அதனைவிடுத்து வலதுசாரிகளுடன் இணைவது சாத்தியமற்றது. நாங்கள் கேட்கும் சுயநிர்ணய உரிமையினை அடையவும் முடியாது. இதுதான் நாங்கள் விட்ட அரசியல் தவறு.” என்று மட்டக்களப்பிலுள்ள கலாநிதி ஒருவர் கருத்தொன்றைப் பகிர்ந்திருந்தார்.
உண்மையில் இது ஒரு நல்ல கருத்தே. இந்த மாக்சிச அடிப்படையை ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை ஜே.வி.பி. என்கிற தற்போதைய தேசிய மக்கள் சக்தி கடைப்பிடிக்கிறதா என்பது கேள்வியாகும்.
இவ்வாறு படித்தவர்கள் மத்தியில் அடிப்படையில்லாமலும், மேம்படுத்தல் (அப்டேட் ) செய்யப்படாமலுமிருக்கின்ற விடயங்களினால்தான் பல்வேறு பிழைகள் நடந்துவிடுகின்றன. வெளிப்பூச்சுக்கு இருப்பவற்றினை மட்டுமே வைத்துக்கொண்டு படித்தவர்கள் கூட வெளிப்படுத்தும் கருத்துக்கள் சில தேவையற்ற விடயங்களைச் செய்துவிடுகின்றன.
இது வீணான விளைவுகளை சடுதியாகவும் ஏற்படுத்தி விடுகின்றது. இது போன்ற விடயங்கள் தமிழ் மக்களிடம் மாத்திரமல்ல, சிங்கள மக்களிடமும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் கூட இந்த மாற்றம் என்கிற அலை அடித்திருக்கக்கூடும்.
போர்க் குற்றவாளிகளை எமது அரசாங்கம் தண்டிக்காது என்று ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே வெளிப்படையாக அறிவித்தவர் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. அத்துடன் விஜித ஹேரத் எமது அரசாங்கம் காணி, பொலிஸ், அதிகாரங்களை பகிராது என்றுரைத்திருந்தார்.
அவ்வாறிருக்கையில்தான், ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் அதிகாரப்பகிர்வும் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. தங்களுடைய அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழ் அரசியல்வாதிகள் இதனைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்ற கருத்தினை அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.
அப்படியானால், இத்தனை காலமும் நடைபெற்றுவந்த போராட்டங்கள் வெறுமனே அரசியல்வாதிகளுக்கானது என்பது டில்வினுடைய கருத்தாக இருக்கமுடியும். இக்கருத்துக்கள் ஒரு இடதுசாரித்துவத்துக்குள் இருக்கின்றவர்களின் கருத்தாக இருக்கமுடியுமா என்பது முதல் நிலையாகும்.
டில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா? ஜே.வி.பியின் கருத்தா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா? கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவியில் இருக்கும் போது தமிழர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் மூலம், தமது கருத்தை வெளிப்படுத்துவார்கள்.
அது போன்றதொரு கருத்துதானா? போன்ற கேள்விகள் தமிழ் அரசியல் தரப்புகளிடமிருந்து வெளிப்பட்டு வருகின்றன. இந்தக்கேள்விகளுக்கு யார் சரியான பதிலை முன்வைப்பார்கள் என்பது வினவப்படவேண்டியது.
இலங்கையில் ஒற்றையாட்சியே தொடர வேண்டும் – பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பகிரக்கூடாது, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிக்க மறுத்தல், அரசியல் விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத்தில் வெளிநாட்டு தலையீடு வர அனுமதிக்க விடாது தடுத்தல், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கான எந்தவொரு சர்வதேச நடவடிக்கையையும் எதிர்க்க வேண்டும் இவ்வாறானவைகளே தமிழர்கள் விடயத்தில் ஜே.வி.யின் அடிப்படைக் கொள்கைகளாகும்.
ஆயுதப் புரட்சி இயக்கமான ஜே.வி.பி. யினர் ஆயுத வழியினைத் துறந்த பின்னர் இலங்கையில் மிக மோசமான சிங்கள இனவாத கட்சியாகவே படிநிலையாக வளர்ச்சியடைந்து இருக்கிறார்கள். காலாகாலமாக தமிழர் மீதான தாக்குதல்களை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் செய்கின்ற போது மிகத் தீவிரமாக அந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயற்பட்ட கட்சியாகவே இருக்கிறது.
கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட ஊழல் மோசடிகளினால் மக்கள் ஒரு ஆட்சிமாற்றத்தை விரும்பியமையினால் இந்த ஆட்சி அமைந்துள்ளது. ஊழல் மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவதாகவும், அதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அறிவித்திருக்கிறது.
