(கே. சஞ்சயன்)
“இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை.
வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள (அதிகாரபூர்வமாக அல்ல) ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், சிவசக்தி ஆனந்தனும் இந்தக் குற்றச்சாட்டை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரசாரத்தை முறியடிப்பதில், காட்டும் தீவிரத்தில் இருந்தே இதை உணர முடிகிறது.
ஏனென்றால், இந்த விவகாரம் உள்ளூராட்சித் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்ற அச்சம் அவர்களிடம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சிவசக்தி ஆனந்தன் இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்போது, அதை யாரும் பொருட்படுத்தியிருக்கவில்லை.
இப்போதுதான், அவரது குற்றச்சாட்டைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், “வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூட்டமைப்புக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று பிரச்சினையை எழுப்பத் தொடங்கியிருக்கிறார்.
“இதுகுறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்; இல்லையேல் வழக்குத் தொடுப்பேன்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதனால்தான் இன்றைய அரசியலில், 20 மில்லியன் ரூபாய் முக்கியமானதொரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சிவசக்தி ஆனந்தன் தவிர, ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 20 மில்லியன் ரூபாய், ஒன்றும் தனிப்பட்ட ரீதியாக வழங்கப்படவில்லை. அது சிறப்பு நிதி ஒதுக்கீடாகவே வழங்கப்பட்டிருக்கிறது.
அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள், நிறுவனங்களின் வேலைத் திட்டங்களுக்காக இந்த நிதி பகிரப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகங்கள் ஊடாகவே, இதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் ஊடாகவே, நிதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் இலஞ்சம் பெற்றனர் என்பது போன்ற தோற்றப்பாட்டைத் தேர்தல் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உருவாக்க முனைகிறது.
கூட்டமைப்பும் அப்படியொரு தோற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்றுதான் அச்சம் கொண்டிருக்கிறது. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல், கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டதுதான் பிரச்சினை. அதுவும், ஏனைய உறுப்பினர்களுடன், சிவசக்தி ஆனந்தனுக்கும் இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினையை அவர் கிளப்பியிருக்க மாட்டார். தம்மைத் தவிர ஏனைய 15 உறுப்பினர்களும் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தான், அவர்களுக்கு 20 மில்லியன் ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது என்பதுதான் சிவசக்தி ஆனந்தனின் வாதம்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், தோற்கடிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கவில்லை. இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டு அரசாங்கமே பதவியில் இருக்கிறது. போதிய பெரும்பான்மை வாக்குகள் இருக்கும்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்காக அரசாங்கம் பேரம் பேசியிருக்க வேண்டிய தேவை இல்லை.
வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தால், 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்று பேரம் பேசப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை.
ஆனால், வரவுசெலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரித்தது உண்மை. எனினும், அவ்வாறு ஆதரிப்பதில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விருப்பமின்மை இருந்ததும் உண்மை.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அதை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே கூறியிருந்தார். தமது கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதால் மட்டுமே, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் கூறியிருந்தார். 20 மில்லியன் ரூபாய் பேரத்துக்கு இணங்கியிருந்தார்கள் என்றால், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயை மூடிக்கொண்டு கையை உயர்த்தி விட்டுப் போயிருப்பார்கள்.
கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்யும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வைப் பொறுத்தவரையில், எப்படியாவது அவர்களைச் சந்திக்கு இழுத்து விட வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருக்கிறது. அதனால்தான், இந்தப் பிரச்சினையை இப்போது தீவிரமாக எழுப்பி வருகிறது. இதனைச் சட்டரீதியாகக் கையாள்வதானால், சிவசக்தி ஆனந்தன், உடனடியாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருக்கலாம். அவ்வாறு நிரூபிக்க முடியாது என்பதால்தான், அவ்வாறான நகர்வை அவர் மேற்கொள்ளவில்லை.
