இது இல்லாதொழிக்கப்பட்டால், அது யாருக்குச் சாதகமானது, யாருக்குப் பாதிப்பானது, இது தமிழ் மக்களுக்குப் பாதகமானதொன்றா என்று பார்ப்பதற்கு அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் மூலமான மாகாண சபை முறை யாருக்கானது என்ற கேள்வியை நாம் முதலில் எழுப்ப வேண்டும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13ஆவது திருத்தம், இந்த நாட்டின் பெரும்பான்மையின மக்களையும் சரி, சுயாட்சி வேண்டிய சிறுபான்மையின மக்களையும் சரி திருப்திப்படுத்தவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில், சுயநிர்ணய உரிமையின்பாலான சுயாட்சியை வேண்டியதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையாகும். ஆனால் 13ஆம் திருத்தம் செய்தது என்ன? அது, இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்துக்குமென ஒரு மாகாண சபையை ஸ்தாபித்தது. வடக்கு-கிழக்குக்குத் தற்காலிகமானதோர் இணைப்பை ஏற்படுத்தியது. அந்த இணைப்பு முறைப்படி செய்யப்படாததன் விளைவுதான், 2006இல் ஜே.வி.பி-யினர் தாக்கல் செய்த மனுவில், இலங்கை உயர் நீதிமன்றம் வட-கிழக்கு இணைப்பானது அரசமைப்புக்கு முரணானதும், சட்டவிரோதமானதும், வலிதற்றதுமானதும் என்ற தீர்ப்பை வழங்கியதன் பாலாக வட-கிழக்கு பிரிவடைந்தது.
ஆகவே, இங்கு தீர்வு தேவைப்பட்டது, வடக்கு-கிழக்குக்கு தான். ஆனால், 13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை வடக்கு-கிழக்கு மாகாண சபைகளுக்கு ஒரே ஒரு தேர்தல் தான் நடந்தது. அது 2 வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதிலேயே வலுவில் இருந்தது. அதன் பின்னர், கிழக்கு மாகாண சபை 2008, 2012 என இரு தரமும், வடக்கு மாகாண சபை 2013இல் ஒரு தரமும் பதவிக்கு வந்தது. ஆகவே, 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்து ஏறத்தாழ 33 ஆண்டுகளில், வடக்கு-கிழக்கில் மொத்தம் 4 தடவைகளே மாகாண சபைத் தேர்தல்கள் நடந்து, மாகாண சபைகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டன. அதிலும் 32 ஆண்டுகளில் ஏறத்தாழ 2 ஆண்டுகள் வடக்கு-கிழக்கு மாகாண சபையும் 9 ஆண்டுகள் கிழக்கு மாகாண சபையும் 5 ஆண்டுகள் வடக்கு மாகாண சபையும் உயிர்பெற்றிருந்தன. ஆகவே, வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் அந்த மாகாணங்களில்தான் மிகக்குறைந்தளவு காலம் இயங்கின.
மறுபுறத்தில், 13ஆம் திருத்தம் மூலமான அதிகாரப்பகிர்வு அர்த்தமற்றது என்ற விமர்சனமும், அதிருப்தியும் தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக பதிவுசெய்துவருமொன்றாகும். ஒரு மிகைப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி சபையாக மாகாண சபைகளை ஸ்தாபித்தன என்பதைத் தாண்டி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு 13ஆம் திருத்தத்தினூடாக வழங்கப்படவில்லை.
இந்நாட்டின் பெரும்பான்மையின மக்களுக்குத் தேவைப்படாத, சிறுபான்மையின மக்களைத் திருப்தி செய்யாத 13ஆம் திருத்தம் ஏன் கொண்டுவரப்பட்டது என்ற கேள்விக்கு ஒரே பதில், இந்தியா. இந்தியாவின் தீவிர அழுத்தம் மட்டும்தான் ஜே.ஆர். அரசாங்கமாக இருக்கட்டும், தமிழ்த் தரப்பாக இருக்கட்டும், விரும்பியோ விரும்பாமலோ 13ஐ அமைதியாக சகித்துக்கொள்ளக் காரணம்.
எது எவ்வாறாயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13ஆம் திருத்தத்தினதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினதும் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. எழுத்து மூலமாக இலங்கை ஒரு பல்லின, பல மொழிகள் கொண்ட பன்மைத்துவ சமூகம் என்பதையும், ஒவ்வோர் இனச் சமூகத்துக்கும் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட, வேறுபட்ட கலாசாரம், மொழி அடையாளம் ஆகியன உள்ளன என்பதையும், எல்லாவற்றிலும் முக்கியமாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பிரதேசம் என்பதையும் இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ள ஒரு முக்கிய ஆவணம் இந்திய-இலங்கை ஒப்பந்தம்.
மேலும், இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுதான் தீர்வு என்பதை ஏற்றே மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. அதன் வாயிலாக அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாகவே 13ஆம் திருத்தம் மாறிப்போனது. அதன் பின்னரான அதிகாரப் பகிர்வு என்பது 13+, 13- என்று பேசப்படுவதை நாம் அவதானிக்கலாம். ஆகவே, இந்த வகையில் 13ஆம் திருத்தத்தின் முக்கியத்துவத்தை நாம் மறுத்துவிட முடியாது.
13ஆம் திருத்தத்தை தமிழ்த் தேசியவாதிகள் முற்றாக நிராகரிக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் நியாயங்களில் பல உண்மைகளும் உள்ளன. தனது அமைச்சரவையில் மாற்றங்களைக் கூட தான் செய்யமுடியாத நிலையில்தான் மாகாண முதலமைச்சரின் அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை கடந்த வடக்கு மாகாண சபையின் அனுபவத்திலிருந்து நாம் அறிந்துகொண்டோம்.
