சாதிய அணுகுமுறை, பிரதேசவாதம், மதவாதம் என்று தொடங்கி, சமூக மேம்பாட்டுக்கு ஒப்பில்லாத அனைத்துக் கட்டங்களையும் அவர்கள் துணைக்கு அழைப்பார்கள். கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், அதற்குப் பின்னரான நாள்களிலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, அசிங்கமான வழிகளில், இதைப் பதிவு செய்து வருகின்றது.
பொதுத் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் சக வேட்பாளர்களுக்குள் காணப்பட்ட போட்டி, எல்லாவற்றையும் தாண்டி முன்னுக்கு நின்றது. ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தி, தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று செயற்பட்டார்கள். மற்றவர்களை வெட்டி வீழ்த்த நினைத்த பலரும், தோல்வியடைந்து புலம்பும் நிலையும் ஏற்பட்டது.
தமிழ்த் தேசியம், ஒற்றுமை, ஓரணித்திரட்சி என்று தேர்தல் பிரசாரக் காலங்களில் கூவிக்கொண்டு திரிந்த கூட்டமைப்பினரின் தேர்தல் கால நடவடிக்கைகள், எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி, பதவிகளுக்கான போட்டியாகவே பதிவானது.
இவர்களிடத்தில், இன விடுதலை குறித்த எந்தவித அடிப்படையும் இருந்திருக்கவில்லை. அப்படி ஏதாவது நல்ல நோக்கங்கள் இருந்திருந்தால், வேட்பாளர் தெரிவின் போதும், அதன்பின்னரான பிரசாரக் காலங்களிலும் இவர்கள் வெளிப்படுத்தி இருப்பார்கள்.
அத்தோடு, கட்சியை கைப்பற்றும், ஆக்கிரமிக்கும் ஒரு கருவியாகவும் தமிழரசுக் கட்சிக்காரர்கள் பொதுத் தேர்தலைக் கையாண்டார்கள். ஜனநாயக ரீதியான கருத்து முரண்பாடுகள், கட்சிக்குள் ஏற்படுவது வழக்கமானது. ஆனால், கட்சி தோற்றுப்போனாலும் பரவாயில்லை, கட்சியைக் கைப்பற்றுவதற்காக, வெளித்தரப்புகளுடன் இணங்கி, சதிகளில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது.
சொந்தக் கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் எதிராகவே, ஊடக மாபியாக்களுடன் ‘டீல்’ போட்டவர்களும் அதற்காகப் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றவர்களும் தேர்தல் காலத்தில் வெளிப்பட்டார்கள். இன விடுதலையைக் கோரும் கட்சியொன்றின் தொண்டர்களும் முக்கியஸ்தர்களும் குடிவெறி ‘ரவுடி’க் கும்பலால் நிரம்பியிருப்பது எவ்வளவு சோகமானது? அதுவும், அத்தனை ஊடகங்களும் சூழ்ந்திருக்கின்ற போது, அதன் உணர்வுகூட கொஞ்சமும் இல்லாமல், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு நாளில், தூசண வார்த்தைகளைப் பொது உரையாடல் மொழிபோல கையாண்ட காட்சிகளையெல்லாம் காண முடிந்தது.
ஒரு கட்சி இப்படியென்றால், அதற்கு மாற்று என்று தங்களைத் தொடர்ச்சியாக முன்னிறுத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திக் கொண்டிருப்பது, அந்தரங்கத்தை பொதுவெளியில் காட்சிப்படுத்தும் அரசியலையாகும். முன்னணியில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அந்த இயக்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் பொதுவெளியில் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்கிற எந்தவித அடிப்படை அறிவும் இன்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கட்சிக்குள், இயக்கத்துக்குள், அமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் எழுவது இயல்பானது. அதுவும், அரசியல் ரீதியான நடவடிக்கைகளின் போது, ஜனநாயகத்தின் உண்மையான வழிகளை உறுதிசெய்வதற்கு கருத்து மோதல்கள்தான் உதவுகின்றன. ஆனால், அந்தக் கருத்து மோதல்களை ஒரு குற்றமாகக் காட்டி, மற்றவர்களை அகற்றும் அரசியலைச் செய்வது சிறுபிள்ளைத்தனமானது. முன்னணிக்குள் நடந்து கொண்டிருப்பது அதுதான்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் எதிர் மணிவண்ணன் என்கிற நிலையொன்று பொதுத் தேர்தல் காலத்திலேயே முன்னணிக்குள் உருவாகி வெளிப்பட்டுவிட்டது. அதைத் தேர்தல் முடியும் வரை காட்டிக் கொள்ளாமல்த் தவிர்ப்பதில் இருதரப்பும் அவர்களின் இணக்கத்தரப்புகளும் மும்முரமாக இருந்தன.
ஆனால், தேர்தல் வெற்றி, ‘கஜன்களை’ முன்னுக்கு நகர்த்திய போது, மணிவண்ணனை வெட்டிவிடும் முடிவுக்கு, எந்தவித தயக்கமும் இன்றி வந்தார்கள். அதுதான், ஒரு கட்சிக்கான ஜனநாயக அடிப்படைகள் ஏதும் இன்றி, மணிவண்ணன் வெளியேற்றப்படவும் காரணமாகும்.
மணிவண்ணன் வெளியேற்றப்பட்ட நிகழ்வை நேரடியாகச் சொல்வதாக இருந்தால், ‘முன்னணி என்பது கட்சியல்ல; காங்கிரஸுக்கான முகமூடி. முகமூடியாக இருப்பவர்களிடம் என்றைக்கும் அதிகாரம் இருப்பதில்லை. முகத்திடம்தான் அதிகாரம் இருக்கும். முகமூடியின் தேவை முடிந்ததும், அதைக் கழற்றி வீசிவிடுவார்கள்’. இதுதான், மணிவண்ணன் விடயத்தில் நடத்திருக்கிறது. மணிவண்ணன் போன்றவர்கள், காங்கிரஸுக்கான முகமூடியாக ஒரு கட்டம் வரையில் தேவைப்பட்டார்கள். தேவை முடிந்ததும் தூக்கி எறியப்பட்டார்கள்.
