அழிப்புகளை பற்றி அறியாதவரால் நடத்தப்படும் எழுகதமிழ்?.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான உன்னிச்சை குளம் உடைப்பெடுத்த ஆண்டு 1958. அப்போது எனக்கு இரண்டு வயதானாலும், பத்து வயதில் அந்த குளக்கட்டில் நடந்து போன போது அந்தக் குளம் உடைப்பெடுத்த வேளை நடந்த அனர்த்தங்களை, என் மாமா கூறியது இன்று என் அறுபது வயதிலும் பசுமரத்து ஆணியாய் நினைவில் உள்ளது. அன்று நடந்தது இயற்கையின் சீற்றம் மட்டும் அல்ல, பொறுப்பான அதிகாரியின் கவலையீனமுமே.

குறித்த அளவு நீருக்கு மேல் தேக்காமல் நீரை வெளியேற்றும் கதவுகளை, ஓரளவு திறக்க அவர் முடிவெடுத்து இருந்தால், அந்த பெரும் அனர்த்தம் அன்று நிகழ்ந்திராது. ஆனால் அவர் விட்ட தவறு பேரழிவை மட்டுமல்ல பெரும் உயிர் சேதத்தையும் தந்தது. அது தனி மனித தவறு. தண்டிக்கலாம் மறக்கலாம். ஆனால் அதே தவறை அரசு செய்தால் தண்டிக்க முடியுமா? மறக்க முடியுமா? ஏனென்றால் தனிமனித தவறுக்கும் அரசின் தவறுக்கும் வேறுபாடு உண்டு.

ஒற்றை முடிவை எடுப்பவன் தனி மனிதன். கூட்டு முடிவை எடுப்பது அரசு. தனிமனித முடிவு சமூகத்தை பாதித்தால் அவனை சிறைக்கு அனுப்பலாம். அரசே தவறு செய்தால் அவர்களை தண்டிப்பது யார். கண்டிக்க மட்டுமே சாமானியனுக்கு முடியும். அதனால் அநியாயம் நடந்த நாளை நினைவில் கொண்டு, ஒன்று கூடி தம் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நாளாக, அந்த நாளில் ஒன்று திரள்வர். அப்படியான ஒரு நாள் தான் கொக்கட்டிசோலை படுகொலை நிகழ்ந்த நாள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொங்கல் நாள் நடத்த தெரிவு செய்த நாளை ஈடுசெய்த நாளில், தம் எழுக தமிழ் நிகழ்வு நடந்தால், மாணவர் படிப்பு வீணாகும் என்று, அடுத்த நிகழ்வுக்கான நாளாக பேரவையினர் முதலில் அறிவித்த நாள், கொக்கட்டிச்சோலை படுகொலை நடந்த நாள். மண்ணைப் பற்றி தெரியாத மண்ணின் மைந்தர்கள் பற்றி புரியாத, அவர்களுக்கு நடந்த அநியாயம் பற்றி அறியாத, அந்த மகளின் உணர்வுகள் பற்றி தெளிவின்றி, வந்தேறிச் செல்பவரின் ஏற்பாடுகள் தான் அந்த நாள் தெரிவு.

உள்ளூர் கொக்குகளுடன் கூடிக்குலவி செல்லும், கூழக்கடாக்கள் இவர்கள் என்பதை அறிந்து தான் ஆட்காட்டியும், கூவான் கோழியும் தலை தலையாய் அடித்து, திகதியை மாற்ற சொன்னதால் புதிய திகதி அறிவிக்கப்பட்டது. மக்களையும் மண்ணையும் காக்க புறப்படும் முன், அந்த மண்ணையும் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றிய தெரிதல், புரிதல் இன்றி, இருக்கும் பணத்தில் எவரையும் விலைக்கு வாங்க முடியும் என புறப்பட்டவர் முகத்தில், கிழக்கு மக்கள் பூசிய முதல் கரி இது. வாழ்த்துகிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவுக்கு சவாலாக எழுக தமிழ் நிகழ்வை நடாத்த அறிவித்த 21ம் திகதி, பாடசாலை நடைபெறும் அதனால் மாணவர் பாதிப்பை தவிர்க்க, 28ம் திகதியை அறிவித்த இந்த அறிவுஜீவிகள் அன்றுதான் கொக்கட்டிசோலை படுகொலை நடந்த தினம் என்ற நினைவு கூட இன்றி, தங்கள் நிகழ்வை நடாத்த முடிவெடுத்தனர். வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக நடாத்தும் நிகழ்வுதான் இது என்பதை நிரூபிக்க, இவர்களின் இந்த செயல் ஒன்றே சாட்சி.

காரணம் மட்டக்களப்பில் ஒரு குறிப்பிட்ட மாதம் மற்றும் திகதியை கூறியவுடன், அந்த மக்களின் மனதில் எழும் நினைவுகள், தங்கள் மண்ணில் நிகழ்ந்தேறிய படுகொலைகள் பற்றியதாகவே இருக்கும். தை மாதம் 28ம் திகதி என்றவுடன் கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு பண்ணையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், புரட்டாசி மாதம் 5ம் திகதி என்றால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்தவை. புரட்டாசி மாதம் 9ம் திகதி என்றால் சத்துருக்கொண்டான் படுகொலைகள் என்பவை தான் அவர்கள் நினைவில் வரும்.

