குஜராத் 2002 இன அழிப்பு நடந்த கையோடு புகழ்பெற்ற சமூகப் பொருளாதார ஆய்விதழான EPW ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் உள்ள மிக முக்கிய அறிஞர்கள் அனைவரும் குஜராத் இன அழிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருந்தனர். உடனடியாக அவற்றை தமிழில் பெயர்த்தேன். எனது கட்டுரைகளையும் இணைத்து (மொத்தம் சுமார் 350 பக்கங்கள்) “குஜராத்: அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும்” எனும் நூலாக அது வெளிவந்தது (அடையாளம் பதிப்பகம்).
அதில் டாக்டர் பாலகோபாலின் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. தனது ஆட்சிக்கு நேர்ந்த அவப் பெயரை நரேந்திர மோடி எப்படியெல்லாம் சமாளிக்க முனைந்தார் என்பதையும் அது இன்னும் எத்தனை ஆபத்தான ஒன்று என்பதையும் அதில் அவர் விளக்கியிருப்பார்.
நரேந்திர மோடி செய்த வேலைகளில் ஒன்று குஜராத்தின் “சுயமரியாதை” யைக் காப்பாற்றும் (!) யாத்திரை போனது. அதாவது குஜராத் கலவர பூமி எனவும், குஜராத்தில் மதத்தின் பெயரால் வன்முறைகள் , கொலைகள், சொத்தழிப்புகள், வன்கொடுமைகள் நடக்கின்றன என்பதையும் வெளிப்படுத்தி உலகில் குஜராத் மக்களின் சுயமரியாதை / கௌரவம் அழிக்கப்படுகிறது எனவும், குஜராத் மக்கள் அனைவரும் (அதாவது மோடியின் அகராதியில் இந்துக்கள் அனைவரும்) அணி திரள வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்வது அந்த யாத்திரையின் நோக்கம்.
கௌரவம்/ சுயமரியாதை என்பதற்கான குஜராத்தி மொழிச் சொல்லான “அஸ்மிதா” என்பதை நரேந்திர மோடி இதற்குப் பயன்படுத்தினார். அதுதான் குஜராத்தி அஸ்மிதா யாத்திரை…
# # #
இன்று கதை திரும்பியுள்ளது.
தலித் மக்களுக்குக் காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் அவமானங்களுக்கும், துயரங்களுக்கும் வரலாறு காணாத எதிர்வினையாக இன்று அவர்கள் எழுந்துள்ளனர்.
அந்தப் போராட்டத்தின் ஓரங்கமாக இன்று அவர்கள் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள “ஊனா”வை நோக்கிப் பாத யாத்திரை துவங்கியுள்ளனர். மாட்டுத்தோலை உரித்தத்தற்காக தலித்களின் தோலை பசு நேயர்கள் உரித்த இடம்தான் ஊனா.
அந்தப் பாத யாத்திரைக்கு தலித் மக்கள் இட்டுள்ள பெயர் “தலித் அஸ்மிதா யாத்திரா” ! அதாவது “தலித் சுயமரியாதை நடைப் பயணம்”
ஆக வரலாறு திரும்பியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன் நரேந்திர மோடி சென்ற பயணம் சுயமரியாதை என்கிற சொல்லையே இழிவு படுத்திய வெறிப் பயணம். இன்று தலித் மக்கள் மேற்கொண்டுள்ள அஸ்மிதா யாத்ரா உண்மையான சுயமரியாதைப் பயணம்.
இந்துத்துவ மத வெறியர்கள் இந்த அஸ்மிதா யாத்திரையைக் கண்டு அடி வயிறு கலங்கிக் கிடக்கின்றனர்.
# # #
தலித் எழுச்சியின் உக்கிரத்தால் அடிவயிறு கலங்கிக் கிடப்பவர்கள் இந்த நிலைமையைச் சமாளிக்க தெருவில் இறங்கிக் குட்டிக்கரணம் அடிக்கவும் தயாராக உள்ளனர். இந்துத்துவ வெறி அமைப்புகளின் தாய்க் கழகமான RSS இயக்கம் அதனுடைய எண்ணற்ற வால்களில் ஒன்றான ‘சமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச்’ (SSM) எனும் அமைப்பை இதற்கெனக் களம் இறக்கியுள்ளது.
இது ஊனா சம்பவம் நடந்த மூன்று வாரங்களுக்குப் பின் அந்த ஊர் சந்தைக்கடைப் பகுதியில் 70 “ஆன்மீகத் தலைவர்களை” க் கொண்டுவந்து “சமாஜிக் சத்பவன் சம்மேளன்” (ஏதோ ஓட்டல் பெயர் மாதிரி இருக்குல்ல) ஒன்றை நடத்தியுள்ளது.
பசுப்பாதுகாப்பின் பெயரால் நடக்கும் வன்முறைகளுக்காக அந்தச் சம்மேளனம் நீலிக்கண்ணீர் விட்டுக் கலைந்து போயுள்ளது.
நரேந்திர மோடி நேற்று புலம்பியுள்ளதும் இந்தப் பின்னணியில்தான்.
(Marx Anthonisamy)