அண்மைக்காலமாக முக்கியத்துவம் பெறும் செய்தி கிழக்கு மாகாணத்தில் இடம்பெற போகும் தேர்தல்களை கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ள போகின்றன என்பதே. கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள், உட்பட யு என் பி, எஸ் எல் எப் பி, ஜே வி பி மற்றும் உதிரியாக உள்ள சில கட்சிகள் தனித்தோ அல்லது கூட்டாகவோ களம் இறங்குவர்.இதில் இப்போது உள்ள நிலைப்படி கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர் நிலை தமிழர் 14 முஸ்லிம்கள் 13 சிங்களவர் 10. இவர்கள் சென்ற தேர்தலில் வெவ்வேறு கட்சிகள் அல்லது கூட்டில் இருந்து தெரிவானவர். முஸ்லிம்களுடன் இணைந்து அரசு அமைக்கும் தமிழர் முயற்சி மகிந்த இருந்தபோது சாத்தியம் இல்லாது போயிற்று. பின் நல்லாட்சியில் அது சாத்தியமானது.
இருந்தும் முதல்வர் பதவி தமக்கு இல்லை என்ற ஆதங்கம் தமிழர் மத்தியில் ஏற்ப்பட்டது. இதன் யதார்த்த நிலை பற்றிய புரிதல் பலருக்கும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். கிழக்கின் இனப் பரம்பல் தமிழர் 39%, முஸ்லிம் 36% சிங்களவர் 23% என காணப்படும் நிலையில் எவ்வாறு தமிழர் தான் முதல்வராக வரவேண்டும் என வாதிட முடியும். விருப்பு வேறு யதார்த்தம் வேறு.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் தமிழர் முதல்வராக வந்தபோது எந்த சலசலப்பும் ஏற்ப்படவில்லை. ஆனால் முதலாவது கிழக்கு மாகாண சபையில் முதல்வர் முஸ்லிம் அல்லது தமிழர் என சலசலப்பு எழுந்த போது புலிகளை பலவீனப்படுத்த மகிந்த எடுத்த முடிவு தான் பிள்ளையானை முதல்வராக தெரிவு செய்தது. அடுத்த தேர்தலில் நிலைமை அவ்வாறில்லை.
தமிழர்களும் முஸ்லிம்களும் கூட்டாக அரசமைக்கவும் முதல்வராக முஸ்லிம் ஒருவர் வரவும் கூட்டமைப்பு விரும்பிய போதும் அப்போதய தெற்கின் நிலை பொதுபலசேனாவின் சேட்டைகள் என பலவிதமான காரணங்களால் முஸ்லிம் காங்கிரஸ் அந்த அழைப்பை ஏற்க்கவில்லை. பின்னர் மகிந்தர் இல்லாத சூழல், ரணில் மைத்திரி ஆசீர்வாதம் இணைப்பை ஏற்ப்படுத்தியது.
இரண்டு மந்திரி பதவிகளுடன் இணைப்பு ஏற்ப்பட்ட போதும் முதல்வர் நிலைப்பாட்டில் புகைச்சல் இருந்து கொண்டே இருப்பது அண்மைய முகநூல் பதிவுகள் மற்றும் இணைய கட்டுரைகள் மூலம் வெளிப்படுகிறது. முஸ்லிகளை பொறுத்தவரை அவர்கள் நாடெங்கும் பரந்து வாழ்ந்தாலும் அவர்கள் செறிந்து வாழ்வது கிழக்கில் தான். அங்கு மட்டுமே அவர்களால் முதல்வராக வர முடியும்.
வேறு எந்த மாகாண சபையிலும் அவர்கள் உறுப்பினர்களாக அல்லது மந்திரிகளாக மட்டுமே தெரிவாக முடியும். மூவின மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமானால் அவரவர் பங்கை அவரவர்க்கு கொடுப்பதே அரசியல் பிணக்குகள் ஏற்ப்படுவதை தவிர்க்கும். எந்த காலத்திலும் வடக்கில் முஸ்லிம் அல்லது சிங்களவர் முதல்வர் ஆக முடியாது. அது தமிழருக்கான ஒதுக்கீடு.
அதே போல் கிழக்கை தவிர்த்து எங்குமே முஸ்லிம் முதல்வர் வர முடியாது. எனவே கிழக்கில் அவர்கள் தமிழரை விட 3% மட்டுமே குறைவாக இருக்கையில் அவர்கள் முதல்வராக வருவதில் என்ன தவறு. கடந்த தேர்தலில் மகிந்தவின் பின்னால் சென்ற முஸ்லிம் தலைவர்கள் செயலால் தான் முஸ்லிம்களில் 13 உறுப்பினர்கள் மட்டும் தெரிவாகினர். இல்லை எனில் அது கூடியிருக்கும்.
சிங்கள கட்சிகளுடன் கிழக்கில் முஸ்லிம்கள் கூட்டு சேர்ந்தால் நிச்சயம் அவர்கள் தான் பெரு வெற்றி பெறுவர். அப்போது அவர்கள் தான் முதல்வராகவும் வருவர். இருந்தும் பேசும் மொழியால் மட்டுமல்ல நீண்ட கால இணைந்து வாழும் உறவால் அவர்கள் தமிழர்களுடன் சேர்ந்து ஆளாவே விரும்புவர். அதே வேளை தமது தனித்துவத்தை பேணவும் விரும்புவர் என்பது யதார்த்தம்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிகள் தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல்ப்பட்டு உதவி நகர பிதாவாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் கிழக்கிலும் அந்த நிலைமை தான் காணப்பட்டது. மசூர் மௌலானா முதல் அஸ்ரப் வரை செல்வநாயகத்தை தலைவராக கொண்ட தமிழ் அரசு கட்சியில் தான் அரசியலை ஆரம்பித்தனர். பின்பு தான் பிரிந்து சென்றனர்.
