ஆனாலும், கொலைஞர்கள் தங்களின் கொலையை நியாயப்படுத்துவதற்காக அன்று வரைந்திருந்த பாசிச இலக்கியம் ஒன்றை சுமார் 47 வருடங்களுக்கு பின்னர் இன்று விமர்சனத்திற்குட்படுத்திய விடுதலைப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் பத்திரிகையாளருமான மனோரஞ்சன் அவர்கள், பாசிச இலக்கியத்தின் ஆபத்தினை எடுத்துக்கூறினார்.
அல்பிரட் துரையாப்பா அவர்கள் இறந்தபின்னர் அன்னாரின் மனைவியின் ஒப்பாரியாக புலிகளால் வெளியிடப்பட்ட கவிதை வாசகர்களுக்காக..
சிங்கத்தமிழன் சிவகுமார் அச்சகம்
தமிழீழம் – 10 சதம்
வாழ்விழந்தோர் புலம்பல் ஒப்பாரி
ஆக்கியோன் : கச்சதீவுக் கவிராயர்
விருத்தப்பா
பெண்கள் ஒப்பாரி பிரியமாய்ப் பாடுதற்குக்
கொண்டவர்கள் வாசிக்க கொண்றவர் வாசிக்க
கண்டவர்கள் அறியவே கச்சதீவுக் கவிராயர்
மண்டுபுகழ் ஈழம் மலரப் பாடிய பாட்டிதுவே
புலம்பல் என்ற ஒப்பாரி
காலம் வருமுன்னே
காலன் உனைக் கொண்டானே
ஞாலத்தில் நீர் செய்த
தப்பென்ன என் துரையே
ஊரடி நிலத்தையெல்லாம்
உன்னதாய் நினைக்கையிலே
ஆறடி மண்ணுக்கு
ஆளாகி நின்றாயே
புரூனைக்கு போனதுண்டு
என் துரையே அப்பா நீ
புது நீலக் கொடி தொட்டதுண்டு- அந்தப்
பொல்லாத கொடி தொட்ட தோஷம்
புருசனையே மாய்ச்சுதம்மா
கொழும்புக்கு போனதுண்டு
கொள்கையில்லா ராசாவே
குவிந்த லஞ்சம் தோய்ந்ததுண்டு- அந்த
லஞ்சம் தொட்ட தோஷம் – என்
கொண்டவனுக்கு பட்டதம்மா
சிறிமாவோ சேதிவரும்
துரோகத்திற்கு கூலிவரும்
துரோகத்திற்கு வாழ்க்கைப்பட்டு
துடித்திங்கு நிற்குறேன்
பட்டம் பதவி வரும்
பல்லக்கு எடுத்து வரும்
பதவியுடன் பணமும் வரும்
பாடையிலே போகையிலே
பாவி பட்டம் தொடருதம்மா
பல நூறூ காசு வாங்கி
கதை கதைத்தாய் – அந்த
பளபளப்பு தீரு முன்னே
பலியானாய் என் துரையே
ஒன்பது பேர் சாவெடுத்து
உலகறிந்த மாநாட்டை
உலைவைத்த ராசாவே – நீயே
உருக்குலைந்தாய் பார்த்தாயோ
தீங்கான அநுராவுக்கு
கொள்ளிக்குடை பிடித்து
பாங்கான தாசி வீடு
படையெடுத்த ராசாவே – பல
பல தாசிக்கழுத பணம்
பள்ளிக்கூடம் கட்டலாமே
விரோதக் குடைபிடித்து
வேசிவீடு நுழைந்தாயே – அந்த
லீலாவுக்கழுத பணம்
நீச்சல் குளம் கட்டலாமே
சுற்றி மதில் எழுப்பி
சூது சிங்களவரை
காவல் வைத்தாய்
காலனுக்கு யாரை வைத்தாய்
பக்க மதில் எழுப்பி
பஸ்த்தியாம்பிள்ளையினை
பக்கத்தில் வைத்தீர்
பஸ்தியும் வருவானோ
பாடையில் போவானோ
குமார சூரியன் அறியாமல்
குலைந்தாயோ என் கணவா
குட்டு வெளிப்படுமுன்
கொன்றனரோ உந்தனையே
பக்க மதில் எழுப்பி என்பதியே
பனைமரம் தோப்பாக்கி
பக்கமதில் இடிய
பட்டர தான் தாங்கலையே
சுத்தி மதில் எழுப்பி
என் சொக்க சொர்ணமே – நீ
சுத்தி மதில் இடிய – பனித்
தியாகராசா தாங்குவானோ?
எட்டுப் பேர் கூட்டத்தில்
எக்காளம் இட்டவரே
திட்டினை கூட்டணியை – அந்த
திட்டுத்தான் தீர்த்ததுவோ?
பத்துப்பேர் கூட்டத்தில்
பாதகம் பேசியதே
ஐயையோ அழித்ததுவே
ஐந்து சத அப்புக்கத்துவை
யாழ் நகரில் மேயராம்
யாழ் நகரைப் பார்த்தால்
பாழ் மனுஷன் என்ற பட்டம்
பாவி உனக்கு வந்ததுவே
தென் பகுதித் தோட்டத்தில்
செந்தமிழ்ர் செத்திடவே
ஸ்ரீமாவோ கூட்டத்தில்
சேர்ந்தழிந்து போனாயோ
பொன்னு புளியங்கொட்டை
பூப்போட்ட பல்லாங்குழி – நான்
புரிந்து விளையாடையிலே
பாவியுனைத் தோற்றுவிட்டேன்.
