(மொஹமட் பாதுஷா)
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும் அளவுகடந்த கனவுகளோடும் நிறுவப்பட்ட நல்லாட்சியின் ஆட்சிப் பரப்பெங்கும் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற களநிலை மாற்றங்கள், கருத்தியல் அதிர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டு அரசாங்கத்துக்குள் கட்சிசார் ‘முன்னிலைப்படுத்தல்கள்’ ஏற்கெனவே இருக்கத்தக்கதாக, இனவெறுப்பு நடவடிக்கைகளும் கூட்டு எதிரணியின் செயற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கின்றன. ஓர் அரசாங்கம் ஆட்சியமைத்து பல வருடங்களுக்குப் பிறகு ஏற்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமைகள் அல்லது அதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் இப்போது உருவாகி வருகின்றது.
தனிக் குடித்தனங்களில் ஏற்படும் பிரச்சினைகள் வெளியில் தெரிவதில்லை. ஆனால், கூட்டுக் குடும்பங்களில் கொஞ்சம் சத்தம்போட்டு கதைத்தாலும் அதை சண்டை என்றுதான் அயலவர்கள் சொல்வார்கள். அதுமாதிரியே, கூட்டாட்சியில் ஏற்படும் இவ்வாறான சின்னச்சின்னச் சிக்கல்களும் வெளியுலகத்தால் பார்க்கப்படுவதாகச் சொல்ல முடியும்.
கடந்தகால ஆட்சியாளர்கள் பல உத்திகளைப் பயன்படுத்தித் தமது ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழர்களுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தருவதாகக் கூறி, தமிழர்களிடம் இருந்து வாக்குகளையும் புலிகளை அழித்தொழிப்பதாகக் கூறி சிங்கள மக்களிடம் இருந்து வாக்குகளையும் புலிகளிடம் இருந்து பாதுகாப்புத் தந்து நிம்மதியாக வாழவைப்பதாகச் சொல்லி முஸ்லிம்களிடமிருந்து வாக்குகளையும் பெறுகின்ற வேலையைத்தான் பொதுவில் சிங்கள ஆட்சியாளர்கள் செய்து வந்திருக்கின்றார்கள்.
இது உலகில் பல நாடுகளில் பின்பற்றப்படுகின்ற அடிப்படையான அரசியல் உத்தியாகும். சில நாடுகளில் உள்ளகத் தளம்பல்கள் ஏற்படுகின்றபோது, நெருக்கடிகள் உருவாகும்போது, மக்களைப் பராக்குக் காட்டுவதற்காக, அதிகாரத்தைப்பெற அல்லது தக்கவைக்க வேறு சில கருவிகள் கையில் எடுக்கப்படுவது வழமை. இதில் ஒன்றுதான் பெரும்பான்மைவாதம்.
இது முற்றினால் இனவாதமாகின்றது எனலாம். இவ்வாறான கருவிகளை உள்நாட்டு சக்திகள் மட்டுமன்றி, வெளிநாட்டு சக்திகளும் மிகச் சூட்சுமமான முறையில் பாவித்து உள்நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. இது உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றது.
இலங்கையின் அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவராவார். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பிறகு நாட்டில் பௌதீக ரீதியான அபிவிருத்திகளும் இடம்பெற்றன. ஆனால், அவர் செய்த மிகப் பெருந்தவறு இனவாத செயற்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டதும் சர்வதேசத்தை குறைமதிப்பீடு செய்ததும் ஆகும். மஹிந்தவின் இரண்டாவது ஆட்சிக் காலப் பகுதியில் இனவாதம் ஆடிய ஆட்டத்துக்கு அளவே இல்லை. அவரும் அவரது சகோதரர்களும் பொது பலசேனா போன்ற இயக்கங்களுக்குப் பின்னால் இருக்கின்றார்கள் என்று பேசப்படுமளவுக்கு,இனவாத செயற்பாடுகளில் அவ்வரசாங்கம் பராமுகமாகச் செயற்பட்டது. குறிப்பாக முஸ்லிம்களின் மத அடையாளங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டன. தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கும் அளுத்கம கலவரத்துக்கும் முன்-பின்னாக இவ்வாறு எத்தனையோ அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன.
கேர்ணல் கடாபி போன்ற பல அரபுலக மன்னராட்சியாளர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, ஒருவேளை அதுபோன்றதொரு ஆட்சியை இலங்கையிலும் நடாத்துவதற்கு விரும்புகின்றாரோ என்றும், யுத்தவெற்றியை இனியும் சந்தைப்படுத்த முடியாது என்பதால் இனவாதம் எனும் பழம்பெரும் ஆயுதத்தை புதிய வடிவில் பயன்படுத்த முயல்கின்றாரோ என்றும் அப்போது சந்தேகங்கள் எழுந்தன.
