்த திறைசேரி உண்டியல் வழங்கும் முறைமை வழமையாக எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போதிலும் இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடாக அமைந்துள்ளது. உண்மையில், இந்த செயற்பாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதாக கருதிவிடவும் முடியாது.

இலங்கை மத்திய வங்கியினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கை மத்திய வங்கி சுயாதீன அமைப்பாக இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை ஈடு செய்வதற்கு அவசியமான நிதியை திரட்டி வழங்கும் பொறுப்பு இலங்கை மத்திய வங்கிவசம் காணப்படுகின்றது. இந்நிலையில், அந்த நிதியை இரு வழிகளில் இலங்கை மத்திய வங்கியினால் நிறைவேற்ற முடியும். மேலே தெரிவிக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் வழங்கி நிதி திரட்டுவது அதில் ஒன்று. மற்றையது, பணம் அச்சிட்டு புழக்கத்தில்விடுவது.

2020 – 2022 காலப்பகுதியில், இரண்டாவது முறைமை அக்காலகட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர்களாக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் டபிள்யு. டி. லக்ஷ்மன் ஆகியோரால் கட்டுக்கோப்பற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டமையால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதை அனைவரும் அறிந்ததே.

மேலும், தற்போது அமலிலுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் பிரகாரம் நாணயத் தாள் அச்சிடுவது என்பது பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்கத்துக்கு அவசியமான நிதித் தேவையை பூர்த்தி செய்ய திறைசேரி உண்டியல்கள் வழங்க வேண்டிய நிலை இலங்கை மத்திய வங்கிக்கு காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதிசார் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர். அனில் ஜயந்த குறிப்பிடுகையில், அமைச்சின் செலவுகள் மற்றும் முதிர்ச்சியடையும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் கடன் பத்திரங்களுக்கான செலவை ஈடு செய்வதற்காக உள்ளக நிதிச் சந்தையிலிருந்து நிதியைத் திரட்டிக் கொள்வதற்காக திறைசேரி உண்டியல்கள் மற்றும் கடன் பத்திரங்களை வழங்குவது என்பது அசாதாரண செயற்பாடு அல்ல. இது வழமையாக பின்பற்றப்படும் சாதாரண செயற்பாடாகும். இதனை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்கின்றது.

முன்னர் வழங்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் முதிர்வடையும் தினத்தில் அதற்கான கொடுப்பனவை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்ளும். இது வழமையான நடவடிக்கையாகும். புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளதால் இது புதிதாக முன்னெடுக்கப்படும் விடயமல்ல. இதில் எந்தவிதமான விசேடத்தன்மையும் இல்லை.

சர்வதேச சந்தையிலிருந்தும் அரசாங்கம் கடன்களை பெற்றுக் கொள்வது இந்த குறுகிய காலப்பகுதியில் அதிகரித்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை முற்றிலும் தவறானவையாகும். புதிதாக எவ்வித சர்வதேச கடன் பெறலும் மேற்கொள்ளப்படவில்லை. உள்ளக மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளிலிருந்து அரசாங்கம் கடன் பெற்றுள்ளது என்பதாக வெளிவரும் அறிக்கைகள் பற்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நிதிச் சந்தைகளை உறுதிப்படுத்தும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி கொண்டுள்ளது. இதனை மேற்கொள்வதற்காக அண்மையில் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்திருந்தது. இந்த நடவடிக்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தது என தெளிவுபடுத்தியிருந்தார்.

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 465.1 பில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல் வழங்கல்களினூடாக திரட்டப்பட்ட தொகையில், 400 பில்லியன் ரூபாய் ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தினால் கடன் பெறுவதற்காக உச்ச வரம்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வரம்பை பின்பற்றி இந்த புதிய அரசாங்கம் இயங்குகின்றது. மாறாக, கடந்த அரசாங்கத்தின் கொள்கையை இந்த அரசாங்கமும் பின்பற்றுகின்றது. இது வரவேற்கத்தக்கது என்றவாறாக கடந்த அரசாங்கத்தில் பொறுப்பு வகித்தவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எதிர் தரப்பைச் சேர்ந்த மற்றுமொரு அமைப்பினர் தெரிவிக்கையில், அரசாங்கம் மணித்தியாலத்துக்கு 1.34 பில்லியனை கடனாக பெறுகின்றது. இவ்வாறு அசாதாரணமான முறையில் பெறப்படும் நிதி எதற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். பொறுப்பேற்று முதல் 13 தினங்களுக்குள் 419 பில்லியன் ரூபாய் கடனாக பெறப்பட்டுள்ளது.

இதனால் நாட்டுக்கு பயனில்லை. நாடு மீண்டும் ஒரு நெருக்கடியை நோக்கி பயணிக்கின்றது. இரு மாதங்களாக ஓய்வூதியம் பெறுவோருக்கு நிலுவையிலுள்ள 3000 கொடுப்பனவை மேற்கொள்ளக்கூட அரசாங்கத்தினால் முடியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி இவ்வாறு கடன் பெற வேண்டிய தேவையில்லை. நாம் ஆட்சிக்கு வந்தால், இவ்வாறான கடன் பெறல்களை மேற்கொள்ளமாட்டோம் என்று, ஆனால் அவர்களும் அதனையே மேற்கொள்கின்றனர் என்பதாக அமைந்திருந்தது.

இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கண்டி மாவட்ட வேட்பாளரான லால் காந்த கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலப்பகுதியில் தமது கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தலைவரும், நாம் கடன் பெறமாட்டோம் என ஒரு போதும் தெரிவிக்கவில்லை.

கடன் பெறுவது என்பது குற்றமல்ல. எமக்கு கடன்கள் அவசியம். பெற்றுக் கொள்ளும் கடன்களை வினைத்திறனான வகையில், உகந்த முதலீடுகளில் பயன்படுத்துவது முக்கியமானது. மாறாக அவற்றை கொள்ளையிடுவது தவறானது என தெரிவித்திருந்தார்.

எது எவ்வாறாயினும், இந்த திறைசேரி உண்டியல் வழங்கி நிதிச் சந்தைகளிலிருந்து நிதி திரட்டுவது என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் அல்ல. இதற்கு முன்னரும் அவ்வாறு நடந்துள்ளது. இது வழமை என்பதே உண்மை.

தேர்தல் நெருங்கி வரும் காலப்பகுதியில், தற்போது பதவி ஏற்று ஒரு மாதத்தைக்கூட பூர்த்தி செய்யாமல், மூன்று அமைச்சர்களை மாத்திரம் கொண்டு இயங்கும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் இவ்வாறான கருத்துகள் பொது வெளிகளில் முன்வைக்கப்பட்டு மக்களை திசை திருப்பும் முயற்சிகளை சில சக்திகள் மேற்கொண்ட வண்ணமுள்ளன.