ஆனால் இந்த அனைத்து விடயங்களும் இன்று நேற்று நடந்த விடயங்கள் அல்ல என்பதும் காலாகாலமாக நடைபெற்று வந்தவையே அப்போதெல்லாம் இவர்கள் அந்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்கள் என்பதும் மறக்கப்படாதவைதான்.
இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்கள் அனைவரும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவை இனவெறிச் சிந்தனையின்றி நடைபெற்றால் நல்லதே. ஆனால், ஜே.வி.பி.யின் நோக்கம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம். வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று சட்ட ஒழுங்குகளை அமைத்து பாராளுமன்றத்தினுடாக அமுல்படுத்திவிடலாம். அனுரவோடு நாடு என்பதனை நிரூபித்துவிடலாம் என்ற கர்வ சிந்தனையும் நல்லதல்ல.
ஆனால் ஏனைய கட்சிகளின் வெற்றிவாய்ப்புகள் இதனைத் தடுக்காமலிருந்தால் சரி. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களது வாக்குகளும் தனக்கு வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அந்தக் கருத்து தமிழ்த் தரப்பிடம் எதிர்ப்பலைகளையும் உருவாக்கியிருந்தது. அதனைவிடவும் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கமாட்டேன் என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அலையான ஆதரவு அரசியலைச் செய்திருந்தது.
மறுதலையாக இதனை தமிழ் மக்கள் சரியாக கணக்கிலெடுக்கவேயில்லை. ஜனாதிபதி தெரிவு முடிந்தபின்னர் பலரும் இத் தேர்தல் இனவாதம் பிரயோகிக்கப்படாது நடந்து முடிந்திருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் வெளிப்படையாக அல்லாமல் நாசூக்காக பிரயோகிக்கப்பட்ட இனவாதம் சிறப்பாக செயற்பட்டிருந்தது என்பதற்கு இந்தப் போர்க் குற்றவாளிகள் போதுமானது.
அதே போன்று வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட 13ஆவது திருத்தம், அதிகாரப் பரவலாக்கம் போன்ற விடயங்கள் சிங்கள மக்கள் மத்தியில் இப்போதும் அச்சத்துடனேயே பார்க்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது என்பதனை மிகச் சரியாக கணித்துவைத்திருக்கின்ற ஜே.வி.பி. அதன் செலாளரான டில்வின் சில்வா மூலம் 13ஆது திருத்தம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது. இது கவனிக்கப்படவேண்டியது. இக்கருத்து இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலும் பெருவாரி வாக்குகளை குவிக்கலாம்.
பெருமளவு ஆசனங்களையும் கொண்டுவரலாம். அதே நேரத்தில் மாற்றம் என்ற கண்துடைப்பு விடயத்தினை மாத்திரம் வைத்துக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டை தம்முடைய வேட்பாளர்கள் மூலம் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தி செய்துவருகிறது.
இதற்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மீதுள்ள விரக்தியை மூலதனமாக தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.வி.பி பயன்படுத்துகிறது. ஆனால், இந்த ஏமாற்று வேலைகளை நம்பி மக்களும் அவர்கள் பின் செல்வதற்குத் தயாராகி வருகின்றார்கள்.
இது ஒரு ஆபத்தான நிலைமையே. இந்த நிலையை உணர்ந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இதற்கான மாற்று வழிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இலங்கை நாடு சிங்கள மக்களுக்குரிய நாடு, இது தனி பௌத்த சிங்கள நாடு. இதில் நாங்கள் சொல்வதே சட்டம்.
இதனை யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்ற நிலையை உருவாக்கும் நீண்ட கால செயற்திட்டத்தைக் கொண்டே நகர்த்தப்பட்டுவரும் பெரும்பான்மையினரின் ஆட்சிகளில் இதுவரை நடைபெறாத சில விடயங்கள் அனுரகுமாரவின் ஆட்சியில் நடைபெறும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
இருந்தாலும், கடந்த கால சிங்கள ஆட்சியாளர்களின் வரலாறுகள் தமிழர்கள் அறிந்தவை என்பதனால் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தவகையில்தான், இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி, எதிர்கால ஜனநாயக செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என்கிற முன்வைப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
சுய நிர்ணய அடிப்படையில் உருவான கட்சியின் ஜனாதிபதியிடம் பிரயோசனமடையும் என்பது இடதுசாரித்துவத்தின் முழுமை மற்றும் நேர்மையில் தங்கியிருக்கிறது. அது அரசியல் தீர்வையும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையையும் ஒப்புக்கொள்வதாகவும் இருக்கும் என்று நம்புவோம்.