இன்றும் கூட, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிப்பது போல, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வோம் என்று எச்சரிக்க, ஈ.பி.ஆர்.எல்.எவ் தயாராக இல்லை. ஏனென்றால், இதை இலஞ்சமாக நிரூபிக்க முடியுமா என்ற பிரச்சினை உள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க, 20 மில்லியன் ரூபாய் பேரம் பேசப்பட்டது உண்மையென்றால், ஏன் தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்குமாறு கோரியிருக்கலாம் என்ற கருத்தும் சிலரிடம் உள்ளது. உதாரணத்துக்கு, காணாமல்போனோர் பிரச்சினை, காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை முன்வைத்துப் பேரம் பேசியிருக்கலாம் என்பது அவர்களது கருத்து. ஆனால், பேரம் பேசுதல் என்பது, சாத்தியமான இடங்களில், சாத்தியமான கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தான், சாத்தியமாகக் கூடியது.
விடுதலைப் புலிகளின் காலத்திலும், சில பேரம் பேசல்கள் நிகழ்ந்தன. அப்போது ஒருபோதும், அவர்கள் தமிழீழத்தைத் தாருங்கள்; இராணுவத்தினரை வடக்கில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கோரவில்லை. ஏனென்றால், அது சாத்தியமற்றது என்பது அவர்களுக்குத் தெரியும். ஓரளவுக்கு சாத்தியமாகக் கூடிய சில விடயங்களை முன்வைத்து அவர்கள் பேரம் பேசியிருந்தனர். அத்தகைய சில பேரம் பேசல்கள் வெற்றியளித்ததும் உண்டு.
குறிப்பாக போர்க்கைதிகள் விடுதலை, தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி, சில நிதி ஒதுக்கீடுகள் என்பன மாத்திரமன்றி, ஆயுதங்களை வழங்கியமை கூட நடந்ததை மறந்துவிட முடியாது. அதுபோல, வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கு கூட்டமைப்பு பேரம் பேசியிருந்தது உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக சிக்கலான, நீண்டகாலப் பிரச்சினைகளை முன்வைத்து பேரம் பேசியிருக்க முடியாது. நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றையே முன்வைத்திருக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதால் என்ன பயன், பிரதேச அபிவிருத்திக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வி, வாக்காளர்களில் ஒரு பகுதியினரிடம் இருக்கிறது. தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை மாத்திரம் எல்லா வாக்காளர்களும் மனதில் கொண்டவர்களில்லை. நடைமுறைப் பிரச்சினைக்கான தீர்வுகளை எதிர்பார்ப்பவர்களும் நிறையவே உள்ளனர்.
அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. அத்தகைய நோக்கில் அவர்கள் 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டைப் பயன்படுத்த எண்ணியிருக்கலாம்.
அதேவேளை, ஏனைய 210 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படாத, நிதி ஏன் வடக்கு, கிழக்கில் உள்ள 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்டது என்ற கேள்வியை ஈ.பி.ஆர்.எல்.எவ் எழுப்பியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குக்கு ஏனைய பகுதிகளை விட சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் தர வேண்டும்; கூடுதல் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்று தமிழர் தரப்புக் கோரிவருகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஏன், சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுப்பியிருக்கின்ற கேள்வி, அவர் எந்த அணியில் இருக்கிறார் என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.
அதேவேளை, தெரிந்தோ தெரியாமலோ, கூட்டமைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் ஓர் உதவியையும் செய்திருக்கிறது. அபிவிருத்தித் திட்டங்களுக்கு தாமும் நிதியை ஒதுக்குகிறோம் என்ற பட்டியலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது பொது அரங்கில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரையில் அதுபற்றி அறியாமல் இருந்தவர்களுக்கு அந்தச் செய்தி போய்ச் சேரத் தொடங்கியிருக்கிறது.
சாதாரணமாக அவர்கள் இதனை வெளிப்படுத்தியிருந்தால் மக்களிடம் எடுபட்டிருக்காது. அந்த நிலையை ஈ.பி.ஆர்.எல்.எவ் மாற்றியிருக்கிறது.