கொரோனா வைரஸின் தொற்றுப் பரவல், மீண்டும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் போது, பொது மக்களைப் போலவே அரசாங்கமும் அதிகாரிகளும் கொவிட்-19 நோய், இனி நாட்டைத் தாக்காது என்பதைப் போன்றதோர் அலட்சியப் போக்கில் தான், செயற்பட்டு வந்தனர். ஆளும் கட்சி அரசியல்வாதிகள், கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தியதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் புகழ்ந்து பாராட்டிக் கொண்டு இருந்தனர்.
“பிரச்சினை தீரவில்லை; கவனமாக இருக்க வேண்டும்” என, சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் பிரதானி டொக்டர் சுதத் சமரவீர கூறிக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையிலேயே, ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி, மினுவங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில், பெண் ஊழியர் ஒருவரில் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஓரிரு நாள்களில், அந்தத் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மத்தியில், கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்தது.
“கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம்; உலகத்துக்கே முன்னுதாரணமாக இருக்கிறோம்” என, அரச தலைவர்களும் அதிகாரிகளும் மார்தட்டிக் கொண்டு இருந்தார்களே அல்லாமல், ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் கடமையாற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில், ஆங்காங்கே பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள, எவரும் சிந்திக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காவதைத் தடுத்திருக்க முடிந்திருக்கும்.
அதைத்தொடர்ந்து, கொவிட்-19 நோய், பேலியகொட மீன் சந்தையின் மூலம், நாடு முழுவதிலும் பரவியிருக்கிறது.
இவ்வாறு, கொவிட்-19 நோய் வேகமாகப் பரவியதால், ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி 3,500 ஆக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஆறு வாரங்களில் சுமார் 17,000ஐயும் கடந்துள்ளது. இதன் விளைவாக, நோயால் இறப்போரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது. மரணிப்போரின் உடல்களைத் தகனம் செய்யும் பிரச்சினை, மீண்டும் மேலெழுந்து வர, இதுவே பிரதான காரணமாகியது.
கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல், கொவிட்-19 நோயாளிகள் பற்றிய செய்திகள், நாளாந்தம் வரவே, நோயால் இறப்பவர்கள் பற்றிய முடிவை எடுக்க வேண்டிய நிலை, அரசாங்கத்துக்கு உருவாகியது. அதன்படி, கொவிட்-19 நோயாளிகளின் உடல்கள், தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சு முதலில் அறிவித்தது.
முஸ்லிம் சமயம், அரசியல் சார்ந்த தலைவர்கள், இந்த விடயத்தில் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள்களை அடுத்து, மார்ச் 27ஆம் திகதி, சுகாதார அமைச்சு வெளியிட்ட வழிகாட்டல்களில், தகனம், அடக்கம் செய்தல் ஆகிய இரு முறைகளையும் ஏற்றுக் கொண்டு இருந்தது.
இதை விளக்கி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து இருந்தார். அந்த காணொளி, இன்னமும் சில இணையத்தளங்களில் இருக்கிறது. ஆனால், மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் நபர், கொவிட்-19 நோயால் இறந்தபோது, இந்த வழிகாட்டல்களுக்கு முரணாகத் தகனம் செய்யப்பட்டார். இதையடுத்து, சுகாதார அமைச்சு, மார்ச் 31ஆம் திகதி, மற்றொரு வழிகாட்டல் தொகுதியை வெளியிட்டது. அதில், கொவிட்-19 நோயால் உயிரிழப்பவர்கள், தகனம் செய்யப்படுவர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலில், அடக்கம் செய்வது மற்றும் தகனம் செய்வது ஆகிய இரண்டையும் அறிவித்த டொக்டர் அனில் ஜாசிங்க, புதிய வழிகாட்டலுக்கு ஏற்ப, தமது விளக்கத்தையும் மாற்றிக் கொண்டார்.
“உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்கள், முடிவானவை அல்ல; அந்நிறுவனம் நோயைப் பற்றி இன்னமும் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது” என்று கூறிய டொக்டர் ஜாசிங்க, கொவிட்-19 நோயால் இறப்பவர்களின் உடல்களைப் புதைப்பதால், மண் மாசுபடும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.
மார்ச் 27ஆம் திகதி, அரசாங்கம் வெளியிட்ட வழிகாட்டல்களை, ஏன் மாற்றிக் கொண்டது என்ற கேள்வி, இங்கே எழுகிறது. அப்போது, உலக சுகாதார நிறுவனம் சடலங்களைப் புதைப்பதையும் அங்கிகரித்து இருந்தது. அதுமட்டுமல்லாது, 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொவிட்-19 நோயால் உயிரிழப்போரின் சடலங்கள் புதைக்கப்பட்டும் வந்தன. அந்த நாடுகள் எவற்றிலும், அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, அரசாங்கத்தின் இரண்டாவது வழிகாட்டி, எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பது தெளிவாகவில்லை.