தங்கப் புளியங்கொட்டை
தாழம்பூ பல்லாங்க்குழி – நான்
தாங்கி விளையாடையிலே
தமிழ்த் துரோகி உனைத்தோத்தேன்
அல்லிக்கும் தாமரைக்கும்
ஐந்து லட்சம் சேனையுண்டு
ஆகாசத் தாமரைக்கு
அடி அம்மாடி – எனக்கு
துரையில்லை அப்பனில்லை அம்மாடி.
கொட்டிக்கும் தாமரைக்கும்
கோடி லட்சம் சேனையுண்டு
அழும் பாவி சண்டாளிக்கு
ஆளுமில்லை கூட அழ
பனை மரத்துக் கீழிருந்து
பாவிகுறை பறையையிலே
பனையோலை அழுதிடுமே
பனை நுங்கு கண்ணீர் விடும்
தென்னை மரக் கீழிருந்து
தேம்பி அழுகையிலே
பாளை அழுதிடுமே
தேங்காயும் உதிர்ந்திடுமே.
அருளில்லா அம்பலத்தான்
அருளம்பலத்தானும்
அடுத்த பயணம் ஆவானோ?
ஆஸ்த்மாவில் சாவானோ?
காசிதன்னை பிடிக்கச் சொன்ன
காவாலி மட்ட களப்புராஜன்
கட்டையிலே போகும் காலம்
கடிதிங்கு வாராதோ
கல்லுமேல் கத்தாழை
கள்ளர் எல்லாம் உன் கூட்டம்
கன்னிஞக்கு காலன் வந்து
காளையராய் காத்திருக்கு.
துரோகம் துரோகமோங்கி
துரோகப் பெயரெடுத்தாய் அந்த
துரோகம் உனை உண்டதுவோ
துப்பாக்கி கொண்டதுவோ
ஏணிமேல் ஏறியடி
எம்லோகம் போனாலும் – அந்த
ஏணி சறுக்கிடுமே
எத்தன் உனைக் கண்டாலே
புத்தளத்தில் புத்தர் மக்கள்
பத்து முஸ்லீம்களை பலியாக்க
மூதூர் மஜீத்தும் பதுதீனும்
முறைகெட்ட காவடியோ
முக்காடும் முருகையன்
முகமில்லா ராஜசுந்தரம்
பொடியர் தேடும் பொன்னம்பலம்
விடியமாறும் மார்டின்
மடிந்து போன நல்லூர் குமார்
மண்டுபுகழ் ஈழத்தில்
மாபாவியராய் பிறந்தனரே
நாற்புறமும் சமுத்திரமாம்
நாயகரே மேயரானால்
நாற்கடலும் பொறுக்கலையே
நாதியற்றுப் போனாரே
கோயிலுக்குப் போகையிலே
குயில் போலக் குந்தியிருந்த
கொள்கை வீரர் உனை
குண்டாலே சுட்டனரோ.. அம்மாடி.
பாதை ஓரத்தே பதுங்கியிருந்தே
பயம் அறியா இளைஞர் உனை
பரலோகம் அனுப்பினரே
பாவிகுரல் கேட்கலையா
ஒத்தைக்கல் மேடையம்மா
ஒதியமரச் சாலையம்மா
நான் ஒரு பொண்ணு நின்றழுக
ஊர் உலகம் அழவில்லையே
ரெட்டைக்கல் மேடையிலே
ரோந்து வந்த காலமம்மா
சுட்டுன்னைச் சாவடிச்சார்
சுற்றம் அழ வாரலையே
பச்சைக்கல் மேடையம்மா
பவழக்கொடி சாலையம்மா
பாவி மகள் நின்றழுக- இந்தப்
பட்டணமும் கூடலையே
கொழும்பிலே கூடாரம்
கொழுத்த கொள்ளை வியாபாரம்
கொழும்பு நகர் போய்ப் பார்த்தால்
குலத்துரோகி என்றாரே
தவறான வழி சென்றாய்
தவறென்று திருத்தாமல்
தவறுக்குப் பலியாகி
தவிக்க வைச்சுப் போனாயே
பாவங்களைச் செய்தால்
பதைபதைக்கச் சாவானாம்
பாவங்கள் கூடியுனைப்
பரலோகம் அழைத்ததுவோ
பாவத்தி லிருந்தே
பாவம் முளைத்தது போல்
பாவிக்குத் துணை போனாய்
படுமோசம் ஆனாயோ
தீமையே நீ நினைத்தாய்
தீயரே உனை வளர்த்தார்
தீமையே குண்டாகி
தீர்த்து உனைக்கட்டியதே
செய்த வினையறுக்க
செய்த பிழை திருந்த
ஐயகோ எமனும் தான்
அலற வைத்துக் கொன்றானோ?
ஊருக்கு குழி பறித்தாய்
ஊருக்கே கேடு செய்தாய்
ஊரார் குழியெல்லாம்
உன் குழியாய் மாறியதே
இரத்தத்தில் குளித்தவனே
ஏழைகளின் கண்ணீராம்
இரத்தத்தில் குளித்தாயே
யாரும் எனைக் காப்பாரோ?
இழிவெல்லாம் அழியாதோ
ஈழம் மலராதோ
பழிகாரர் பாடை ஏற
புது நாடு மலராதோ.
(நன்றி: கலையகம்)