மேற்கத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்கும் அபிவிருத்திக் கடன், இறுதியில் பன்னாட்டு நிறுவனங்களின் வணிகத்தை ஊக்குவிக்கவே உதவுகின்றது. எத்தியோப்பியாவிற்கான அபிவிருத்தி உதவியில் வர்த்தகம் செய்யும் நெதர்லாந்து நிறுவனங்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்று (Hollandse handel), டச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அதிலிருந்து சில தகவல்கள்.
– எண்பதுகளில் பட்டினிச் சாவுகளில் இருந்து காப்பற்றுவதற்காக கொடுக்கப் பட்டு வந்த நிதி உதவி, தற்போது அபிவிருத்திக்கான உதவியாக மாற்றப் பட்டுள்ளது. அந்த நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு, நெதர்லாந்து அரசு மானியம் வழங்குகின்றது.
– நூற்றுக்கணக்கான டச்சு நிறுவனங்கள் இதை பயன்படுத்திக் கொள்கின்றன. அதாவது, ஒரு டச்சு நிறுவனம் எத்தியோப்பியாவில் முதலிட்டால் கிட்டத்தட்ட அரைவாசி பணம் மானியமாகக் கிடைக்கும்.
– மறுபக்கத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதற்காக எத்தியோப்பிய அரசு பல சலுகைகளை அறிவிக்கிறது. மலிவான கூலியாட்கள், மலிவான எரிசக்தி, தண்ணீர் இலவசம், குறிப்பிட்ட வருடங்களுக்கு வரி இல்லை, இது போன்ற சலுகைகளை வழங்குகின்றது. மேலும் ஒரு நிறுவனம் தனது வருடாந்த கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
– எத்தியோப்பிய அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான விவசாய நிலங்களை ஒதுக்கிக் கொடுக்கின்றது. பெரும்பாலும் அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்றி விட்டு அபகரிக்கப் பட்ட நிலங்களை தான் வழங்குகிறார்கள். முன்பு நிலத்தை சொந்தமாக வைத்திருப்பவர் அதே நிலத்திற்கு காவலாளியாக கூலி வேலை செய்யும் அவல நிலை.
– ஒரோமோ எனும் சிறுபான்மையின மக்களின் நிலங்களே பெரும்பாலும் அரசால் பறிக்கப் படுகின்றன. அதனால், சில இடங்களில் சீற்றமுற்ற மக்கள் கிளர்ந்தெழுந்து வெளிநாட்டு முதலாளிகளின் பண்ணைகளை கொளுத்தி உள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்களால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லை என்று குமுறுகின்றனர். இதனால் பாதிக்கப் பட்ட நெதர்லாந்து முதலாளி ஒருவருக்கு கோடிக் கணக்கான யூரோ நட்டம் ஏற்பட்டது.
– ஹைனெக்கன் பியர் கம்பனி கூட அரச மானியத்துடன் முதலிட்டுள்ளது. மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனமான ஹைனெக்கன், பியர் தயாரிக்கத் தேவையான தானியத்தை எத்தியோப்பியாவில் விளைவிக்கிறது. ஆகவே, ஹைனெக்கனின் முதலீட்டுக்கு அரச மானியம் தேவையே இல்லை.
– அது மட்டுமல்ல, எத்தியோப்பியாவின் உள்நாட்டு தயாரிப்பான இரண்டு பியர் கம்பனிகளை ஹைனெக்கன் விலைக்கு வாங்கியது. வாங்குவதற்கு முன்பிருந்த இலாபத்தின் அளவு, வாங்கிய பின்னரான வருடங்களில் குறைந்தது. அதாவது, வருமான வரி, தொழிலாளர் வரி போன்றவை, ஒன்றில் கட்டப் படவில்லை, அல்லது செலவைக் குறைத்துள்ளனர்.
– அது மட்டுமல்ல, ஏற்கனவே இலாபத்தில் இயங்கி வந்த உள்நாட்டு பியர் நிறுவனங்களில் வேலை செய்து வந்த நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள், ஹைனெக்கன் வாங்கிய பின்னர் பணி நீக்கம் செய்யப் பட்டனர். ஏழை நாடுகளில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவே மானியம் வழங்குவதாக சொல்லப் படுவது இதனால் பொய்த்துப் போகின்றது.
ஆவணப் படத்தை பார்ப்பதற்கு:
Hollandse handel
http://zembla.vara.nl/dossier/uitzending/hollandse-handel
(Kalai Marx)