எங்கிட ஊர் அக்கரபத்து, தொடர்ந்து நாலு
நாளா எங்கிட ஊருல மழ பேஞ்சிக்கிருந்தது.
மூணு நாள் மழ பேஞ்சாலே வெள்ளம் தறிகெட்டு
ஓடும். நாலு நாள் மழையால, ஊரெல்லாம்
வெள்ளம் வந்து, மோத்துவாரம் தறிகெட்டு
ஓடியது.
பீறிட்டு வரும் மழை நீரும், கடலும் கலக்கும்
அந்த காட்சி எங்களுக்கெல்லாம் ஜல்லிக்கட்டு
மாதிரி, அதைப்பார்க்க என்றே முழு ஊரும் சின்ன
மோத்துவாரத்துக்கு பறக்கும். அங்குதான்
எனக்கு தெரிந்த நாலாவது இனக்கலவரம்
வெடித்தது.
புதினம் பார்க்க வந்த முஸ்லிம் இளைஞர்கள்,
தண்ணியை எத்திவிட, அந்த தண்ணி, தமிழ்
இளைஞ்சர்களுடன் வந்த, தமிழ் இளைஞ்சிகள்
மேல் பட, முறுகல் ஊடலாகி, ஊடல் கூடலாகி,
கூடல் கும்பல் கும்பலாக உதைபட்டுக்கொண்டது.
அட்ரா சோனிக்கி, அட்ரா தமிழனுக்கு. தேங்காயால,
மையருகிழங்கால,தக்காளியால ஆக மிஞ்சி,மிஞ்சிப்
போனா பழைய சாராய பொத்தலால எறியுழும்.
அடுத்த மூணு நாளைக்கி அனல் பறக்கும்,
வயலுக்கு போன நாலு சோனவண்ட காத ( காது )
தமிழனுகள் அறுப்பானுகள், முஸ்லிம் பகுதிகளுக்கு,
கூலி வேலைக்கு வந்து,ஒழிஞ்சி ஒழிஞ்சி போன
நாலு தமிழர்களின் கால நம்ம காக்காமார்
ஓடைப்பானுகள்.
மூணே மூணு நாள்தான், சரியான கறிபுளி
இல்ல, புள்ளகளுக்கு இஸ்கூளும் இல்ல என,
ரெண்டு பக்கமும் தாக்கு புடிக்க முடியாம,
உம்மாமாரும், அம்மாமாரும் புருசன்மாருடன்
எரிஞ்சி விழ , கொம்புளைன்ட் பள்ளி தலைவ
ருக்கும், கோயில் தர்மகர்த்தாக்களுக்கும்
போகும், எல்லோரும் ஆர்சீஎம் ( R.C.M.School-
Ampara Road – Akkaraippattu ) இஸ்கூளில்
கூடி முடிவெடுப்பார்கள்.
எங்களூர் போலீஸ் ஐபீயும் அங்கு பிரசன்னமாகி
இருப்பார். சரி,சரி இண்டையில இருந்து சமாதானம்
சரியா எண்டு ரெண்டு பக்கமும் ஒரே தொனியில்
சொல்வார்கள். சரி சமாதானம். அவ்வளவுதான்.
மானாகப்போடியார், சம்புனாதப்போடியார், வடி
செல்வராசா, சீனித்தம்பி மாஸ்டர், நான் எப்போதும்
மதிக்கும் ஆலையடிவேம்பு கருப்பழகன் வடிவேல் ஐயா,
தமிழர் தரப்பிலும், சரிபு முதலாளி, குப்ப மஜீது,
ஓக்கா சேர்மன்,கொஸ்தாபர் நிசார், சம் சம்
ரவுப் காரியப்பர் முஸ்லிம் தரப்பிலும் வந்திருப்பார்கள்.
பேச்சுவார்த்தை சூடுபுடித்து யார யாரு வெட்டப்
போரார்களோ என நாங்களெல்லாம் குட் நியுசுக்காக
காத்திருப்போம். ஆள ஆள் வெட்டிக்கிட்டா
பள்ளிக்கூடம் ஒரு பத்துநாளைக்கி லீவு விடுவார்களே
என்ற ஆதங்கம் எங்களுக்கு.
வந்தவர்கள் எல்லாம் ஏதோ இருநூறு வருசத்துக்கு
அப்புறம் சந்திக்கின்ற நண்பர்கள் போல்,
மச்சான் போட்டு குசலம் விசாரித்துக்கொண்
டிருப்பார்கள். நாலு சோனவண்ட காது வெட்டப்
பட்டிருக்கு, அஞ்சு தமிழண்ட கால் ஒடஞ்ச கதையே
அங்கு பேசப்பட மாட்டாது. எங்கிட மனம் பத்தி
எரியும்.
எடையில போலீஸ் ஐபீ தலையிட்டு மொதலாளி
சண்ட பிரச்சனை என்னாச்சு என நெனெப்பு
காட்டுவார். ஓ அத மறந்துட்டம் என்ன. சமாதானம்
எண்டு சொல்லுங்க ஐயா என்பார்கள்.
