ஆனால், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் வசந்தகாலம் நிலவுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்துதான் விடை காண வேண்டும்.
தேர்தல் முடிவுகளை ஆழமாக அலசுகின்றவர்கள், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி என்பதற்கு அப்பால், மேலும் பல விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். அதாவது, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் கணிசமானவர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிளவுபட்ட அணியினரால் கட்டமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் நாட்டின் பிரதான கட்சிகளாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.
இந்தப் பின்னணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் பிரதான அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன போன்றோர் புறமொதுக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், சிங்களப் பகுதிகளில் பொதுஜன பெரமுனவே பெரும்பாலும் வெற்றியீட்டியுள்ளது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியில், சிங்கள மக்களின் விகிதாசாரப் பங்களிப்பை விட, ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள், தமிழர்களின் வகிபாகம் அதிகமாகக் காணப்படுகின்றது போல ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. எம்.பிகளின் எண்ணிக்கையிலும் இதை அவதானிக்கலாம்.
இதன்மூலம், மொட்டு அணிக்கே பெரும்பான்மை மக்கள், ஆணை வழங்கி இருக்கின்றார்கள், சஜித் அணியை, அவர்கள் அங்கிகரிக்கவில்லை என்ற தோற்றப்பாடு, கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது. பெரும்பான்மை மக்களில், கிட்டத்தட்ட 75 சதவீதமானோர் மொட்டுச் சின்னத்துக்கு ஆதரவளித்து இருப்பதாகவும் ரணிலை முற்றாகப் புறக்கணித்துள்ளதாகவும் சஜித் அணியைக் கூட, அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் குறிப்புணர்த்தும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாகச் சொல்லலாம்.
இவ்வளவுக்கும் மத்தியில், ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கோதாவில், தமிழர்களும் முஸ்லிம்களும் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஆனாலும், பெருமளவான சிறுபான்மையின எம்.பிக்கள் எதிர்த்தரப்பிலேயே அமரவுள்ளதாலும், ஆளும் தரப்பில் இருக்கின்ற சிறுபான்மையின எம்.பிக்களுக்கும் ‘கட்டுப்பாடுகள்’ இருக்கின்றமையாலும், அமையப் போகின்ற நாடாளுமன்றம், சிறுபான்மையின மக்களுக்குச் சாதகமானதாக அமையுமா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது.
பொதுவாகவே, அறுதிப் பெரும்பான்மை என்பது, சிறுபான்மையின சமூகங்களுக்கு அவ்வளவு நல்ல சகுணங்களாக இருப்பதில்லை. ஏனெனில், ஜே.ஆர் ஆட்சியின் அனுபவங்கள் அப்படிப்பட்டவை! தமது, மிக நீண்டகால ஆட்சிக் கனவை நனவாக்குவதற்காக, ஆறில் ஐந்து பலம் பயன்படுத்தப்பட்ட வரலாறுகளே அதிகம். அதற்காக, அமையும் புதிய அரசாங்கமும் அவ்விதமே செயற்படும் என்று உறுதியாகக் கூறிவிடவும் முடியாது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டைப் பல வருடங்கள் ஆட்சி செய்து விட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப்போதுதான் சிம்மாசனம் ஏறியுள்ளார். இந்தப் பின்புலத்தில், ராஜபக்ஷ குடும்பத்துக்கு நெடுங்காலம் ஆட்சியதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கான விருப்பம் இருக்கின்றது என்பது, பொதுவான அபிப்பிராயமாகும்.
எனவே, புதிய அரசாங்கம் முஸ்லிம்களையும் தமிழர்களையும் அரவணைத்துச் செல்லும் வாய்ப்புள்ளதாகக் கூறலாம். அதனையே குறிப்பாக, முஸ்லிம்கள் அவாவி நிற்கின்றனர்.
அரசியல் காரணங்களுக்காகவே இலங்கையில் இனவாதமும் மதவெறுப்பும் தோற்றுவிக்கப்பட்டன; ஊக்குவிக்கப்பட்டன. அந்த வகையில் நோக்கினால், பொதுஜன பெரமுனவுக்கு இப்போது, அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியில் உள்ள சில முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளடங்கலாகப் பலர், ‘பெல்டி’ அடிக்கத் தயாராக இருக்கின்றனர். எனவே, அளவுக்கு மிச்சமான பலம் ராஜபக்ஷக்களுக்குக் காணப்படுகின்றது.
எனவே, சிறுபான்மையின மக்களை, இனவாத சக்திகள் சீண்டுவதன் மூலம், நாட்டில் குழப்பகரமான நிலை ஏற்படுவதை அரசாங்கம் விரும்பாது. இப்போது, ஆளும் தரப்புக்கு எல்லாம் கிடைத்து விட்டதால், அப்படியொரு தேவை இல்லை. அத்துடன், வேறு யாரும் இதைச் செய்தாலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாது என்றும் எடுத்துக் கொள்ளலாம். எனவே, முஸ்லிம்களையும் தமிழர்களையும் வரையறுக்கப்பட்ட மட்டத்தில் வைத்து மனம் கோணாமல் கையாள்வதற்கே ஆட்சியாளர்கள் விரும்பலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால், அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை வைத்துக் கொண்டு, கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற நகர்வுகள் முன்னெடுக்கப்படுமாயின், இந்த நம்பிக்கை வீண்போய் விடும். அவ்வாறு எதுவும் நடந்து விடுமோ என்பதே, சிறுபான்மையின சமூக அரசியலில், கடந்த சில தினங்களாக அங்கலாய்க்கப்படும் விடயமாக இருக்கின்றது.
