அமெரிக்காவில் நவம்பர் 6-ல் நடந்த இடைத் தேர்தலில், பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மை வலு ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சியிடமிருந்து 26 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, செனட், பிரதிநிதிகள் அவை இரண்டிலும் குடியரசுக் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை குறைந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி என்று டிரம்ப் சொல்லிக்கொண்டாலும், இரு அவைகளிலும் பெரும்பான்மை குறைந்துவிட்டதால் தனது எஞ்சிய பதவிக் காலத்தில், கொள்கைகளை மறுபரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் டிரம்ப்.
அமெரிக்காவின் 36 மாநிலங்கள், பிரதேசங்களின் ஆளுநர் பதவிகளுக்கான முடிவுகளும் ஜனநாயகக் கட்சிக்கே அதிகம் சாதகமாக வந்திருக்கின்றன. அதிபர் தேர்தலில் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடிய புளோரிடா, அயோவா, ஒஹையோ மாநிலங்களில் குடியரசுக் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் விஸ்கான்சின், மிச்சிகன் மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து ஏழு மாநிலங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. சிறு நகரங்களிலும் கிராமப்புறப் பகுதிகளிலும் குடியரசுக் கட்சிக்கும், நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஜனநாயகக் கட்சிக்கும் ஆதரவு கிடைத்திருக்கிறது.
2016-ல் டிரம்ப் செய்த இன அடிப்படையிலான பிரச்சாரம் அமெரிக்க சமூகத்தில் ஊறிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தறிகெட்டு ஓடிவிடாமல் தடுக்கும் ஏற்பாடு 2019 ஜனவரியிலிருந்து செயல்படத் தொடங்கிவிடும். வரிகளை மேலும் குறைப்பது, வர்த்தகக் கொள்கைகளில் முக்கிய முடிவு என்று பல விஷயங்களில் டிரம்ப் அரசால் முன்பைப் போலத் தன் விருப்பம்போல் செயல்பட்டுவிட முடியாது.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கவிருக்கும் நான்சி பலோசி, டிரம்ப் அரசு கொண்டுவந்த சில சந்தேகத்துக்குரிய முடிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தத் தொடங்கவிருக்கிறார். 2016 தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட ராபர்ட் முல்லர் குழுவின் செயல்களை நான்சி ஆய்வுசெய்வார். ஆனால், அதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லை என்று கூறி அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கை எதையும் ஜனநாயகக் கட்சி இப்போதைக்கு எடுக்காது என்றே தெரிகிறது.
சாமானிய அமெரிக்கர்கள் எதிர்கொண்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம், மருத்துவ நலன், குடியேற்றம் ஆகியவை குறித்து அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இரு கட்சிகளும் அரசியல்ரீதியாக மோதிக்கொள்ளாமல், நாட்டின் முக்கிய பிரச்சினைகளை அமைதியாக அமர்ந்து பேசி கருத்தொற்றுமை காண வேண்டும் என்பது அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பு. அமெரிக்கர்கள் தங்கள் வாக்குச்சீட்டுகள் மூலம் டிரம்பின் யதேச்சதிகாரப் போக்குக்கு வேகத்தடை போட்டிருப்பது இந்தத் தேர்தலின் முக்கிய அம்சம்!
(The Hindu)