(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
‘தன் கையே தனக்குதவி’ என்பது பழமொழி. இதன் நிகழ்நிலை உதாரணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறோம். உதவி என்ற பெயரில் உவத்திரவம் செய்வது உலக அரசியல் அரங்கில் நிறைய உண்டு. உதவிகள் பல்வேறு பெயர்களில் நடந்தேறி முடிவில் புதிய ஆதிக்க வடிவங்களாக நிலைபெறுகின்றன. பாதுகாப்பின் பெயரால் அழைத்தவர்களாலேயே, பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமற் போன அவலம் இங்கும் நடந்தது. அந்நிய உதவியைக் கூவி அழைப்பவர்கள் மனங்கொள்ள வேண்டிய விடயமிது.
ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படைகளை வெளியேறக் கோரிக் கடந்த சில வாரங்களாக ஜப்பானியர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஊடகங்கள் அவற்றைக் கவனிக்கவில்லை. குறிப்பாகச், சில வாரங்கட்கு முன், ஜப்பானிய இளம்பெண்ணொருவரை ஓர் அமெரிக்கப் படைவீரர் வன்கலவிக்குட்படுத்திக் கொன்ற சம்பவம், ஜப்பானியர்களின் கோபத்துக்கு இலக்கானது.
ஜப்பானின் தென்கோடியில் உள்ள ஒக்கினாவா தீவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை அகற்றுமாறு, மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் ஒக்கினாவாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள், பல ஜப்பானியப் பெண்களை வன்கலவிக்கு ஆளாக்கியதோடு, சாலை விதிகளை மதியாது வாகனங்களை ஓட்டிப் பல நடைபயணிகளை விபத்துக்குள்ளாக்கி அங்கவீனர்களாக்கியுள்ளனர்.
ஒக்கினாவாவில், அமெரிக்கப் படைகளின் நிலைகொள்ளலுக்கு எதிராகக் கடந்த பல ஆண்டுகளில் ஜப்பானில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இதைக் கொள்ளலாம். அவ்வார்ப்பாட்டத்தில் பங்குபெற்ற ஒக்கினாவா மக்கள் ‘இங்கிருந்து அமெரிக்கப் படைத்தளம் அகற்றப்படு முன் இன்னும் எத்தனை ஜப்பானிய உயிர்களைப் பலியிட வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினர். ஒக்கினாவா தீவின் மக்கள், அமெரிக்கப் படைத்தளத்தை அகற்ற வேண்டிப் பலகாலமாகப் போராடுகின்றனர். அவை அமைதியான கோரிக்கைகளாகவும் சிறிய போராட்டங்களாவும் ஓங்கி அடங்கும் அலை போல தொடர்ந்துள்ளன.
அண்மைய போராட்டத்தின் தன்மை அதிலிருந்து முற்றாக வேறுபடுவதால், அது முக்கியமாகிறது. கடந்த மே மாத நடுப்பகுதி முதல் ஒக்கினாவா மக்கள் இளையோர், முதியயோர்;, பெண்கள்;, தொழிலாளர் எனக் குழுக்களாகச் சுழற்சிமுறையில் விடாது போராடி வருகிறார்கள். கடந்த வாரம் அமெரிக்கப் படைத்தளத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முதியோர் மீது, ஜப்பானியப் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல், ஒக்கினாவாவிலும் அண்டிய தீவுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டோக்கியோவுக்கு வெகு தொலைவில் உள்ள தீவென்பதால் ஒக்கினாவாவில் நடப்பவை தலைநகரிற் கவனம் பெறுவதில்லை. அவை தேசிய ரீதியில் கவனம் பெறாமல் ஜப்பானிய ஊடகங்கள் பார்த்துக் கொள்கின்றன. இந்நிலையில், ஜப்பானியத் தலைநகரான டோக்கியோவில், ஒக்கினாவாவில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்களை அகற்றக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஜப்பானிய பொதுப்புத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்கள், ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபேயை வெளிப்படையாகக் கண்டனத்தைத் தெரிவிக்கத் தூண்டின. இராஜதந்திரத்தில் அது உவப்பானதல்ல எனினும், அமெரிக்கத் தளங்களுக்கு எதிரான உள்நாட்டு உணர்வுகளைத் தவிர்க்கவியலாமல் பிரதிநிதித்துவப்படுத்தத் தள்ளப்பட்ட அவர், ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படையினரின் செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்தார்.
ஜப்பானில் அமெரிக்கப் படையினரின் நிலைகொள்ளலுக்கு எதிரான கருத்து வலுவடைவதை அவதானித்ததால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா வருத்தம் தெரிவித்தார். இவை நிகழும் போராட்டங்களின் முக்கியத்தைச் சுட்டுவன.