பச்சக்களர் பழைய ஜீப்புல, ரெண்டு லவுஸ்பீக்கற
கட்டிக்கிட்டு, பகல் ஒருமணிக்கு ” அஸ்ஸலாமு
அலைக்கும், வணக்கம், இண்டையிலிருந்து சண்டை
முடிவுக்கு வந்துவிட்டது, இனி எல்லோரும் வழமை
போல் உங்கள் உங்கள் வேலைகளை பார்க்கலாம்,
கடைகள் திறக்கலாம், வயலுக்கு போகலாம்” என
ஒற்றை வரியில் சொல்லிக்கொண்டு போவார்கள்.
போலீஸ் ஜீப் ஒரு பக்கம் அறிவிச்சுக்கொண்டு
போவார்கள், மறு பக்கம் மொத்த சோனவனும்
சைக்கிலுகளை எடுத்துக்கிட்டு,தமிழ்வட்டை
( தமிழர் வாழும் பகுதி )யை நோக்கி பறப்பார்கள்.
மொத்ததமிழனும், தமிழச்சியும் எங்களை
தங்கள் வீட்டு பிள்ளைகள் போல் ஆதரிப்பார்கள்.
முந்தாநாளுக்கு முதல் நாள் ஒரு அடிபுடி நடந்ததே,
மொத்தமாக சேர்ந்து எல்லோரையும் திட்டினோமே
என்ற எந்த அறிகுறியும் அங்கு இருக்காது. அன்பு
மட்டும்தான் அங்கு கொட்டிக்கிடக்கும். ஆரோக்
கியமான பேச்சுத்தான் அங்கு பேசப்படும்.
Yes,Done. Everything Undercontrol.
இதுதான், இப்படித்தான் கிழக்குமாகாணம்
முழுவதும் இனக்கலவரங்கள் நடந்தன. தமிழனும்,
சோனவனும் சாதி , சமயம்,குலம், கோத்திரம்
பார்த்ததே கிடையாது. 1983 July என்ற அந்த
மாதம் பிறக்கும் வரை.
1983 என்ற ஒரு ஆண்டு, இப்படி ஒரு கேடுகெட்ட,
மானங்கெட்ட,தறிகெட்ட ஆண்டு பிறந்திருக்கவே
கூடாது. இந்த ஆண்டு பிறக்கும்வரை, நாங்கள்,
வட கிழக்கு மக்களாகிய நாங்கள், மனிசன்,
மனுசனாகவே வாழ்ந்தோம். இந்த ஆண்டு பிறந்த
பிற்பாடுதான் எங்களுக்கெல்லாம் தெரிந்தது நாங்க
சோனவன், இந்த நாட்டுக்கு கள்ளத்தோணில
வந்தவர்கள், அவர்கள் தமிழர்கள், அவர்களெல்லாம்
கல்தோன்றி மண்தோன்றாக்காலத்துக்கு, முன்
தோன்றிய மூத்த குடிகள், மற்றவர்கள் சிங்களவர்கள்,
இந்த நாட்டிட ஒரிஜினல் சொந்தக்காரர்கள், வேடர்கள்
என்று கொஞ்சப்பேர் மகியங்கன காட்டில்
இருக்கின்றார்கள், அவர்களுக்கும் இந்த
சிறிலங்காவுக்கும் தொடர்பே இல்லை என்ற
சங்கதிகள் எல்லாம் இந்த 1983 July பொறந்த
பின்னர்தான் தெரிந்தது.
பச்சைப்பசேலென்று இருந்த எங்கள் பூமி
கந்தக பூமியானது, பூமி மட்டும் கந்தகமானால்
பறுவாயில்ல, மக்களும் கொஞ்சம் நெருக்கு
வாரப்பட்டார்கள்.கிழக்குமாகாணத்தை
சேர்ந்த சகல முஸ்லிம்களினதும் கைகள்,
கால்கள், வாய்கள் அனைத்தும் கட்டாமல்
கட்டப்பட்டன, இரும்பு தடிகள் கொண்டு
நாங்கள் மெளனிக்கப்பட்டோம்.
எங்கள் குழந்தைகளே, எங்கள் தொண்டைக்
குளிக்குள் துப்பாக்கிகளை சொருகினார்கள்,
எங்களால், எங்கள் முன்னால் வளர்ந்த, எங்கள்
தோழர்களே எங்களை தோப்புக்கரணம் போடச்
சொன்னார்கள். நாங்கள் சோனகனாக, சோனியாக
பிறந்தது குற்றம், குற்றம்டா நாயே என
சொன்னார்கள், எங்களை தண்டித்தார்கள்,
வம்புக்கிளுத்தார்கள், வேண்டத்தகாத
வார்த்தைகளால் திட்டினார்கள், நாங்கள்
கொஞ்சம் மாறத் தொடங்கினோம்.
எங்கள் மூளைகளை கசக்கத் தொடங்கினோம்.
எங்கள் முண்ணான்களுக்கு வேலை கொடுத்தோம்,
எமக்கும், எம்மிடமும் கொஞ்சம் ஆயிதமும்,
ஆரோக்கியமான அமைப்பும் இருந்தால்,முண்டு
கொடுக்கலாமோ என யோசிக்கும் போதே,
அன்றைய பாதுகாப்பு அமைச்சு, திருவாளர்,லலித்
அதுலத் முதலியும், அவரது சகாக்களும் எமது
கதவுகளை தட்டினர். ஆம் அகில இலங்கை
ஜிகாத் அமைப்பு 1984 October ஒக்டோபரில்
உதயமானது.
( இன்ஷாஹ் அல்லாஹ் இறைவன் நாடினால் தொடருவேன்…. )