ஆண்டு தோறும் தாம் பறிகொடுத்த தமது உறவுகளை நினைவு கூர அவர்கள் தவறுவதில்லை. அந்த மண்ணில் எழுக தமிழ் நிகழ்த்த சென்றவர்களுக்கு இது கூட தெரியாதென்றால் இதை விட வெட்கக் கேடான செயல் ஏதும் உண்டா? மக்களின் உணர்சிகளுடன் விளையாடும் இவர்களுக்கு, அவர்களின் உணர்வுகள் பற்றிய தெளிவு இல்லை. அங்கு நடந்த கொடூரமான நிகழ்வுகள் பற்றியும் அக்கறை இல்லை. இவர்களுக்கு தேவை சங்கூத சந்தர்ப்பமும், பறை அடிக்க நிகழ்வும் மட்டுமே. கிடைக்கின்ற நிதியில் அடிக்கின்ற கூத்தைக் காட்டியே, சர்வதேசத்திடம் நீதி கேட்கப் போகிறார்களாம்.

கூரை ஏறி கோழியே பிடிக்க முடியவில்லை, இதில் வானம் ஏறி வைகுண்டம் போக முனைகின்றனர். தமக்கு கிடைத்த நிதிக்கு கணக்கு காட்ட, வசதியான திகதிகளைத்தான் இவர்கள் தெரிவு செய்கிறார்களோ தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவே பல லட்சங்கள் காலியாவதாக கணக்கு காட்டலாம். அப்புக்காத்துகள் தம் வரவுக்காக, வாய்தா மேல் வாய்தா கேட்டு வழக்கை இழுத்தடித்து, பணத்தை கறப்பது போலவே இவர்களும் நிகழ்வுகளை நடத்துகிறார்களோ என எண்ணத்தூண்டுகிறது

உள்ளூரில் இன்னமும் உழவு வேலை முடியவில்லை. அதற்குள் வெளியூரில் கலப்பை பூட்டும் செயல் தான் இதுவும். வடக்கில் தங்கள் இருப்பை தக்க வைக்க, கூட்டமைப்புக்கு சவாலாக தமிழ் மக்கள் பேரவை மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டது. கீரை கடைக்கும் எதிர்க்கடை தேவைப்பட்டதனால் அதனை வரவேற்க பலர் தயாரானார்கள். காரணம் கூட்டமைப்பின் துரிதமான செயல் பாட்டுக்கு இது தூண்டுதல் சக்தியாக இருக்கும் என்ற எதிர்பார்க்கை. அரசியல் தீர்வுக்கான இரட்டை குதிரை சவாரி விரும்பப்பட்டது.

தனிக்குதிரையால் இழுக்கும் சுமையை விட, இரட்டை குதிரை அதிக சுமையை இழுத்தால், அதிகூடிய அதிகார பரவலாக்கலை பெறலாம் என கணக்கு போட்டு, கனவுகண்டவருக்கு அது பகல் கனவாய் பலிக்கவில்லை. ஒரே பாதையில் பயணத்தை தொடர விடாமல், பேரவை குதிரை வேறு திசையில் இழுக்க, வேடிக்கை பார்த்த சிங்களம் தீர்வு பொதியை தனக்கு வேண்டியவாறு, குறைத்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், ஒற்றை குதிரை வண்டிலில் ஏற்ற இருந்த பொதியையும் இறக்கி வைத்துவிட்டது.

வடக்கில் நிகழ்ந்த எழுக தமிழ், கோடை முழக்கம் போல மழையை கொண்டுவரவில்லை. எந்தவிதப் பயனையும் மக்களுக்கு தரவில்லை. அதை நடத்தியவர் அடைந்த பலாபலன்கள் பற்றி மட்டுமே, கூட இருந்தவர்கள் அறிவர். மட்டக்களப்பில் நடைபெற இருந்தது பின்தள்ளிப் போனதால், இதுவரை வந்த பணத்துக்கு கணக்கு முடித்திருப்பார்கள். தாம் கூட்டம் கூடி பேசியது, துண்டுப்பிரசுரம் அடித்தது, கொக்கட்டிசோலை வரை பயணித்தது, ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிகையாளர் மாநாடு நடத்தியது என எக்கச்சக்க செலவாம்.

இனி நடக்க இருப்பதற்கு புது கணக்கு எழுதவேண்டும். பழைய கணக்கு புத்தகம் இனி பரண் ஏறிவிட புலம் பெயர் நிதியின் புதிய வரவு வந்ததும், புதுக்கணக்கு ஆரம்பிக்கப்படுவது மட்டும் உறுதி. தற்போது பெப்பிரவரி 10ம் திகதியை அறிவித்த இவர்கள் பெப்பிரவரி 4ம் திகதியை (சுதந்திர தினம்) தெரிவு செய்திருந்தால் ஜோராக இருந்திருக்கும். நீண்ட காலத்தின் பின்பு மட்டக்களப்பில் தொடர்ந்து மழை பெய்வதால், விவசாய மக்கள் அடைந்துள்ள சந்தோசத்தை தாமும் பங்கு போட, இவர்களின் அறிக்கை இப்படி வந்தாலும் வரலாம்.

‘எழுக தமிழ் என்ற கோசம் எங்கே தன்னை துளைத்து விடுமோ என்ற பயத்தில், வானம் பணிந்தது மழையை பொழிந்தது!’

(ராம்)