ஆகவே, 13ஆம் திருத்தம் என்பது தமிழ் மக்களின் அபிலாஷைகளின் ஒரு பகுதியைக் கூடப் பூர்த்தி செய்வதாக இல்லை. அதிகாரப்பகிர்வு மூலமான அரசியல் தீர்வு என்ற அடிப்படையைத் தாண்டி, 13ஆம் திருத்தம் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வாக அமையவில்லை.
தீவிர தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் 13ஆம் திருத்தம் இல்லாதொழிக்கப்படுவதை சாதகமாகவே பார்க்கக்கூடும். ஏனெனில், அதை அவர்கள் இலங்கையின் யதார்த்த நிலையின் மிகச்சரியான பிரதிபலிப்பாக பார்ப்பார்கள். எந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் இல்லாத ஒரு கட்டமைப்பை இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வாக வைப்பதை அவர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அந்த அர்த்தமற்ற கட்டமைப்பு களையப்படும் போது, உண்மை நிலை வெட்டவௌிச்சமாகும்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய கேள்வி வரும்போது, சாக்குப்போக்கு நியாயத்துக்குக் கூட மாகாண சபைகள் இருக்காது. அந்தவகையில் பார்த்தால், மாகாணசபை முறையை இல்லாதொழிப்பது என்பது அரசாங்கத் தரப்புக்குச் சாதகமற்றதொன்றே.
மறுபுறத்தில், 13ஆம் திருத்தம் ஸ்தாபித்த மாகாண சபைகள் இந்நாட்டின் பெரும்பான்மையினருக்குத் தேவையில்லாத ஒரு கட்டமைப்பு. அதனால்தான் இன்று சில “சிங்கள-பௌத்த” இனத் தேசியவாதிகள் மாகாணசபை முறை என்பது ஒரு தேவையற்ற ‘வௌ்ளை யானை’ என்கின்றனர். இங்கு இன்னொரு முரண் நகையாதெனில், அதிகாரப்பகிர்வு கேட்ட வடக்கு-கிழக்கைத் தவிர ஏனைய மாகாணங்களில்தான் மாகாணசபைகள் அதிக காலம் இயங்கியிருக்கின்றன. ஆனால் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஏறத்தாழ 32 ஆண்டுகளில், மாகாண சபை என்பது இலங்கை அரசியலின் முக்கிய கட்டமைப்பாக மாறியிருக்கிறது.
முன்பு உள்ளூராட்சி மன்றங்கள், அதற்கு மேலாக நாடாளுமன்றம் என்று கட்டமைந்திருந்த அரசியலில், இரண்டுக்கும் நடுவிலான கட்டமைப்பாக மாகாண சபைகள் உருவெடுத்தன. இன்று நாடாளுமன்ற அரசியலிலுள்ள சில குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் தமது அரசியலை மாகாண சபைகளில் தொடங்கியவர்களே. அவர்களுக்கு மாகாண சபைகள் ஒரு படிக்கல்லாக அமைந்தன என்றால் மிகையாகாது. இன்று நாடாளுமன்றத்தில் உள்ள குறிப்பிடத்தக்க இளைய அரசியல்வாதிகள் கூட, தமது அரசியல் வாழ்க்கையை மாகாண சபை ஊடாக ஆரம்பித்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் உள்ளூராட்சி மன்ற அரசியலில் நீண்ட காலம் ஈடுபட்டு வந்தவர்கள். ஆயினும் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடுவதற்கான வெற்றிடம் இல்லாமல் இருந்த பலருக்கு, மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றிலிருந்தான ஒரு “பதவி உயர்வாக” அமைந்திருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.
ஆகவே இன்றைய சூழலில், கட்சி அரசியலில் மாகாண சபையின் வகிபாகம் முக்கியமானதொன்றாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த மாகாணசபைகள் முறை ஒழிக்கப்பட்டால், இந்தப் பிரதான கட்சிகளில் மாகாண சபை உறுப்பினர்களாகப் பதவி வகிப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகும். இது கட்சி ரீதியான அரசியலில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும். இதற்குத் தமிழ்க் கட்சிகளும் விதிவிலக்கல்ல.
இன்று ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஓர் அனுகூலமான சந்தர்ப்பம் உண்டு. அது புதிய கட்சி என்பதால், அதற்கு ஏலவே மாகாண சபை அரசியலில் உள்ளவர்கள் என்று யாரும் கிடையாது. அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் உள்ளனர், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
ஆகவே மாகாண சபை முறையை இல்லாதொழிப்பதில் ஏனைய கட்சிகளை விட இவர்களுக்குச் சவால் என்பது குறைவானதே. ஆனால், அது நாடாளுமன்றம் செல்ல முடியாத அவர்களது கட்சியினரையும், உள்ளூராட்சி மன்றிலிருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது, அவர்களது கட்சியினரையும் கடும் விசனத்துக்கு உள்ளாக்குவதாக அமையலாம்.
13ஆம் திருத்தம் இருந்தாலும், இல்லாது போனாலும், நடைமுறையில் அது தமிழ்த் தேசிய அரசியலின் மீதான அதன் தாக்கம், மேற்சொன்ன அனைவருக்கும் பொதுவான கட்சி அரசியல் சிக்கலைத் தாண்டி, அடையாளப்பூர்வமானது மட்டுமே. இன்று தமிழ் மக்கள் முன்னிருக்கும் கேள்வி இதுதான், . ஒன்றுமே தராத 13ஆம் திருத்தம் இல்லாதொழிக்கப்படலாமா அல்லது ஒன்றுமே இல்லாததற்கு 13ஆம் திருத்தமாவது இருப்பது நல்லதா என்பதாகும்