அந்த பிரிவுகளின் பின்புலம் பற்றிய புரிதல் இருந்தால் இன்று கிழக்கில் முதல்வராக முஸ்லிம் வருவதை எதிர்க்கும் நிலை உருவாகாது. அன்று பிரிந்து செல்லும் நிலையை உருவாக்கியது போல இன்று அவர்களை சிங்களவருடன் கிழக்கில் கைகோர்க்கும் நிலைக்கு தள்ளக்கூடாது. நீண்ட கால தமிழ் முஸ்லிம் உறவு திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு பலியாக கூடாது.
இன்றைய கிழக்கு முதல்வர் முஸ்லிகளை, அவர்களின் பிரதேசங்களை மட்டுமே கவனத்தில் கொள்கிறார், தமிழர் பற்றிய அக்கறை அவருக்கு இல்லை என்ற பல பதிவுகளை முகநூலில் பார்த்தபோது வடக்கு முதல்வருடன் ஒப்பிடுகையில் கிழக்கு முதல்வர் மீது எந்த வருத்தமும் இல்லை. இவர் தன் இனத்துக்கு செய்கிறார். அவரோ வெறும் கையில் முழம் போடுகிறார்.
தனக்கு கிடைத்ததை சரிவர செய்யாதவரை விட கிடைத்தை கொண்டு இனத்துக்கு செய்பவர் மேலானவர். இங்கு பிள்ளையான் செயல்ப்பட்ட விதம் கூட பாராட்டுக்கு உரியது. அந்த சூழ்நிலை வேறு இன்றைய சூழ்நிலை வேறு. அது அரச அனுசரணையில் இராணுவ பின்புலத்தில் அமைந்த அரசு. இன்றைய நிலை அவ்வாறில்லை. அதனால் முஸ்லிம்கள் சுயமாக முடிவு எடுப்பார்கள்.
தம்மவர் ஒருவரை முதல்வராக தெரிவு செய்ய அவர்கள் எவருடனும் கூட்டு சேரலாம். அந்த தெரிவை அவர்கள் எடுப்பது சூழ்நிலை சார்ந்தது. காலாகாலமாக கூடி வாழும் பிரதேச தமிழர்களுடனா அல்லது திட்டமிட்டு குடியேற்றப்பட்டாலும் தென்னிலங்கையில் காணப்படும் தட்ப வெட்ப நிலைக்கேற்ப தெரிவு செய்யப்பட்ட சிங்களவருடனா என்பது அவர்களின் முடிவு.
வெறுமனே முதல்வர் பதவிதான் வேண்டும் என்று முடிவெடுத்தால் தமிழர்கள் தான் கிழக்கில் அதிக சேதாரம் அடைவார்கள். வடக்கின் உசுப்பேத்தல்கள் கிழக்கில் வீண் அழிவைத்தான் உருவாக்கும். கடந்த கால யுத்தம் கிழக்கில் பல உன்னதமான இளையவரை காவுவாங்கிய பின்பும் அவர்கள் மீள் எழுச்சி பெறவில்லை. தமிழ் கிராமங்கள் காடுகளாக மாறி காட்சி தருகிறது.
மீட்சி வேண்டுமானால் அடித்தவனை விட அருகில் இருப்பவனுடன் கூட்டு சேர்வதே நலம் பயக்கும். இன்று இருக்கும் இரண்டு மந்திரி பதவிகளை வைத்தே எதையும் செய்யாதவரை முதல்வர் பதவியில் அமர்த்தி என்னத்தை கிழிப்பது. அதனால் முஸ்லிம்களுடன் இணக்கமாகி செயல்ப்படுவதன் மூலம் கிழக்கு தமிழர் அதிகாரத்தை பங்கிடுவதே இருவருக்கும் நன்மை பயக்கும்.
அதை விடுத்து முதல்வர் பதவி என்ற நோக்கில் இரு இனமும் முரண்பட்டால் இம்முறை தெரிவான பத்து உறுப்பினர்களுக்கு மேலாக ஐந்து அல்லது ஆறு சிங்கள உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகும் நிலைமை உருவாகலாம். காரணம் யு என் பி மற்றும் எஸ் எல் எப் பி வாக்குகளின் கூட்டு. பெரும்பான்மை நிலை கொண்டு சிங்கள முதல்வர் தெரிவாகலாம்.
எதிரிக்கு சகுனப்பிழை ஏற்ப்பட தம் மூக்கை அறுக்கும் நிலைக்கு தமிழர்கள் செல்லக் கூடாது என்றால், தேர்தல் ஒப்பந்தம் ஒன்றை முன்பே முஸ்லிம்களுடன் செய்து கொள்ளவேண்டும். பல தமிழ் கட்சிகள் களம் காண முற்படுகையில் வாக்குகள் சிதறும். முஸ்லிம் காங்கிரஸ் பெரிய இழப்பை சந்திக்காது. சிங்கள கட்சிகள் இணைந்ததால் அவர்களுக்கும் சேதாரம் இல்லை.
வெறுமனே முதல்வர் பதவி பற்றிய நிலைப்பாட்டில் தொங்காது வடக்கு கிழக்கு இணைப்போ அல்லது இணைந்த செயல்களோ எதிர் காலத்தில் இடம்பெற வேண்டுமானால் முஸ்லிம்களுடன் கிழக்கு தமிழர் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்ப்பட வேண்டும். இதை ஏற்காது பொங்கி எழுபவர் கிழக்கின் விடியல் வடக்கின் வாலில் இல்லை என்பதை விரைவில் உணர்வர்.
– ராம் –