அதுபோக, காங்கிரஸின் வரலாறு என்பது, பொன்னம்பலங்களைத் தாண்டியது இல்லை. பொன்னம்பலங்களுக்கு அச்சுறுத்தலாக யார் எழுந்தாலும், அவர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இப்போது, நடந்திருப்பதும் அதுதான். மணிவண்ணன் போன்றவர்கள், தாங்கள் முகமூடியாக இருப்பது தெரியாமல், தாங்கள்தான் முகம், அதிகாரம் பெற்றவர்கள் என்று நினைத்துச் செயற்பட்டமை, காங்கிரஸின் அரசியலைக் கேள்விக்கு உள்ளாக்கும் செயல். அவ்வாறான செயல்களை, பொன்னம்பலங்கள் அனுமதிப்பதில்லை.
இன்னொரு கட்டத்தில், இதை இன்னும் வெளிப்படையாகப் பேசுவதானால், கஜேந்திரகுமாரும் மணிவண்ணனும் பேசிக்கொள்ளும் ஒலிப்பதிவு, அண்மையில் சமூக ஊடகங்களில் பெரும் சக்கைபோடு போட்டது. அது, மணிவண்ணனுக்கு எதிரான தரப்பால் வெளியிடப்பட்டது. முன்னணியின் தலைவரும் தேசிய அமைப்பாளரும் இன்னும் சில முக்கியஸ்தர்களும் உரையாடியபோது, அதை யாரோ ஒருவர் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அந்த ஒலிப்பதிவு, சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த உரையாடல், ஒலிப்பதிவு செய்யப்படுவது தொடர்பில் மணிவண்ணனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது, ஒலிப்பதிவைக் கேட்கும் போது தெரிகின்றது. அவர் கஜேந்திரகுமாரிடம், முன்னணியின் கடந்த கால விடயங்கள் குறித்தும், முக்கியஸ்தர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசுகிறார். கிட்டத்தட்ட அது, கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையிலான அந்தரங்கமான உரையாடல். அப்படிப்பட்ட உரையாடலை, ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளும் தேவை ஏன் ஏற்படுகின்றது? அதுவும், அந்த உரையாடலில் சம்பந்தப்படும் மணிவண்ணனுக்கே தெரியாமல், பதிவு செய்யும் தேவை ஏன் வருகின்றது? அதைப் பதிவு செய்தவர்களின் நோக்கம் என்ன? இன்றைக்கு அதை வெளியிட்டு, அதை முன்வைத்து அரசியல் பேசலாம் என்று, துணிவுபெற வைப்பது எது? என்கிற கேள்விகள் எழுகின்றன.
முன்னணியில் உள்ளவர்கள், ஒருவரை ஒருவர் அச்சுறுத்தலாக உணர்ந்துகொண்டுதான், தமிழ்த் தேசிய அரசியலில் தங்களை, நம்பிக்கையான அரசியல் தரப்பாக முன்மொழிகிறார்களா? கட்சிக்குள் நடக்கும் அந்தரங்க உரையாடலையே, முரண்பாடுகளுக்கான ஊக்கியாகவும் சாட்சியாகவும் மற்றவர்களைப் பொதுவெளியில் காட்டிக் கொடுக்கும் கருவியாகவும் மாற்றும் அளவுக்கான நடைமுறை என்பது, எந்த அரசியல் ஒழுக்கத்தில் இருந்து வருகின்றது என்பதை, ‘கஜன்கள்’ வெளிப்படுத்த வேண்டும். இப்படியான அரசியல் ஒழுக்கம், நாகரிகம், செல்நெறி உள்ளவர்கள்தான், தமிழ்த் தேசிய அரசியலைத் காப்பாற்றும் ‘ஆபத்பாண்டவர்’ என்று நம்ப வைப்பதற்காகப் புறப்பட்ட தரப்புகளாக உள்ளன.
தென் இலங்கையில், ராஜபக்ஷர்கள் பெரும்பலத்தோடு இருக்கிறார்கள். அவர்களிடம், கேள்விகளுக்கு அப்பாலான அதிகாரம் சேர்ந்திருக்கின்றது. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியல், தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதுவும், தீர்க்கமான சிந்தனைகளும் அதற்கான செல்நெறியும் உள்ளவர்களால் நிரம்ப வேண்டும். மாறாக, பதவி ஆசை என்கிற வெறியோடு அலையும் கூட்டத்தால், தமிழர் அரசியல் ஆக்கிரமிக்கப்படுவது, முள்ளிவாய்க்காலைத் தாண்டிய பின்னடைவாகும்.
‘அரசியல் அறம், அர்ப்பணிப்பு என்பதெல்லாம், சும்மா வாய் வார்த்தைகள்; பதவியும் அதிகாரமும்தான் ஒற்றை இலக்கு. அதற்காக எவ்வளவு கீழிறங்கியும் செயற்படுவோம்’ என்கிற தோரணையிலான அரசியல் நெறியொன்றுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். முதலில், அடிப்படை அறத்தையும் ஒழுக்கத்தையும் தமிழ்த் தேசியத்தின் பேரால் கட்சி அரசியல் செய்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்குத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் காலமும் முன்னணியின் தேர்தலுக்குப் பின்னரான காலமும் பெரும் சாட்சிகளாகும்.