ஜப்பானில் அமெரிக்கப் படைகளின் பிரசன்னம் இரண்டாம் உலகப் போரின் விளைவானது. இரண்டாம் உலகப் போரில் தோற்ற ஜப்பான், அமெரிக்காவிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கக் கட்டுப்பாட்டுள் வந்தது. ஜப்பானின் இராணுவம் கலைக்கப்பட்டு இராணுவமற்ற அரசாக ஜப்பான் உருவானது. அடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் 1947இல் வகுத்த புதிய அரசியலமைப்பின் 9வது சரத்து, போரின் மூலம் ஜப்பான் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது என வலியுறுத்தியதோடு, போர்களில் ஈடுபடுமாறு இராணுவத்தைப் பேணுவதையுந் தடை செய்தது.
1951இல் நேச நாடுகளும் ஜப்பானும் ஏற்படுத்திய சான் பிரான்சிஸ்கோ உடன்படிக்கைப்படி, ஜப்பானுக்கான முழு இறைமையும் மீளளிக்கப்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்திய அமெரிக்கா, ‘அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கையை’ ஏற்படுத்தியது. அதன்படி, ஜப்பானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா பொறுப்பாவதுடன், ஜப்பானில் ஏலவே நிலைகொண்ட அமெரிக்கப்படைகள் தொடர்ந்தும் ஜப்பானில் நிலைகொள்ளவும் ஜப்பான் அரசாங்கம், அவர்களின் செலவுக்கான ஒரு தொகையை ஆண்டுதோறும் வழங்கவும் இணக்கமானது.
உடன்படிக்கை மூலம் அமெரிக்க இராணுவத் தளங்கள் ஜப்பானில் நிரந்தரமாக நிலைகொண்டன. வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவின் முக்கியமான கேந்திர நிலையமாக விளங்கிய இத்தளங்களிற் பெரும்பாலானாவை ஒக்கினாவாவில் இருந்தன. 1970ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘கோசா கலவரம்’ அமெரிக்கப் படைகளுக்கெதிராக ஒக்கினாவா மக்கள் முன்னெடுத்த முதலாவது குறிப்பிடத்தக்க எதிர்ப்பாகும். அதைத் தொடர்ந்து ஒக்கினாவர்கள், அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்துக்காக விடாது குரல் கொடுத்துள்ளனர்.
ஜப்பானில் இன்னமும் 130 அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ளன. 55,000க்கு மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினரும் 40,000க்கு மேற்பட்ட குடும்பத்தினரும் ஜப்பானில் வாழ்கின்றனர். அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கை, கடமையின்போது ஜப்பானில் குற்றமிழைக்கும் அமெரிக்கர்களைத் தண்டிக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குவதோடு, ஜப்பானிய சட்டத்தின் கீழ் அவர்களை விசாரிக்க இயலாமற் செய்கிறது. இதனால், தொடர்ந்துங் குற்றங்கள் இழைக்கப்படினும் அவை தண்டிக்கப்படுவதில்லை. இது ஒருவகையில் அமெரிக்கர்கள் இழைக்குங் குற்றங்களின் தொகை பெருக உதவியுள்ளது.
மொத்த ஜப்பானிய நிலப்பரப்பில் 0.6 சதவீதத்தைக் கொண்ட ஒக்கினாவாவில் 62 சதவீதமான நிலப்பரப்பை அமெரிக்க இராணுவத் தளங்கள் பிடித்துள்ளன. ஜப்பானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவப் பிரச்சன்னத்தில் 75சதவீதம் ஒக்கினாவாவிலேயே உள்ளது. அதனாலேயே அமெரிக்க இராணுவத் தளத்தை அகற்றுமாறும் படையினரை வெளியேறுமாறும் ஒக்கினாவர்கள் கோருகின்றனர்.
ஒக்கினாவாவில் அமைந்துள்ள கடேனா விமானப்படைத்தளமே ஆசியாவின் மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத்தளமாகும். அது அமைந்துள்ள நிலப்பரப்பு, சொந்தக் காணிகளிலிருந்து விரட்டப்பட்ட 16,000 ஒக்கினாவர்களின் சொந்தக் காணிகளாகும்.
அமெரிக்கப் படைத்தளங்கள், ஒக்கினாவர்களின் குடிநீரை மாசுபடுத்தும் கொடுமையைத் தொடர்ந்துஞ் செய்கின்றன. ஆய்வறிக்கையொன்றின் படி, கடந்த 15 ஆண்டுகளில் கடேனா விமானத்தளத்திலிருந்து மட்டும் 40,000 லீற்றர் ஜெட் விமான எண்ணெய்யும் 13,000 லீற்றர் டீசலும் 408,000 லீற்றர் பிற கழிவுகளும் நிலத்துடனும் நீருடனும் கலக்கப்பட்டுள்ளன. அதைவிட, எண்ணிலடங்கா அணுவாயுத, இராசாயன ஆயுத ஒழுக்குகளும் சூழலை மாசுபடுத்துவதால் குடிநீர் மாசாகியுள்ளது.