இந்த நிலையில், அரச சார்பற்ற நிறுவனமொன்று, இதற்கான காரணத்தை அனுமானித்து வெளியிட்டு இருந்தது. அதாவது, மார்ச் 26, 27, 28 ஆகிய தினங்களில் அட்டுளுகம, சிலாபம், புத்தளம், அக்குறணை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாச் சில முஸ்லிம் நபர்களையும் குடும்பங்களையும் கொரோனா வைரஸ் தொற்றுப் பீடித்திருந்தது.
இந்தப் பிரச்சினைகளின் போது, சில முஸ்லிம்கள் நேர்மையற்று நடந்து கொண்டமை உண்மை தான். ஆனால், சில ஊடகங்கள் நோயாளிகளின் இனத்தை அடையாளப்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலொன்றை ஆரம்பித்தன. இதன் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு வழங்கும் தண்டனையாக, சடலங்களை எரிக்கும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என, அந்த அரச சார்பற்ற நிறுவனம், தனது சந்தேகத்தை வெளியிட்டு இருந்தது.
இந்த விடயத்தில், முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதில் எந்தவித தவறும் இல்லை. அதை இனவாதம் என்று கூற முடியாது. ஆனால், விஞ்ஞானபூர்வமாகவே முடிவு எடுக்க வேண்டும் என்ற வாதத்தையும் குறை கூற முடியாது. எனினும், அவ்வாறு கூறுவோர் சடலங்களை அடக்கம் செய்யக்கூடாது என்று கூறுவதற்குப் போதிய ஆதாரங்களை முன்வைப்பதில்லை. அதற்கான விஞ்ஞான அறிவும் அவர்களிடம் இல்லை.
பொதுவாக, வைரஸ் கிருமிகள் உயிருள்ள கலங்களில் மட்டுமே நிலைத்திருக்கும்; பெருகும். ஏனைய பொருள்களில், சில மணித்தியாலங்களோ சில நாள்களோ மட்டுமே உயிர்வாழும். இது சாதாரண உயிரியல் வகுப்புகளில் கற்றுக் கொடுக்கும் பாடமாகும். கொரோனா வைரஸூக்கும் இது பொருந்துகிறது.
கொவிட்-19 நோயாளி இறந்தவுடன், அவரது உடலின் கலங்கள், உயிரற்றவை ஆகிவிடுகின்றன. அக்கலங்களிலும் வைரஸூக்கு குறுகிய காலமே நிலைத்திருக்க முடியும்.
அதேவேளை, இவ்வாறு உயிரிழக்கும் ஒருவரது உடலைத் தகனம் செய்வதற்கோ அடக்கம் செய்வதற்கோ முன்னர் பொலித்தீன் உறையொன்றில் போட்டு, காற்றுப் புகா வண்ணம் அடைக்கின்றனர். உடல் அடக்கம் செய்யப்பட்டதன் பின்னர், அந்த உறை சிதைந்து போகும் வரையிலான நீண்ட காலம் வரை,அதற்குள் வைரஸூகள் உயிர்வாழும் என்பது, இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இறந்தவரின் உடல் பழுதடைந்து, நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்பது மற்றொரு வாதமாகும். மேற்படி உறை சிதையும் வரை அது நிகழாது. அதேவேளை, இதுவரை காலமும் ஏனைய நோய்களாலும் விபத்துகளாலும் உயிரிழந்து புதைக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்து, கிணறுகளுக்கும் நீரோடைகளுக்கும் வடிந்த அசுத்த நீரையா மக்கள் இதுவரை குடிக்கவும் குளிக்கவும் பாவித்திருக்கிறார்கள்?
நாட்டில் நடப்பது, விஞ்ஞானம் தொடர்பான விவாதம் அல்ல. இது இனவாதத்தைப் பாவித்து நடத்தும் அரசியலாகும். மார்ச் மாதம் 27ஆம் திகதி, அரசாங்கம் உடல்களைப் புதைக்க அனுமதி வழங்கியபோது, இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏனெனில், அது அரசாங்கத்தின் முடிவாக இருந்தது. அந்த முடிவு, மாறாமல் இருந்திருந்தால் இப்போதும் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை.
ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி ‘தெரண’ தொலைக்காட்சியில், தற்போதைய நீதி அமைச்சர் அலி சப்ரி உரையற்றும் போது, “கொவிட்-19 நோயால் மரணிக்கும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்ய வேண்டும்” எனக் கூறினார். அப்போதும் எவரும் எதிர்க்கவில்லை. ஏனெனில், அப்போது பொதுஜன பெரமுனவின் பொதுத் தேர்தலுக்காக அலி சப்ரியும் பிரசாரங்களில் ஈடுபட்டு இருந்தார்.
அன்றே, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களைச் சுட்டிக் காட்டி, சடலங்கள் விடயத்தில் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுமாறு, ஜனாதிபதி கோட்டாபயவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது; அதையும் ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏனெனில், அப்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்தை ஆதரிப்பது சகலரும் அறிந்த விடயமாக இருந்தது.
ஐ.தே.க., ஐ.ம.ச., ம.வி.மு தலைவர்களோ முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இல்லை. சில நாள்களுக்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச முற்பட்ட போது, ஆளும் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். இது, இனவாத அரசியல்; அரசியல் இனவாதம் ஆகும். எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம்கள், பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியுமா என்பது சந்தேகமே!