புதிய அரசாங்கம், பல்வேறு காரியங்களைச் செய்து முடிப்பதற்கு இந்தப் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தும். மாகாண சபை முறைமையில் திருத்தம், அரசமைப்பின் திருத்தங்களை மீளத் திருத்துதல், தேர்தல் முறைமையில் மாற்றம் எனப் பல திட்டங்கள், பெரமுன அரசாங்கத்திடம் இருக்கின்றன. அதற்கேற்றாற்போல், எல்லாம் கட்டமைக்கப்பட்டு வருவதையும் கூர்ந்து நோக்குவோரால் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
பெரும்பான்மையின மக்களிடம் இருக்கின்ற சிறிதளவு ஆதரவையும் இழந்து விடக் கூடாது என்பதற்காக (ஐ.தே.க, சு.க, ஐ.ம.சக்தி போன்ற) மற்றைய பெரும்பான்மையினக் கட்சிகளும் ஆளும்தரப்பின் நகர்வுகளைப் பெரிதாக எதிர்க்காது. எனவே, ‘அப்படி’ எதுவும் நடந்தால், சிறுபான்மை முஸ்லிம்களும் தமிழர்களுமே, அதற்குள் கிடந்து உழல வேண்டிய நிலை ஏற்படும்.
அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தமிழ் எம்.பிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் இருவருக்கு இராஜாங்க அமைச்சுகளும் வழங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் தரப்பில், ஜனாதிபதி சட்டத்தரணியும் அண்மைக்காலமாகப் பெரமுனவின் வெற்றிக்கு உழைத்தவருமான அலி சப்ரிக்கு தேசியபட்டியல் வழங்கி, நிதி அமைச்சராகவும் அரசாங்கம் நியமித்துள்ளது. பிக்குகளின் அழுத்தத்தையும் மீறி, ஜனாதிபதி இப்பதவிக்கு அவரை நியமித்துள்ளார்.
இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில், அமைச்சு கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டவரும் ராஜபக்ஷக்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுக்கு எந்த அமைச்சும் கிடைக்கவில்லை. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன், இராஜாங்க அமைச்சராகவும் எந்த முஸ்லிம் எம்.பியும் நியமிக்கப்படவில்லை. ஆயினும், கடந்த முறை, ஒரு முஸ்லிமைக் கூட அமைச்சரவைக்கு நியமிக்காத ஆளும் கட்சி, இம்முறை ஒருவரையாவது நியமித்துள்ளது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை, தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் பலத்தை, ஏற்கெனவே இழந்து விட்டிருக்கின்ற நிலையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இருந்த தலைவரான அதாவுல்லாஹ்வுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றமை, முஸ்லிம்களுக்கு இருந்த ஒரேயொரு நம்பிக்கையை வீணாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
எவ்வாறிருப்பினும், ஆளும் கட்சி நினைக்கின்ற எந்தவொரு தீர்மானத்தையும் சட்டமூலத்தையும் திருத்தத்தையும் நாடாளுமன்றில் இலகுவாக நிறைவேற்றி விடுவார்கள். அமைச்சரவையில் இருக்கின்ற ஒரு சில சிறுபான்மையின அமைச்சர்களாலோ, ஆளும் தரப்பில் உள்ள ஏனைய தமிழ், முஸ்லிம் எம்.பிக்களாலோ எதிர்த்துப் பேச முடியாது.
கடந்த பல அரசாங்கங்களில், அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களுக்காகக் குரல் கொடுப்பதற்குத் தயங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த ஆட்சியில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பேசுவார்கள் என்றோ, அவ்வாறு பேசினாலும் எதாவது நடக்கும் என்றோ யாரும் எதிர்பார்க்கத் தேவையில்லை.
இன்று, முஸ்லிம் சமூகம் இவ்வாறான ஒரு நிலைக்கு வந்திருக்கின்றது என்றால், அதற்கு அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. தமிழ் அரசியல் தலைமைகள், கொஞ்சம் வித்தியாசமாகச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது வெற்றியைத் தரும் என்பது நிச்சயமில்லை.
எனவே, சிறுபான்மையினச் சமூகங்கள், எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு, முற்றாக இணக்க அரசியலுக்குள் உச்சக்கட்ட சகிப்புத்தன்மையுடன் சங்கமமாக வேண்டிய நிலை வரலாம். குறிப்பாக, முஸ்லிம் தலைவர்கள் இதைச் செய்வதில் தவறிழைப்பார்களாயின், முஸ்லிம் கட்சிகளை மெல்ல மெல்லக் கைவிட்டு, பெருந்தேசியக் கட்சிகளை நோக்கி, மக்கள் நகர்வதற்கான சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், தமிழ் மக்கள் அவ்விதம் நகர மாட்டார்கள்.
அதற்காக யாரும் நம்பிக்கை இழக்கவோ, அச்சப்பட வேண்டிய அவசியமோ இல்லை. ஏனெனில், ‘நமக்குப் பெரும்பான்மைப் பலம் இருக்கின்றதுதானே; எல்லாம் கிடைத்து விட்டதுதானே’ என்ற எண்ணத்தில், பன்னெடுங்காலம் ஆட்சி செய்யும் நோக்கோடு, ஆட்சியாளர்கள் சிறுபான்மைச் சமூகங்களை அரவணைத்துப் பயணிக்கும் மாறுபட்ட அரசியலைச் செய்வதற்கும் வாய்ப்புள்ளது.
எனவே, மிகக் கவனமாகவும் பக்குவமாகவும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டியதே இன்றைய தேவையாகும்.