இந்தக் கொடிய அரக்கனிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவதற்கு மருத்துவ வசதிகள், மருத்துவர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், மிகுந்த வசதி வாய்ப்பு உடைய ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மருத்துவ நுண்ணியல் நிபுணர்கள் போன்றவை தேவைப்படுகின்றன. இவைகள் இல்லாதபோது இவற்றை இறக்குமதி செய்யவும் நிபுணர்களை வரவழைத்து கொள்வதற்கும் பணம் தேவை. ஆனால் இந்தக் காலகட்டத்தில் மொத்த உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எந்த நாட்டிலும் இருந்து எதையுமே நாங்கள் பணம் இருந்தால் கூடக் கொண்டு வர முடியாது.
இவ்வாறு நிலைமைகள் இருக்கும்போது இலங்கையில் இஸ்லாமியர் ஒருவரின் உடலை அவர்களுடைய மத அனுஷ்டானங்களின் படி அடக்கம் செய்வது பற்றிப் பல்வேறுவிதமான வாதப்-பிரதிவாதங்கள், வன்முறையைத் தூண்டும் வகையிலான சொல்லாடல், வெறுப்பு பேச்சுகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படுவதையும் பகிரப் படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு இனக் குழுவுக்கும் அல்லது மதக் குழுவினருக்கும் அவர்களுடைய நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான சகல உரிமைகளும் உண்டு. அதை மற்றைய மதத்தவரோ இனத்தவரோ தடுக்க முடியாது. மதித்து நடக்க வேண்டும். அவரவர் மத, சமய, கலாசார விழுமியங்களை அல்லது நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது, இருக்கக்கூடாது.
இருந்தபோதும் காலத்தின் நிலை அறிந்து பிரச்சினைகளை, சவால்களை ஆராய்ந்து பார்த்து நுண் அறிவைப் பாவித்து அலசிப்பார்க்கும் தன்மை, திறன் நமக்கு இருக்க வேண்டும். நான் தொடக்கத்தில் கூறிய விதமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவரைச் சரியான முறையில், பாதுகாப்பாக, மற்றைவர்களுக்கு நோய் பரவா வண்ணமாக உடலைப் பொதிசெய்து, மத அனுஷ்டானங்கள் செய்து, பாதுகாப்பான முறையில் கிருமி வெளியே வரா வண்ணம் உடலை வைப்பதற்கு உரிய பெட்டிகள், பைகள் எம்மிடம் இப்போது உள்ளனவா என்று சிந்திக்க வேண்டும். ஐக்கிய இராச்சியத்தில் கூட டொக்டர் நவ்ஷாத் கான் சொன்னதன் பிரகாரம் உடலைப் பொதிசெய்யும் பையோ பாதுகாப்பாகக் கிருமி வெளியேறா வண்ணம் பாதுகாப்பாக அடைக்கும் பெட்டிக்குகூடத் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன என்று அவர் கூறுகிறார். ஐக்கிய இராச்சியத்தில் தட்டுப்பாடு நிலவினால் இலங்கை எவ்வாறு சமாளிக்கும்? இறக்குமதி செய்வதைப் பற்றிச் சிந்திக்கும் நேரம் இது அல்ல. இப்போது நாங்கள் இலங்கை மக்களாகச் சிந்திக்க வேண்டியது ஒன்றுதான். இந்தக் கொடிய நோய் பரவாமல் இருப்பதைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பதையே சிந்திக்க வேண்டும். இதற்கு அரசாங்கத்துக்கு நாம் எல்லா ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
அவரவர் சமய அனுஷ்டானங்களின் படி உடலைப் புதைக்கவோ எரிக்கவோ வேண்டுமென்றால் அதை யார் செய்வது? ஒரு குடும்பத்தில் உள்ள இறந்தவரின் சொந்த பந்தங்கள் அந்தப் பொறுப்பை எடுப்பார்களா? கட்டாயமாக எங்களால் அதைச் செய்ய முடியாது. காரணம் நாங்கள் அதற்கான பயிற்சிகளை எடுத்தவர்கள் அல்ல. மத அனுஷ்டானங்களின் படி அடக்கம் செய்ய வேண்டுமாயின் யாரோ ஒருத்தர், யாரோ பெற்ற பிள்ளை தான் இந்தவேலையைச் செய்ய வேண்டும். அப்படி நாங்கள் எதிர்பார்ப்பது நியாயமாகுமா? அவருக்கும் குடும்பம் உண்டு, அவருக்கும் தொற்று ஏற்படலாம், அவரும் மரணிக்கலாம். கட்டாயமாக உடலை அடக்கம் செய்வது கடைநிலை ஊழியர்கள் என்பதை நாங்கள் ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம்.
ஆகவே, இப்போது நாங்கள் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடக்கும் என்று ஊகித்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யும்போது அதிகளவான பணத்தை சுகாதாரத்துக்கும் மருத்துவத்துக்கும் மருத்துவ வசதி வாய்ப்புகளுக்கும் ஆய்வு கூடங்களுக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் செலவிடும் படியும், அவ்வாறான ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் படியாக கல்வியின் தரத்தை உயர்த்தும் படியும் கல்வி வசதி வாய்ப்புகளை மேம்படுத்தும் படியும் பணத்தை ஒதுக்கீடு செய்யக் கேட்க வேண்டும்.
ஆனால், தற்போது இலங்கை அரசுக்கு எம்மாலான சகல ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும். அதை விடுத்து இதை இனப்பிரச்சினையாகவோ மதபிரச்சினையாகவோ மாற்ற முனைந்தால் நாம் எல்லோரும் கொரோனா வைரஸ் தொற்றால் மடிய வேண்டி வரும்.