நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப #P2P எனும் குறியீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதனால்தான் என்னவோ, மக்கள் அலையெனத் திரண்டுவந்து, சுயமாகவே தங்களுடைய ஆதரவை நல்கியுள்ளனர்.
பொலிஸார், அதிரடிப்படையினர், இராணுவத்தினர், சிவிலுடையில் கூட்டத்தோடு கூட்டமாய் கோஷமிடுவதாய் சுற்றித்திரியும் புலனாய்வாளர்களின் கடுமையான எதிர்ப்பு, போன்ற செயற்பாடுகளுக்கு மத்தியில் ஓரணியில் சென்றிருக்கிறது இந்தப் ‘பொத்துவில்-பொலிகண்டி பேரணி’.
இதற்கிடையில், நீதிமன்றத் தடைகள், கொட்டும் மழை, கொளுத்திய வெயில் இவையெல்லாம் நீதியைக் கோரிய ஒரு பேரணிக்குச் சவாலாகவே இருக்கவில்லை என்பது, பேரணி கடந்து சென்ற ஒவ்வொரு நகரங்களிலும் காணக்கிடைத்து.
உரிமைகளைக் காப்பாற்றுவதற்கான பேரணி, அதற்கப்பால், உறவுப்பாலத்துக்கு வித்திட்ட பேரணி என்றால்கூட தவறில்லை. ஆனால், அந்த உறவுப்பாலத்தைத் தற்காத்துக்கொள்வதுதான் எதிர்காலத்தில் சிறுபான்மையினருக்கு மிகவும் சிறந்தது.
பல மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஓரணியில் திரண்டு, பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளமையை வரவேற்காமல் இருக்கமுடியாது. இதற்கிடையே, சீருடையில் நிற்கும் பொலிஸார் கூடத் துப்பாக்கியை ஏந்தும் கைகளில், தங்களுடைய திறன்பேசிகளைப் பயன்படுத்தி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களின் பார்வையில் அது அரசுக்கு எதிரான போராட்டமாகும்.
ஆக, பேரணியில் கலந்துகொண்டவர்கள் கண்காணிக்கப்பட்டு விட்டார்கள்; அவ்வாறனர்வர்களுக்கு எதிராக, ஏதாவதொரு குற்றச்சாட்டை முன்வைத்து, கைது செய்யும் படலம் ஆரம்பிக்கப்படலாம். ஆகையால், தேவையில்லாத வீணான செயற்பாடுகளில் அவ்வாறானவர்கள் தலையிடாமல் இருப்பது உசித்தமானது. ஏனெனில், கடந்தகாலங்களில் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் இடம்பெறாமல் இல்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், இன்னும் சந்தேகநபர்களாகவே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யான பேரணிக்குத் தமிழ்பேசும் சிறுபான்மையின மக்களின் தற்போதைய பிரச்சினைகளை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, தொனிப்பொருளாக்கியதன் ஊடாக, ஒவ்வொரு சிறுப்பான்மை இன மனங்களிலும் இப்பேரணி தொடர்பில் ஓர் உத்வேகம் எழும்பியது. அதுவே, இப்பேரணிக்கு வெற்றியை ஈட்டித்தந்திருக்கின்றது.
இதற்கிடையே, பேரணியில் பயணிக்கும் வாகனங்களை மட்டுமன்றி, நடந்து செல்வோரின் பாதங்களையும் பதம்பாக்கும் வகையில், அதுவும் படைத்தளங்கள் அமைந்திருக்கும் இடங்களுக்கு அண்மையில் கூர்மையான ஆணிகள், நிலைக்குத்தாக தலைகீழாக புதைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியிருந்தன.
அவ்வாறான இரும்பு ஆணிகளால், போராட்டத்தின் சுவாசக்காற்றை இல்லாமல் செய்யமுடியாது என்பது, சிறுபான்மை இனத்தின் ஒற்றுமையின் மூலம் நிரூபணமாகிவிட்டது. அவ்வாறு இணைந்த கரங்கள், இணைந்தவையாகவே இருக்கவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
(Tamil Mirror)