டொனால்ட் ட்ரம்பின் காலத்தில் மோதல் நிலையை அடைந்த அமெரிக்க-சீன உறவு, ஜோ பைடனின் தலைமைத்துவத்தில் புதிய கட்டத்தை அடைகிறது. பைடன் ஓபாமா காலத்து ‘ஆசியாவை முன்னிலைப்படுத்தலை’ (Pivot to Asia) மீண்டும் கையில் எடுக்கிறார்.
சீனாவைக் கையாள்வது தொடர்பில், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இருந்தபோதும், ஆசியாவின் மீது கவனம் குவிப்பதே சரியானது என, அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் நினைக்கிறார்கள். சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதே, அதை வீழ்த்துவதற்கான வழி என, சிலர் காரணம் காட்டுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை (12) இதற்கான முதலாவது அடியை, அமெரிக்க ஜனாதிபதி பைடன் எடுத்து வைத்தார். கூட்டாளிகளான ஐப்பான், அவுஸ்திரேலியா, இந்தியாவுடன் இணைந்த கூட்டுக்கூட்டமொன்றை இணையத்தின் வழி நடத்தினார். கொரோனா பற்றியதும் காலநிலை மாற்றங்கள் பற்றியதுமான கூட்டம் என்று அழைக்கப்பட்டாலும், அதன் உள்ளடக்கம் சீனாவைக் கையாள்வது பற்றியதாக இருந்தது.
இக்கூட்டத்தை அடுத்து, பைடனின் இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் ஆகியோர் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு, ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் சென்றார்கள்.
சீனாவைக் கையாளுவது தொடர்பில், ஜோ பைடன், பல்முனைச் சவால்களை எதிர்கொள்கிறார். கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகம் முழுமையாக மாறிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்த உலக ஒழுங்கின் தொடர்ச்சி இப்போது இல்லை. உலகின் தலைமகனாகத் தன்னை வரித்துக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு சவால்மிக்க பலமான போட்டியாளராகச் சீனா உருவெடுத்துள்ளது.
அதேவேளை, ட்ரம்பைத் தோற்கடித்து, பைடனைப் பதவிக்கு கொண்டு வந்த ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இடையே, சீனாவைக் கையாள்வது தொடர்பில் ஒருமித்த கருத்து இல்லை.
ஒரு சாரார், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கையாண்ட முறையை, முழுமையாகக் கைவிடக் கோருகிறார்கள். அவர்கள், சீனாவுடனான கெடுபிடிப்போரை விரும்பவில்லை. இது, அமெரிக்காவுக்கு நீண்டகாலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள். அதேவேளை, சீனாவின் மீதான மனித உரிமை குற்றச்சாட்டுகளை அழுத்தமாக பயன்படுத்த விரும்புகிறார்கள்.
மறுசாரார், அமெரிக்காவின் பலம்வாய்ந்த செல்வந்தப் பராசுர நிறுவனங்களை அடையாளப்படுத்தும் ‘வோல் வீதி’, ‘சிலிக்கன் பள்ளத்தாக்கு’ ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட ஜனநாயக கட்சிக்காரர்கள், சீனாவுடனான உறவை மீண்டும் நெருக்கமாக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஏனெனில், அவர்களது வியாபார நோக்கங்களுக்கு அதுவே பயன் விளைவிக்கும்.
மூன்றாவது சாரார், சீனாவுடனான புதிய நெருக்கம் பல அமெரிக்கர்களை வேலையில்லாமல் ஆக்கும். அமெரிக்க வேலைகளை, மிகக் குறைந்த விலையில் சீனாவில் செய்துமுடிக்க இயலும். ஆகையால், தொழில்கள் சீனாவை நோக்கி இடம்பெயரும், அச்சத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்; எச்சரிக்கிறார்கள்.
நான்காவது சாரார், இன்று உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில், சீனாவைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி, சீனாவுடன் அமெரிக்கா இணைந்து வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். இவ்வாறு வெவ்வேறுபட்ட கோரிக்கைகளின் நடுவேதான், ‘ஆசியாவை முன்னிலைப்படுத்தலை’ ஜனாதிபதி தனது கரங்களில் ஏந்தி இருக்கிறார்.
சீனாவைக் கையாள்வது தொடர்பில், மூன்று அடிப்படையான சவால்களுக்கு, அமெரிக்கா இன்று முகம் கொடுக்கிறது.
முதலாவது, சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளை எவ்வாறு தவிர்ப்பது அல்லது, தக்கவைப்பது என்கிற வினா.
இன்று, அமெரிக்க வர்த்தகத்தில் சீனாவும் சீன வர்த்தகத்தில் அமெரிக்காவும் தவிர்க்க இயலாமல் தங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக, அமெரிக்கப் பொருளாதாரம் சீனப் பொருளாதாரத்தில் மிகப் பாரிய அளவில் தங்கியுள்ளது. குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகள், அமெரிக்காவுக்கு மிகப் பாரிய பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீன- அமெரிக்க உறவை எவ்வாறு கட்டமைத்து, அமெரிக்க நலன்களைப் பேணுவது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
சீனாவுடன் ஒரு மோதல் போக்கைக் கடைப்பிடிக்க அமெரிக்கா விரும்பினாலும், அமெரிக்கப் பொருளாதாரம் மிகப் பாரிய அளவில், சீனாவில் தங்கியுள்ளது. இந்நிலையில், சீனாவைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப் படுத்துவது மிகவும் சவாலானதாக இருக்கிறது.
