அலெக்சாண்டிரா கொலேண்டை (Alexandra Kollontai):

அலெக்சாண்டிரா ஒரு ரஸ்ய இராணுவ ஜெனரலுக்கும், பின்லாந்தைச் சேர்ந்த ஒரு நிலப்பிரபுவின் மகளுக்கும் 1872 மார்ச் 31ஆம் திகதி மகளாகப் பிறந்தார். அலெக்சாண்டிராவை பாடசாலைக்கு அனுப்பினால் விரும்பத்தகாத தொடர்புகள் ஏற்பட்டுவிடும் என அஞ்சிய பெற்றோர், அவருக்கு வீட்டில் இருந்தவாறே கல்வி கற்க ஏற்பாடு செய்தனர். அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களில் ஒருவரான மேரி ஸ்டிரகோவா என்பவர் தடை செய்யப்பட்ட புரட்சி இயக்கங்களுடன் தொடர்புடையவராக இருந்தார். எனவே கருத்தியல் ரீதியாக அவர் அலெக்சாண்டிரா மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.


குழந்தைப் பருவத்தில் அலெக்சாண்டிரா ஆடம்பரமாக வளர்க்கப்பட்டாலும், தன்னுடன் சேர்ந்து விளையாடிய அயலில் உள்ள விவசாயக் குடும்பப் பிள்ளைகளின் ஏழ்மை நிலை கண்டு மிகவும் வருந்தினாள். அதன் காரணமாகத் தான் வாழ்ந்த சமூக அமைப்பின் மீது வெறுப்புக் கொண்டாள்.


அலெக்காண்டிரா தனது பதினாறாவது வயதில் பல்கலைக்கழகப் படிப்பில் புகுந்தாள். 1893 – 96களில் ரஸ்யாவில் மார்க்சியம் வளர ஆரம்பித்தது. பிரபலமான மார்க்சியராக பிளக்னோவ் அறியப்பட்டிருந்தார். லெனின் அப்பொழுதுதான் மார்க்சியராக அறியப்பட்டுக் கொண்டிருந்தார். இந்தக் கட்டத்தில் யதார்த்தவாதியாக இருந்த அலெக்சாண்டிரா பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு மாறத் தொடங்கி இருந்தார்.


தனது திருமணம் குறித்த பிரச்சினை வந்தபோது, அலெக்சாண்டிரா தனது பெற்றோரின் மரபு ரீதியிலான அணுகுமுறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். பின்னர் 1893இல் தனது இருபத்தோராம் வயதில் மாமன் மகனான விளாடிமிர் கொலேண்டை என்ற பொறியியலாளரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


1895இல் 12,000 பேர் தொழில் புரியும் கிரென்கோல்ம் நெசவுத் தொழிற்சலையைப் பார்வையிடச் சென்றார். பெரும்பாலும் பெண் தொழிலாளர்களைக் கொண்ட அத் தொழிற்சலையில் பணி புரிந்தோர் தினசரி 12 முதல் 18 மணி வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. அத் தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சலையிலேயே காலத்தைக் கழிக்க வேண்டி இருந்தது. இந்தப் பயணம் அலெக்சாண்டிராவின் வாழ்க்கையே மாற்றியமைத்துவிட்டது. இந்தத் தொழிலாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிய அவர், மார்க்சிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.


1896இல் அவர் தனது கணவரையும் மகனையும் விட்டுப் பிரிந்து சூரிச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரம் கற்றார். இந்தக் கட்டத்தில் அவர் பிளக்னோவ், ரோசா லக்சம்பர்க், கார்ல் கௌட்ச்சி போன்றோரின் மார்க்சிய எழுத்துகளை ஊன்றிப்படித்து தன்னை ஒரு மார்க்சியவாதியாக வளர்த்துக் கொண்டார். பின்னர் லண்டன் சென்று அங்கு சில தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்துவிட்டு, 1899இல் ரஸ்யா திரும்பிய அவர், தடை செய்யப்பட்டிருந்த ரஸ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து, அதன் கொள்ளை பரப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணி புரிந்தார்.


அலெக்சாண்டிரா பெண் தொழிலாளர்களைத் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அப்பொழுது பெண்கள் சம்பந்தமான மார்க்சிய நோக்கிலான வேலைத்திட்டம் எதுவும் இருக்கவில்லை. இருந்த ஒரேயொரு ஆவணம் லெனினின் மனைவி குரூப்ஸ்கயா எழுதிய “பெண் பாட்டாளிகள்” என்ற 24 பக்க துண்டுப் பிரசுரம் மட்டுமே. இருந்தும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பல அமைப்புகளை உருவாக்கினார். இந்தக் காலகட்டத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் உருவான பெண்கள் போராட்டங்களுடன் தொடர்பு கொண்டு செயற்பட்டார். இதற்காக அnரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் நேரடியாகச் சென்றும் செயற்பட்டார்.