ஆனால், 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு சில தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, அடங்காத் தினவெடுத்து ஆட்சிசெய்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி வீழ்ந்ததற்கும், இலங்கையில் ஆதிக்கம் செலுத்த நினைத்த வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளுக்கும் தொடர்பிருப்பதாக ஆதாரங்களை முன்வைக்காமல் தகவல் வெளியிடப்படுகின்றன.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் வைக்கப்பட்ட தீப்பொறியை ஊரறியப் பற்ற வைப்பதற்கான ஒரு களமாகவே அளுத்கமை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அப்படியாயின், அப்போது ஆளும் தரப்பின் ஆசிர்வாதத்தோடு உலாவிய இனவாத சக்திகளை, ஆட்சிமாற்றத்தை வேண்டிநின்ற பிற சக்திகள், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன என்று சொல்ல முடியும்.
ஆனால், பரிதாபம் என்னவென்றால், இந்த மாயத்திட்டத்தை அறிந்தோ அறியாமலோ மஹிந்த ராஜபக்ஷ தோற்றுப் போனமைதான். ஆனால், வெளிப்படையாகப் பார்க்கின்ற போது, இனவாதத்துக்குத் தூபமிட்டு, பிறகு அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்ட முன்னைய சில ஆட்சியாளர்களைப் போல மஹிந்தவும் ஆகிப்போனார் என்று சொல்லலாம்.
மைத்திரி – ரணில் ஆட்சி நிறுவப்பட்டபோது இருந்த எதிர்பார்ப்பு என்பது,ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சி, சந்திரிகா அம்மையாரின் ஆட்சி போன்றன நிறுவப்பட்டபோது காணப்பட்ட எதிர்பார்ப்புகளை விடவும் அதிகமானதாகும்.
நல்லாட்சிக்குப் பின்னாலுள்ள ஒருசிலர் மஹிந்த காலத்தில் இனவாதத்தைத் தமக்குச்சாதகமாக உபயோகப்படுத்தினார்கள் என்ற விமர்சனங்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன என்றாலும், பொதுவாக நோக்கினால் இனவாதத்துக்கு எதிரான கருத்தை மூலதனமாக்கியே மைத்திரியும் ரணிலும் ஆட்சிபீடமேறினார்கள்.
“இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்ற வாக்குறுதியை வழங்கியே வாக்குக் கேட்டார்கள். பல தடவை தோல்வியடைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி, புதிய வியூகம் ஒன்றை வகுத்து, சுதந்திரக் கட்சியில் இருந்து கவர்ந்திழுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்த போது,சிறுபான்மை மக்கள் என்ன ஏது என்று கேட்காமல் வாக்களித்தமை, இனவாத சூழலில் இருந்து விடுதலை பெறுவதற்காகவாகும். அதைவிடுத்து, மஹிந்தவின் குடும்ப ஆட்சியை வீழ்த்துவதற்காகவோ நிதிக் கையாடல்களைத் தண்டிப்பதற்காகவோ முஸ்லிம்களும் தமிழர்களும் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.
ஆட்சி மாறிய பிறகு, களநிலைமைகளில் எந்தளவுக்குக் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்ற கேள்வி குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் இப்போது துளிர்விடத் தொடங்கியிருக்கின்றது. சில தமிழர்களுக்கும் அவ்வுணர்வு இருக்கின்றது.மீண்டும் இனவாதம் துயில் கலைத்திருக்கின்ற போதிலும், அரசாங்கம் இன்னும் இனவெறுப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது பரவலாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.
இன்னும் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை, கரிமலையூற்று பள்ளி விவகாரம், நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டப் பகிர்ந்தளிப்பு,கிராண்ட்பாஸ் பள்ளி விவகாரம் என எந்தப் பிரச்சினைக்கும் நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம், அளுத்கம கலவரத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவும் இல்லை. இப்படிப் பழைய பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், தொடர்ச்சியாக கடும்போக்காளர்களின் கைகள் ஓங்குகின்றன. புதிய புதிய இனவாத நெருக்குவாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. சாதாரண சிங்கள மக்களும் இது குறித்து கவலைப்படுகின்றனர்.