இரண்டாவது, இராணுவ ரீதியாக, அமெரிக்காவுக்கு நிகரான இராணுவ தொழில்நுட்பத்தை, சீனா கடந்த 10 ஆண்டுகளில் பெற்றுள்ளது. எனவே, சீனாவுக்கு அண்மித்த கடற்பரப்பில் காலம் காலமாக, அமெரிக்கா நடந்து வந்த முறையில் தொடர்ந்தும் நடக்கவியலாது. முன்புபோல, சீனாவை இராணுவ ரீதியாக அச்சுறுத்துவது, சாத்தியமற்றதாகி வருகிறது.
இந்நிலையில், இராணுவ ரீதியாக ஆசியாவின் ஆதிக்கத்தைத் தக்கவைப்பது என்பது, அமெரிக்காவின் உடனடியான கொள்கை சார்ந்த சவாலாக இருக்கிறது. அதேவேளை, தனது நட்பு நாடுகளை வைத்தபடி, சீனாவுக்குச் சவால் விடும் பாணியைக் கடைப்பிடிக்க அமெரிக்க விரும்புகிறது.
அமெரிக்கா எதிர்நோக்கும் மூன்றாவது சவால், ஆசியாவில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்று ஆண்டாண்டு காலத்துக்கும் நம்பிக்கையோடு இருந்து வந்த நாடுகள், மெதுவாக சீனாவின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளன. எனவே அந்த நாடுகளை மீண்டும் அமெரிக்கச் செல்வாக்குக்கு கொண்டு வந்து சேர்ப்பது மிகுந்த சவாலானது. இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க-ஜப்பானிய-அவுஸ்திரேலிய-இந்தியா இணைந்த நால்வர் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.
இங்கு வலிந்த போரொன்றை, ஆத்திரமூட்டல்களின் ஊடு செய்வதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. அமெரிக்கக் காங்கிரஸூக்கு வழங்கிய அறிக்கையில், ஆசியப் பசுபிக் பிராந்தியத்துக்கான கட்டளைத் தளபதி, தனது பிராந்தியத்துக்கான இராணுவச் செலவீனத்தை இருமடங்காக்குமாறு கோரினார்.
அதேபோல, சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை அதிகரித்து, போராக மாற்றிவிடும் பணியை அமெரிக்கா தொடர்ந்து செய்து வருகிறது. இதேவேளை, சீனாவை மூலோபாய ரீதியாகத் தடுப்பதற்கும் கையாள்வதற்கும் தென்னாசியப் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாடு, மிகவும் முக்கியமானது.
அமெரிக்க மூலோபாயத்தின் மையமாக, இந்தியப் பெருங்கடலின் மீதான கட்டுப்பாடே தீர்மானகரமானது. இந்தியப் பெருங்கடலின் மீதான ஆதிக்கத்தின் மூலம், சீனக் கடற்பாதைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் அதன்மூலம் சீனாவின் பொருளாரத்தைச் சிதைப்பதும் இதற்காகவே, இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்தும் முனைப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த மூலோபாயப் போட்டியில், இரண்டு பகுதிகள் மூலோபாய ரீதியிலும் தந்திரோபாய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
முதலாவது, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
இரண்டாவது இலங்கை.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தியப் பெருங்கடலில் வடக்கின் அரைவாசிப் பகுதி தூரம் வரை நீண்டிருக்கின்றன. இது, இந்திய பிரதான நிலப்பரப்பிலிருந்து 1,700 கிலோ மீட்டருக்கும் (1,050 மைல்) அதிகமான தூரத்தில் தீவுத் தொடர்களைக் கொண்டிருக்கிறது. இத்தீவுக் கூட்டங்களின் முக்கியத்துவம் யாதெனில், உலகளாவிய வணிகத்தின் ‘உயிர்மையம்’ என பெயர் பெற்ற மலாக்கா நீரிணைக்குச் செல்லும் கிழக்கு வாசலைப் பாதுகாக்கும் அரணாக இருக்கிறது. இந்த நீரிணையூடாவே,சீனாவின் வர்த்தகத்தின் பெரும்பகுதி நடைபெறுகிறது.
அதேபோலவே,இலங்கையும் முக்கியமானது.
அமெரிக்கா தலைமையிலான நான்கு நாடுகள், சீனாவைக் கட்டுப்படுத்த முனைகையில், ஏனையவை சீனாவுடனான நல்லுறவை விரும்புகின்றன.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம், சீனாவை ஒரு பொருளாதார பங்காளியாகவே காண்கிறது. ஆசியாவில் அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்த ஆசியானும் அதன் உறுப்பு நாடுகளும் மெதுமெதுவாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன.
இன்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ஓபாமால் முன்மொழியப்பட்ட ‘ஆசியாவை முன்னிலைப்படுத்தல்’ திட்டத்தை முழுமையாக மாறிவிட்ட உலக நிலைவரத்தில், அமெரிக்க ஜனாதிபதி கையில் எடுத்துள்ளார்.
இந்தப் பின்புலத்தில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விருத்தி செய்வற்கான ஜப்பானிய-இந்திய முனைப்புகள், திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களுக்கான குத்தகை தொடர்பில் இந்தியக் கவனம் ஆகியவற்றைப் பொருத்திப் பாருங்கள்.
நீண்டதும் மறைமுகமானதுமான ஆசியப் பிராந்தியத்துக்கான யுத்தத்தில் இலங்கை பகுதியாவதைத் தடுக்கவியலாது. கேள்வி யாதெனில், யார் பக்கம் இலங்கை நிற்கப் போகிறது என்பதுதான். இன்னும் சரியாகச் சொன்னால், விற்கப்படும் இலங்கையை வாங்கும் வலு யாருக்கு இருக்கிறது.