இப்போது தீவிரமடைந்துள்ள போராட்டத்தை ஜப்பானிய அரசாங்கத்துக்கும் ஒக்கினாவர்கட்கும் இடையான போராட்டமாகவும் கருதலாம். பிரதமர் அபேயைப் பொறுத்தவரை, ஒக்கினாவர்களின் கோரிக்கையை விட அமெரிக்க-ஜப்பானிய உறவு முக்கியம். எனவே ஒக்கினாவர்களின் கோரிக்கைகட்கோ போராட்டங்கட்கோ அவர் செவிசாய்ப்பதில்லை. ஜப்பானிய ஊடகங்களும் போராட்டங்களை இருட்டடித்து மழுங்க வைக்கின்றன.
அமெரிக்க சார்பு ஜப்பானிய உயரடுக்குகளுக்கும் ஒக்கினாவா மக்களுக்குமிடையான நேரடி முரண்பாடாக இச் சிக்கல் வளர்ந்துள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாக ஜப்பான் உள்ளது.
சீனாவைச் சுற்றிவளைக்கும் அமெரிக்கத் திட்டத்துக்கும் இத் தளங்கள் தேவை. பூகோள அளவிலும் சீன-ரஷ்ய-ஈரானியக் கூட்டணிக்கெதிராக ஆசியாவின் பிரதான அமெரிக்க ஆதரவாளராகவும் கட்டற்ற இராணுவ நடவடிக்கைகளின் தளமாகவும் ஜப்பானும் ஜப்பானில் உள்ள அமெரிக்கத் தளங்களும் தேவைப்படுகின்றன.
படைத்துறையளவில், அமெரிக்கா, மத்திய கிழக்கிற் கண்டுள்ள பின்னடைவால், தவிர்க்கவியலாது மிகுதி ஆசியாவின் மீது அதன் கவனம் திரும்புகிறது. ஆசியா மீதான அமெரிக்க ஆவலை அதன் இராணுவ வலிமை தீர்மானிக்கிறது. மாறும் உலக ஒழுங்கில், யுத்தத்தையும் படைகளையும் சந்தைகள் தொடர்ந்த காலம் முடிந்து, சந்தைகளைப் படைகள் தொடரும் காலத்துள் நகர்கிறோம்.
மிகுந்த சிக்கலுக்குள்ளான தென் சீனக் கடற்பரப்பில், இந்தியாவும் ஜப்பானும் அமெரிக்காவும் நடத்தும் ‘மலபார் கூட்டு கப்பற்படை பயிற்சி’ இவ் வாரம் தொடங்கியது. இது சீனாவை மிரட்டும் ஒரு வழிமுறையாகவே நோக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகச், சர்ச்சைக்குரிய தீவுகட்கு உரிமை கொண்டாடுவதோடு, சீனாவைச் சீண்டும் செயல்களிலும் ஜப்பான் ஈடுபடுகிறது. இவ்வாறு, அமெரிக்காவின் கூட்டாளியாக நடப்பதோடு அமைதிப் பிராந்தியமான கிழக்காசியாவை மீளவியலா ஒரு யுத்தத்துட் தள்ளும் பணியை ஜப்பான் செய்யவும் கூடும்.
இச்சூழலில் அமெரிக்க-ஜப்பானிய நட்பு முக்கியமாகிறது. எனவே, சொந்த மக்களின் நலன்களா வெளியுறவுக் கொள்கைசார் நலன்களா என முடிவெடுக்க வேண்டிய நிலையில் மக்கள்-விரோத, அமெரிக்க நலன்சார் கொள்கைகளை ஜப்பான் நடைமுறைப்படுத்துகிறது.
ஒக்கினாவர்களின் தொடர்ந்தும் போராடுகிறார்கள். ஜப்பான் போன்ற முதலாமுலக நாடுகளும் எவ்வாறு மக்களை ஒடுக்கி மக்கள் விரோத நலன்களை முன்தள்ளுகின்றன என்பதை இப் போராட்டம் காட்டுகிறது.
பாதுகாப்பின் பெயராற் சொந்த மக்கள் துன்புறுவதைப் புறக்கணிப்பது, அப்பாதுகாப்புப் பற்றிய வினாக்களை எழுப்புவதோடு பாதுகாப்பின் தேவையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதென்பது இதுதான்.