1905இல் முதல் ரஸ்யப் புரட்சி வெடித்தது. ஆனால் அது தோல்வியடைந்தது. அதன் பின்னர் போல்ஸ்விக் கட்சி தலைமையில் 1917இல் புரட்சி வெடித்தது. அந்த நேரத்தில்தான் அலெக்சாண்டிரா வெளிநாட்டிலிருந்து ரஸ்யா திரும்பியிருந்தார். 1917இல் ‘பாட்டாளி பெண்கள்’ என்ற வாரப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அதில் கட்டுரைகள் எழுதிய அலெக்சாண்டிரா, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், போருக்கு எதிராகவும் போராடும்படி பெண்களைக் கேட்டுக் கொண்டார். இடையில் இராணுவம் அவரைக் கைது செய்து பெட்ரோகிராட் சிறையில் தனிக் கொட்டடியில் அடைத்தது.


அக்டோபர் புரட்சி நடந்தபோது, அலெக்சாண்டிரா போல்ஸ்விக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய சோவியத் அமைச்சரையில் அலெக்சாண்டிரா சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு பெண் அமைச்சர் அவர்தான். அமைச்சுப் பொறுப்பு ஏற்றதும் இரவு பகலாய் செயற்பட்டு மக்கள் நலனுக்காக, குறிப்பாக பெண் சமத்துவத்துக்காக பல சட்டங்களை ஏற்படுத்தினார்.


1917 டிசம்பரில் திருமணச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி. தேவாலயத்தை நாடாமல் அலுவலக ரீதியாகக் கூட ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது.
மண முறிவு எளிதாக்கப்படது.


பெண்கள் தமது விருப்பப்படி கணவன் பெயரையோ அல்லது தந்தை பெயரையோ உப பெயராக வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது.
திருமண உறவின் மூலம் பிறக்காத குழந்தையை “முறையற்ற குழந்தை” என்று சொல்வது தடை செய்யப்பட்டது.
பெண்களுக்கும் சமமான சட்டபூர்வமான சிவில் உரிமைகள் தரப்பட்டன.
இரு பாலாருக்கும் சம வேலைக்கு சம சம்பளம் என்பது சட்டபூர்வமாக்கப்பட்டது.
பெண்களுக்கு பிரசவ காப்புறுதித் திட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு பெண்களுக்கான பல சமூக நலத் திட்டங்களை அலெக்சாண்டிரா மேற்கொண்டார்.


அலெக்சாண்டிரா தனது பணிக்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடந்த பல மாநாடுகளுக்கு தலைமை ஏற்று வழிநடத்தியுள்ளார். 1921இல் அலெக்சாண்டிராவும், தொழிலாளர் நல அமைச்சர் அலெக்சாண்டர் ஸ்கைப்னிகோவும் இணைந்து கட்சிக்குள் சிலரிடம் இருந்த அதிகாரத்துவப் போக்கிற்கு எதிரான போராட்டம் ஒன்றை ஆரம்பித்து கட்சியைச் சுத்திகரித்தனர்.
1922இல் அலெக்சாண்டிரா நோர்வேக்கான சோவியத் தூதராக நியமிக்கப்பட்டார். மெக்சிக்கோ, சுவீடன் போன்ற நாடுகளிலும் தூதுவராகப் பணியாற்றினார்.


அலெக்காண்டிரா அரசியல் கட்டுரைகளை மட்டுமின்றி சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவற்றில் ‘சிவப்புக் காதல்’, ‘சகோதரிகள்’ என்ற இரு நாவல்களும் பிலபலமானவை.
புதிய சோசலிச சமூகத்தில் எந்த மாதிரியான உறவு முறைகள் இருக்க வேண்டும் என அலெக்சாண்டிரா எதுவும் கூறவில்லை. புதிய தலைமுறைகள் எழும்போது, அவை இந்த உறவுகள் குறித்துத் தீர்மானித்துக் கொள்ளும் என அவர் கருதினார். இருந்தாலும், வருங்கால சமூகத்தில் ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தக் காலகட்டத்திலும் பண பலத்தை வைத்தோ அல்லது வேறு எந்த சமூக அந்தஸ்தை வைத்தோ, எந்தப் பெண்ணையும் விலைக்கு வாங்கக்கூடிய நிலைமை இருக்கக்கூடாது என அவர் கனவு கண்டார்.
அலெக்சாண்டிரா என்ற இந்தப் புரட்சிப் பெண் தமது 80ஆவது வயதில் 1952 மார்ச் 9ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.