இதுதான் அன்றும் பண்டா – செல்லா ஒப்பந்தத்துடன் கண்டி யாத்திரையாக இருக்கட்டும், தனிச் சிங்களச் சட்டமாக இருக்கட்டும், பண்டாரநாயக்காவின் படுகொலையாக இருக்கட்டு;ம் எல்லாம் இந்த வகையானதே. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இல்லாமல் செய்ய பிரேமதாச, ஜேவிபியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரகட்சியும் செயற்பட இதனை ‘தியாக” திலீபன் உண்ணாவிரதம் இருந்து ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்தல் வரைக்கும் பேரினவாதத்துடன் குறும் தேசியவாதமும் இணைந்தே செயற்பட்டிருக்கின்றது.
இன்றும் தேரரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்த ‘தமிழ்’ தரப்பின் செயற்பாடுகள் இன்னொரு சிறுபான்மை இனத்துடனனான வேண்டத்தகாத சம்பவங்களின் வெறுப்புகளின் வெளிப்பாடகவே பார்க்கலாம். தனது சக சிறுபான்மை இனத்தை போட்டி சமூகமாக பார்க்காமல் பகை சமூகமாக பார்க்க வேண்டும் என்ற பேரினவாதத்தின் விருப்பத்தை செயற்படுத்தி நிற்கும் செயற்பாடுகளின் ஒரு வடிவமே இது.
இந்த வேண்டத்தகாத சம்பவங்கள் தமிழ், முஸ்லீம், சிங்கள தரப்புகளில் இருந்து வந்த போதெல்லாம் அந்தந்த சமூகங்களில் உள்ள பெரும்பான்மையினர் இதனை ஆதரிக்க இல்லை. மாறாக வெறுத்தே இருந்தனர.; இதனை ஏற்பட்ட கலவரங்களில் சிலரின் வருந்தத்தக்க கொலைகளின் இடையேயும் பல லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதற்கான ஆதாரங்களில் இருந்து அறிய முடியும்.; இது சிங்கள, தமிழ், முஸ்லீம் என்று சகல தரப்பினரும் பொருந்தியே இருக்கின்றது.
1971 சிங்கள் இளைஞர்கள் அரச படைகளினால் கொல்லப்பட்ட போது ஏனைய சமூகங்களின் மௌனமும், 1983 இல் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஏனைய சமூகங்களின் மௌமும், 1915 இலும் தற்போதும் முஸ்லீம் மக்களுக்கெதிரான கலவரங்களிலும் இதுவே நடைபெற்றன. தனித் தனியாக அரச பயங்கரவாதம் தனது கைவரிசையை காட்டிய போது அப்பாவி பொது மக்கள் கொலைகளை கண்டு மௌனித்திருந்து ஏனைய சமூகத்தினர் தமக்கும் இது நடைபெற்றது இனியும் நடைபெற வாய்ப்புகள் உள்ளது என்பதை உணர மறுக்கக் கூடாது.
இன்றைய இராஜினமாக்களுக்கு முன்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறியவர்கள் யாவரும் இதற்கான பொறுப்பை ஏற்று முதலில் இராஜினமா செய்யுங்கள் என்று தேரர்கள் கோரிக்கை வைக்க முன்பே இவற்றிற்கான தார்மீக பொறுப்பை ஏற்று புலனாய்வு தகவல்களை புறந்தள்ளியவர்கள் யாவரும் இராஜினமா செய்திருக்க வேண்டியதே மிகச் சரியானது ஆகும். இதற்கான உண்ணா நோன்பு போராட்டமும் இதற்கான ஆதரவுப் போராட்டாங்களுமே அறத்தின் பக்கம் நின்று தர்மத்தை நிலைநாட்டும் போராட்டமாக இருந்திருக்க முடியும்.
இலங்கையில் சமாதான சகவாழ்வை உறுதிப்படுத்துவதில் இன்றுவரை அரசியல் தலைவர்கள் பலரும் சரியான செயற்பாட்டை செய்வதில் இருந்து தவறியவண்ணமே வருகின்றனர். இதற்கான அறுவடை இலங்கை மக்கள் தமது தலையில் சிலுவை சுமக்கும் யேசுநாதராக மாறியே ஆகவேண்டிய துர்பாக்கிய நிலையிற்கு தள்ளி இருக்கின்றது என்பதே இலங்கையின் கள யதார்த்த நிலையாகும்.