பின்னர் ஏன் அவர் நடாத்திய போரட்டத்தின் மீதும் அவர் மீதும் அடிக்கடி விமர்சனம் வைக்கின்றீர்கள்?
உமக்கு அதை எப்படி விளங்கப்படுத்துவது என்று எனக்கு விளங்கவில்லை ,நான் விளங்க படுத்தினாலும் உமக்கு விளங்குமோ தெரியாது .
உங்ககளுக்கு பொறாமை .. அதுதான்….. என்று இழுத்தார் .
சரி ஒருக்கா கேளும் ,
இன்று முள்ளிவாய்கால் பத்தாண்டு நிறைவு வடக்கு கிழக்கில் இலங்கையில் இருக்கும் இவ்வளவு அரசியல் குழப்பதிற்கும் இடையில் இவ்வாறு நடந்து முடிந்தது பெரிய விடயம் தான்.
அதை விட உலகம் எங்கும் பரந்திருக்கும் தமிழர்கள் நினைத்தும் பார்த்திருக்க முடியாத அளவில் பெருமளவில் திரண்டும் அங்கு இருக்கும் அந்த நாட்டு அரசியல்வாதிகளையும் இணைத்து ஒரு சர்வதேச நினைவு நிகழ்வாக முள்ளிவாய்கால் நினைவு நாளாக மாற்றிவிட்டதும் உண்மை ,
தமிழ்நாட்டில் இன்று பட்டி தொட்டி எங்கும் அவரது நாமம் ஒலித்ததும் அவரது மகனின் படத்தை தாங்கி பலர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிகள் செய்ததும் எவராலும் நினைத்தும் பார்க்க முடியாத மாபெரும் எழுச்சி நிகழ்வுதான்.
உலகம் எங்கும் இருக்கும் அனைத்து தமிழ் ஊடகங்கள் முள்ளிவாய்க்கால் நினைவு பாடல்கள் ஒலிக்க கவிதை ,நினைவு பதிவுகள் என்று தமிழர்கள் மனங்களை புல்லரிக்க வைத்ததிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை
அதை விட இந்த வருடம் அடுத்த தலைமுறைக்கு முள்ளிவாய்காலில் எமது மக்கள் இறுதி நேரத்தில் அனுபவித்த அந்த பஞ்சத்தை தொடர்ந்தும் எடுத்து செல்ல “முள்ளிவாய்கால் கஞ்சி ” என்பதை அறிமுக படுத்தி அதை பெருவெற்றி ஆக்கியதும் பெரிதும் மதிக்க வேண்டிய ஒரு விடயம் .
என்னண்ணை அடுக்கி கொண்டு போகின்றீர்கள் , இதை விட வேறு என்ன வேண்டும் ஒருக்கா சொல்லுங்கோ ?…
அவன் நாமம் இல்லாமல் இன்னொரு தலைவன் எமது போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் மேலே நான் சொன்ன எதுவும் நடைபெற்றிராது என்பது உண்மைதான் .
அனேகமாக இதுதான் நடைபெற்றிருக்கும்,
இன்று தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதியாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் .
அப்படி ஒரு தலைவனின் பெயர் உலகதமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருக்க மாட்டாது .
தமிழ் மக்களுக்கு வேண்டியதை முடிந்தவரை சர்வதேசத்தின் அனுசரணையுடன் முடித்திருப்பார்.
2009 வரை போராட்டம் நீடித்திராது
இந்தியன் ஆர்மியுடன் சண்டை வந்திராது ,
இவ்வளவு போராளிகளும் உயிர் விட்டிருக்கமாட்டார்கள்
இந்த அளவு பொது மக்கள் அநியாயமாக பலியாகி இருக்கமாட்டார்கள்.
முள்ளிவாய்கால் என்ற நிகழ்விற்கே இடம் இல்லை, நான் மேலே குறிப்பிட்ட புலம் பெயர்ந்தவர்களின் எந்த நிகழ்வும் நடந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.
எண்பதுகளின் இறுதியிலேயே ஒரு ஆக்க பூர்வமான தீர்வு வந்திருக்கும்.
தமிழ் மக்கள் அந்த தீர்வுடன் நிம்மதியாக இருந்திருப்பார்கள் .
இவ்வளவு தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து இருக்கமாட்டார்கள் .
இன்று இவர்களின் ஊடகங்களில் நான் பார்த்த கேட்ட இரு விடயங்களை சொல்லுகின்றேன் .
பொது மக்கள் முள்ளிவாய்காலுக்கு அஞ்சலிக்கு செலுத்த செல்லும் போது இலங்கை இராணும் இன்றும் சோதினை செய்துதான் உள்ளே அனுப்புகின்றான் . புலம் பெயர்ந்தவன் நிம்மதியாக கொடியுடன் ஊர்வலம் போகின்றான் .
இதற்காக இத்தனை வருட போராட்டம் .
கனேடிய வானொலியில் ஒருவர் சொன்னது ,முள்ளிவாய்காலில் உயிர் நீத்த ஒரு போராளியின் மனைவி நாலு பிள்ளைகளையும் வீட்டில் விட்டு ஒரு மருத்துவரின் வீட்டிற்கு வேலைக்கு செல்கின்றாராம் .காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணி வரை அங்கு வேலையாம்.
புலம்பெயர்ந்த இயக்க பொறுப்பார்கள் மாடி வீடு கார் விடுமுறை என்று சுற்றியடிக்க
போராளி குடும்பங்களுக்கு இந்த நிலையா ?
வேறு எந்த இயக்க தலைவனும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் இந்த நிலை வந்திராது என்று நம்புகின்றேன் என்றேன் .
மறு முனையில் மௌனம் …
தொலைபேசியை வைத்தாரோ அல்லது நான் சொல்வது அவருக்கு விளங்கவில்லையோ தெரியவில்லை ….