மஹிந்த ஆட்சியில் இருந்தபோது, கடும்போக்குச் சக்திகளுக்கு அவ்வாட்சியாளர்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள் என்று கூறியது உண்மையோ பொய்யோ அது இருக்கட்டும். ஆனால், அவ்வாறு சொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சியாளர்கள் ஏன் இன்னும் இனவாதத்துக்கு விலங்கிடவில்லை என்று முஸ்லிம்களும் தமிழர்களும் கேட்கின்றனர். அப்படியென்றால், இதற்குப் பின்னால் இருந்தவர்கள் வேறு தரப்பினரா என்ற சந்தேகமும் அவர்களுக்கு எழுந்திருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் இதுபற்றிய உரையாடல்கள் போய்க் கொண்டிருக்கின்றன.
இனவாத செயற்பாடுகள் குறைவடையும் என்று சிறுபான்மையினர் நம்பிக் கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்கள், தமிழர்கள் வாழும் இறக்காமம், மாணிக்கமடுவில் வலுக்கட்டாயமாக விகாரை அமைப்பதற்கு முயற்சிக்கப்படுவது வரை, அங்குமிங்கும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு சம்பவங்கள் சிறுபான்மையினருக்கு மனப் போராட்டங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. 92 சதவீதம் எழுத்தறிவும் பகுத்தறிவும் கொண்ட மக்கள் இதையெல்லாம் அலசி ஆராயமாட்டார்கள் என்று யாரும் கருதிவிட முடியாது.
சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட நாடு, இலங்கை என்ற யதார்த்தம் இந்த இடத்தில் முக்கியமானது. அதன்படி, பௌத்த பிக்குகளை, சிங்கள சமூகத்தில் ஒரு சிறு குழுவின் ஆதரவையாவது பெற்றிருக்கின்ற செயற்பாட்டாளர்களை சிறையில் அடைப்பது சாத்தியமற்றது. அது ஆட்சிக்கே ஆப்பாகக் கூட அமைந்துவிடலாம்.
ஏனெனில், இனவாதம் அப்படிப்பட்டது. எதற்காக அது வளர்க்கப்படுகின்றதோ, அதைச் செய்ய விடாமல்த் தடுத்தால் வளர்த்தவனையே தண்டிக்கும் தன்மை கொண்டதே இனவாதம் ஆகும். இந்த யதார்த்தத்தை முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இனவாதத்தையும் அளவுடன் பேணிக் கொள்ள, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே சிறுபான்மையினர் வேண்டுகின்றனர் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்று நடைபெறுகின்ற கடும்போக்குச் செயற்பாடுகள், மதத்தை வளர்ப்பதுடன் மட்டும் தொடர்புபட்டதல்ல என்பது தெளிவு. உதாரணமாக, தீகவாபியில் இருக்கின்ற பௌத்த தேரர், வலுக்கட்டாயமாக விகாரை அமைப்பதை எதிர்க்கின்றபோது,கொழும்பில் இருந்து அத்தே ஞானசார தேரர் வந்து எப்படியாவது சிலை வைப்போம் என்ற தோரணையில் பேசுகின்றார் என்றால், சிங்கள ராவய அறிக்கை விடுகின்றது என்றால் இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல், உள்நோக்கம் என்னவென்பது பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடனான திட்டம் என்றும், சர்வதேச நிகழ்ச்சிநிரல் என்றும் பல கதைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், இது ஆட்சியில் அதிர்வை அல்லது ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டம் என்பதாகும். உண்மைதான், இது அதுவாகக் கூட இருக்கலாம். அதனை மறுப்பதற்கில்லை.
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் இறுதிக்கட்ட ஆட்சியில் சிறுபான்மை மக்கள் வெறுப்புற்றனர்.
தமிழர்கள், இனவாதம் மற்றும் இறுதிக்கட்ட யுத்த அழிவுகளை மனத்தில்கொண்டு மஹிந்தவை எதிர்த்தனர்.
ஆனால், யுத்தத்தை நிறைவு செய்து அபிவிருத்தியையும் வழங்கிய ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்வதை விட, தம்முடைய இனத்தையும் மதத்தையும் அடக்கியாள நினைக்கும் கடும்போக்காளர்களுக்கு ஆதரவான ஆட்சிச் சூழலைத் தோற்கடிப்பதே முஸ்லிம்களின் முன்னுரிமைக்குரிய விடயமாக இருந்தது. ஏனென்றால், முஸ்லிம்கள் பொதுவாகவே மதம்சார்பான உணர்வு மேலீட்டுக்கு ஆட்படுபவர்கள். இதை உணர்ந்தே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும் தூண்டிவிடப்பட்டிருக்கலாம். அந்தப் பின்னணியிலேயே புதிய ஆட்சி உருவானது.
