இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஏப்ரல் 4 இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், ஏப்ரல் 6 வரை தங்கியிருந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி அருணி அமசூரிய உள்ளிட்ட தரப்பினரை சந்திப்பார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வரும் நரேந்திர மோடி, அனுராதபுரத்துக்குச் சென்று ஸ்ரீமகா போதியை வழிபடுவார். அத்துடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்.
இதற்கிடையே, தமிழ் தரப்புகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். ஏனைய முக்கியஸ்தர்களும் மோடியை சந்திப்பார்கள் என கூறப்படுகின்றது. அதுமட்டுமன்றி, இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் இரு தரப்பினரும் கைச்சாத்திடவுள்ளனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், இதற்கு முன்னர் 1987 ஜூலை 29அன்று அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இடையில், ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதனூடாக, மாகாண சபைகள் நிறுவப்பட்டன, வடகிழக்கு மாகாண சபையும் உருவாக்கப்பட்டது. எனினும், தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஜே.வி.பியின் (மக்கள் விடுதலை முன்னணி) வழித்தோற்றலாகும். அந்தக் கட்சி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கால், வடகிழக்கு, வடக்கு, கிழக்காகப் பிரிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காப்பது பிரதான அம்சங்களில் ஒன்றாகும். ஆகையால், ஒரு நாட்டின் இறைமைக்குள் இன்னொரு நாடு, தலையிடாது என்பதே உண்மை.
இந்தியாவின் குழந்தையான மாகாண சபை, தற்போதும் செயற்படாது உள்ளது. அந்த மாகாண சபையே, ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த ஓரளவுக்கேனும் சொல்லக்கூடிய தீர்வாகும். எனினும், கடந்த ஆட்சியாளர்கள், காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்காமலே இருந்தன.
மோடியை, தமிழ்த் தரப்பினர் சந்திக்கும் போது, மாகாண சபைத் தேர்தலைக் கட்டாயமாக வலியுறுத்துவார்கள். எனினும், முந்திக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசாங்கம், இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளது. இதனை அரசாங்க பேச்சாளர் நலிந்த திஸாநாயக்க, களுத்துறையில் வைத்து, தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையிலான நிகழ்ச்சி நிரலில், 13ஆவது திருத்தம் தொடர்பில், தான் அறிந்த வகையில் உள்ளடக்கப்படவில்லை என அமைச்சர் பிமல் ரத்னாயக்க, யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்து விட்டார்.
ஆக, மோடி வருமுன்னே அரசாங்கம், மாகாண சபை தேர்தல், இந்தியாவின் குழந்தையான 13ஆவது திருத்தம் ஆகியவற்றுக்கு அரசியல் ‘செக்’ வைத்து விட்டது என்பதே உண்மையாகும்.
(Tamil Mirror)