இப்போது ஏற்பட்டுள்ள இனவாத நிலைமைகள் ஆட்சியில் அதிர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு நகர்வாகக் கூட இருக்கலாம். ஏனெனில், “மஹிந்த காலத்தில் நடந்ததுதான் மைத்திரி – ரணில் காலத்திலும் நடக்கின்றது” என்ற ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி, முன்னாள் ஜனாதிபதியும் அவருக்கு ஆதரவானோர்களும் இன்றிருக்கின்ற நிலைமையைப் பயன்படுத்தி தம்மீதான களங்கத்தைப் போக்கிக் கொள்ள முனைகின்றனர். “நாங்கள் இனவாதிகளை ஆதரிப்பதாகச் சொல்லித்தானே ஆட்சியை மாற்றினீர்கள்? இப்போது என்ன நடக்கின்றது? இப்போதாவது விளங்குகின்றதா இதன் பின்னணி என்னவென்று?” என்ற தொனியில் நல்லாட்சியின் ஆதரவாளர்களான சிறுபான்மை மக்களை நோக்கி, மஹிந்த அணி கேள்வி எழுப்புகின்றது. அதற்குப் பதில்கள் எதுவும் கைவசமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
சுருங்கக்கூறின், இப்போதைய சூழலில், முஸ்லிம்களின் அனுதாபிகள் போன்று அறிக்கை விடுகின்ற கூட்டு எதிரணியினர் அதனைத் தம்முடைய மீள் எழுச்சிக்காக முதலீடு செய்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையை ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலைமைகள் ஒருவகை ‘அலாரம்’ என்றே தோன்றுகின்றது.
சுதந்திரக்கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தைத் தக்க வைக்க வேண்டும் என்றும் கூட்டாட்சி அரசுக்குள் ஏற்பட்டிருக்கின்ற ‘முன்னுரிமை அளித்தலுடன்’ தொடர்புடைய சிக்கல்கள், இனவாதம், கூட்டு எதிரணியினரால் பின்னின்று நடாத்தப்படுவதாகச் சொல்லப்படும் பேரணிகள், வேலைநிறுத்தங்கள் எனப் பல விடயங்கள் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே நல்லாட்சி அரசாங்கத்துக்கு பாரிய சவாலை தோற்றுவித்திருக்கின்றது.
இதனை மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் கையாள்கின்றனர். ஓர் ஊர்வலத்துக்கு வரும் மக்களை வைத்து அரசியல் பலத்தைத் தீர்மானிக்க முடியாது என்றாலும், ஒரு முக்கியமான பேரணிக்கு ஆட்களை திரட்டுவதும் கூட, இப்போது பெரிய அரசியலாகி இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் இனவாதத்தையும் நாட்டில் ஏற்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட நிலைமைகளையும் பயன்படுத்துவதற்கு மேலதிகமாக, மஹிந்த அணியினர் பெருமளவிலான ஆதரவாளர்களை இம்முறை மே தின ஊர்வலத்துக்குத் திரட்டியிருக்கின்றார்கள் என்பதும் கவனிப்புக்குரியது. குறைந்த பட்சம், மஹிந்த அணியினர் பலம் அறவே இல்லாதவர்களாக இல்லை என்பதையாவது அரசாங்கம் முன்னுணர வேண்டும்.
நாட்டில் தளம்பலை ஏற்படுத்தக் கூடிய மேற்குறிப்பிட்ட காரணிகளுள் மிக இலகுவாகத் தூண்டப்படக் கூடியது இனவாதம் என்பதையும், இதன் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதையும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற நல்லாட்சி அரசாங்கம், இனவெறுப்புப் பிரசாரங்களைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலவேளை, எதனால் தோல்வியடைந்தோமோ அதைப் பயன்படுத்தியே இந்த ஆட்சியையும் தோல்வியுறச் செய்வதற்கு முன்னைய ஆட்சியாளர்கள் முயலக்கூடும். அல்லது இது சதித்திட்டமாகவோ வெளிநாட்டுச் சக்திகளின் காய்நகர்த்தலாகவோ இருக்கலாம்.
அது எதுவாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படப் போவது மக்களும் அரசாங்கமும் என்பதை கவனத்தில் கொண்டு, கண்ணுக்கு முன்னே பகிரங்கமாக நடக்கின்ற இனத்துவ நெருக்குவாரங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இந்த ‘அலாரத்தை’ கவனத்தில் எடுத்து விழித்துக் கொள்ள வேண்டும்.