(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில் வலிய சொல்லாகியிருக்கிறது. அது யாருக்கானது அல்லது யாருக்கு எதிரானது என்பது அதன் வலிமையைத் தீர்மானிக்கிறது. இப்போது ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளும் அதில் இலங்கையின் மீதான அக்கறையும் ஒருபுறம் கவனத்தை ஈர்க்கையில், மறுபுறம் பேரவையின் முக்கியமான குழுவுக்கான தலைமையை ஐ.நா. சவூதி அரேபியாவுக்கு வழங்கியிருப்பது கடும் விமர்சனத்துக்குட்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உருவாக்கத்தின் மூலம், ஐ.நா. சபை, உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் ஒரு செயன்முறையை ஆக்கியிருக்கிறது. மொத்தத்தில் மனித உரிமைகளின் அளவுகோல்களின் தீர்மானகரமான சக்தியாக ஐ.நா. மனித உரிமைப் பேரவை வடிவுபெற்றுள்ளது. அதன் உருமாற்றம் திடீரென நிகழ்ந்ததல்ல. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக மனித உரிமைகள் கவனிப்புக்குள்ளாயிருந்த போதும், 1990களின் பிற்பகுதியில் அக் கவனம் ஒரு புதிய அரசியற் பரிமாணத்தைப் பெற்றது.
கெடுபிடிப் போரின் பின்னரான ஒற்றை முனைய உலகின் ஆதிக்கச் சக்திகள் உலக நாடுகளில் தலையிடுவதற்கான புதிய வழிமுறைகளைத் தேடின. இந் நிலையில் 1994ம் ஆண்டு ருவாண்டாவில் 100 நாட்களில் எட்டு இலட்சம் பேரைக் கொன்ற கொடிய இனப் படுகொலையும் அதன் போதான ஐ.நா.வின் கள்ள மௌனமும் கையாலாகாமையும் சர்வதேச அளவில் மனித உரிமை பற்றிய புதிய அக்கறைகளை உருவாக்கின.
அதன் தொடர்ச்சியான கோட்பாட்டுருவாக்க முயற்சிகளதும் அதையடுத்த நிறுவனமாக்கற் செயற்பாடுகளதும் விளைவாகவே ஐ.நா. மனித உரிமைப் பேரவை தோன்றியது. ஐ.நா. சபையும் மேற்குலகும் குறைப்பிரசவமாகப் பெற்ற வலதுகுறைந்த குழந்தையே ஐ.நா. மனித உரிமைப் பேரவை. பல ஆண்டுகள் கடந்தும் அது இன்னும் வளரவுமில்லை, வலுப் பெறவுமில்லை என்பதே உண்மை.
அதன் ஆதரவாளர்கள் மனித உரிமைகட்கான சர்வதேச அமைப்பு ஏதும் இல்லாமையை விட ஐ.நாவினுடைய அமைப்பு ஒன்று இருப்பது நன்மை தரும் என வாதிடுவார்கள். எனினும், எதையுமே செய்ய இயலாதபோதும் குறிப்பிட்ட சில நாடுகளின் நலன்களுக்காகப் பக்கஞ் சார்ந்து செயற்படும் ஓர் அமைப்பு இருப்பதை விட இல்லாமை மேல்.
இப்போது மனித உரிமைகளின் பெயரால் நேரடி, மறைமுக அந்நியத் தலையீடுகளுக்கு வழி அமைக்கப்படுகிறது. அந்நியத் தலையீடுகள் பொதுவாகவே பிரச்சினைகளைத் திசைதிருப்பிச் சிக்கல்களை அதிகரிப்பன. இன்றைய உலக ஒழுங்கில் இதன் விளைவு, ஒரு பிரச்சினையை இன்னொன்றாக்குவதாகும். (அதாவது, பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதை வேறொன்றாக மாற்றுவது.) உதாரணமாக, இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையின் அரசியல் தீர்வு என்பது, இறுதிக்கட்டப் போரின் போதும் அதையடுத்தும் மனிதப் பேரவலங்களிலிருந்து மக்களைக் காப்பதாக மாறிப் பின்னர் மனித உரிமைப் பிரச்சனையாகி இன்று உள் விசாரணையாகியுள்ளது.
அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கமும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கமும் இரண்டுக்குமிடையில் இன்றுள்ள தற்காலிக உடன்பாடும் தென்னாசிய நாடுகளின் இறைமைக்கும் அரசியல் உறுதிப்பாட்டுக்கும் கேடானவை. மேலாதிக்கவாதிகள் மேலாதிக்கவாதிகளாகவே நடப்பர் என்பது மீண்டும் தெட்டத் தெளிவாகியுள்ளது.
மனித உரிமைகள் பற்றியும் போர்க் குற்ற விசாரணைகள் பற்றியும் எவரும் பேசுவது ஒடுக்குமுறையாற் பாதிக்கப்பட்டோரின் மீட்சிக்காக அல்ல என நமக்கு இப்போதைக்கு விளங்கியிருக்க வேண்டும். அவை, மேற்குலகு தான் விரும்பாதோரைத் தண்டிக்கவும் தன்னைப் பணியாதோரைப் பணிய வைக்கவும் பயன்படுத்துகின்ற கருவிகள் மட்டுமே.
சூடான், கொங்கோ, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில், தீராத அல்லது நீடிக்கப்படும் உள்நாட்டு யுத்தங்களைக் காட்டி, எவ்வாறு மனிதாபிமான நடவடிக்கை அல்லது மனிதாபிமானக் குறுக்கீடு என்ற பெயரில் அந் நாடுகளுள் அந்நியத் தலையீடுகளும் நெருக்குவாரங்களும் நிகழ்ந்தன என்பதை நினைவு கொள்ளல் தகும். இத் தலையீடுகளில் மனித உரிமையினதும் மனித உரிமைப் பேரவையினதும் பங்கு பெரியது.
இன்று பலஸ்தீனத்தில் நடப்பவை பற்றிய கவனம் மனித உரிமைகள் பற்றியதல்ல. ஐரோப்பாவினுள் நுழைந்து அல்லலுறும் அகதிகளின் அவலமும் மனித உரிமைகளும் பற்றியதல்ல. ஏனெனில், முடிவின்றித் தொடரும் யுத்தங்களும் அவற்றுக்கான ஆயுத விற்பனையும் மனித உரிமை அலுவல்களல்ல.
இவற்றையெல்லாம் தாண்டி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மனித உரிமைகள் பற்றி உரையாடுகிறார்கள் என்றால், எதைப் பற்றி உரையாடுகிறார்கள், யாருக்காக உரையாடுகிறார்கள், யார் உரையாடுகிறார்கள், யாரைப் பற்றி உரையாடுகிறார்கள் என்பன கேட்க வேண்டிய கேள்விகளாகின்றன.
ஐ.நா. மனித உரிமைப் பேரவைச் செயற்பாடுகட்கான அலுவலர்களைத் தெரியும் குழுவானது பேரவையின் பிரதானமானதும் அடிப்படையானதுமான குழுவாகும். இக் குழுவின் தலைமைப் பதவியை சவூதி அரேபியாவுக்கு வழங்கியமை கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் அலுவலர்களை நியமிக்கும் குழுவின் தலைமைப் பதவியை சவூதி அரேபியப் பிரதிநிதியிடம் ஒப்படைப்பது, பூனையைப் பாலுக்குக் காவல் வைப்பதை விட அபத்தமானது.
சவூதி அரேபியா, ஜனநாயகத்தின் அடிப்படைகள் எனப்படும் தேர்தல்கள், கட்சி அரசியல், தேர்தெடுத்த நாடாளுமன்றம் என எதையுங் கொண்டிராத, குடும்ப ஆட்சியைக் கொண்ட நாடாகும்.
அரசியல் யாப்பில் மரண தண்டனையை உறுதிப்படுத்தி, மரண தண்டனைகளைத் திருவிழாப் போல், பொதுமக்கள் முன் நிகழ்த்திக் கசையடியைத் தண்டனையாகப் பொதுவெளியில் வழங்கிச் சித்திரவதையை நிறுவனமயப்படுத்திய தேசமே சவூதி அரேபியா.
கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை விட அதிகம் பேரைத் தலைதுண்டித்து மரணதண்டனை நிறைவேற்றிய நாடு என்ற பெருமைக்குரியது சவூதி அரேபியா. எனவே, மனித உரிமை அலுவலர்களை நியமிக்கும் முரணகையான தகுதி இவர்கட்கே உள்ளமையை மறுத்தற்கில்லை.
கடந்த ஜூன் மாதமளவிற் தீர்மானிக்கப்பட்ட இந் நியமனம் தற்போது தான் வரன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நியமனத்துக்குக் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டும் அமெரிக்கா அதை வரவேற்றுள்ளது.
மத்திய கிழக்கின் தீராத யுத்தங்கட்குக் காரணமாயுள்ள அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி சவூதி அரேபியா. சவூதி அரேபியாவே வஹாபி, ஸலாஃபி முஸ்லிம் குழுக்களை உலகெங்கும் அனுப்புகிறது. உலகெங்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்க்கும் அதேவேளை, வஹாபி, ஸலாஃபி குழுக்கள் முஸ்லிம் மக்களைப் பிளவுபடுத்துகின்றன.
ஏகாதிபத்தியத்துக்கு உவப்பான வேலையை, அதாவது முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குலைப்பதை, சவூதி அரேபியா, அமெரிக்காவுக்காகச் செய்கிறது. இவை பேசப்படுவதில்லை, ஆனால் கவனிக்க வேண்டியவை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாக்கத்துக்கும் குறிப்பாக மத்திய கிழக்கில் அதன் கை ஓங்குவதற்கும் அதன் கூட்டுக் களவாணியான சவூதி அரேபியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாள் வேலையைப் பார்க்கிறது. உலகெங்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஊட்டி வளர்ப்பதன் மூலம் ‘நாகரிகங்களிடையிலான மோதல்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமெரிக்கா உலகெங்கும் போர்தொடுக்க, சவூதி அரேபியா களம் அமைத்துக் கொடுக்கிறது.
இன்று, அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் தீராத தலைவலியாகியிருப்பது சிரிய யுத்தம். சிரியாவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கடந்த நான்கு ஆண்டுகளாக எடுத்த பலவாறான முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்த நிலையில், மனித உரிமைகள் என்ற அஸ்திரம் பயன்படுகிறது. இதன் பின்னணியிலேயே மேற்கூறிய தலைமைப் பதவியை சவூதி அரேபியாவுக்கு வழங்கியதன் முக்கியத்துவத்தை நோக்க வேண்டும்.
மனித உரிமைப் பேரவை இயங்குதற்கான நிதியுதவியில் 80 சதவீதத்தை அமெரிக்காவும் அதற்குச் சார்பானவர்களுமே வழங்குகிறார்கள். இந் நாடுகளைச் சேர்ந்தவர்களே பேரவையின் முக்கிய பதவிகட்கு நியமிக்கப்படுகிறார்கள்.
பேரவையானது, இதுவரை இஸ்ரேலுக்கெதிராக 62 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இது ஏனைய நாடுகள் அனைத்துக்குமெதிராக நிறைவேற்றிய தீர்மானங்களின் கூட்டுத் தொகையினும் அதிகம். எனினும், இன்றும் மனித உரிமைகளை விடாது மீறும் நாடாக இஸ்ரேல் இருந்தும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் எதையுஞ் செய்ய இயலவில்லை.
பேரவைக் கூட்டத்தொடர் ஒரு மனித உரிமைத் திருவிழா போல் ஜெனீவாவில் நடந்தேறும். மனித உரிமையின் பெயரால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அத்திருவிழா களைகட்ட அரங்காடுவார்கள். இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகள் மீதான தீர்மானங்கள் வரும் போது அவ்வவ் நாடுகளில் பேரவை மீது மிகையான நம்பிக்கை உருவாக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட மக்களின் இறுதிப் புகலிடமாக மனித உரிமைப் பேரவை புனையப்படுகிறது.
இறுதியில் எது நடக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே நடக்கிறது. பாதிக்கப்பட்ட, நீதி வேண்டிப் போராடும் மக்கள் பார்வையாளர்களாக இருக்கப் பணிக்கப்படுகிறார்கள். எவரெவருடையதோ தேவைகட்காக அவர்களது அவலங்கள் அடகு வைக்கப்படுகின்றன.
மனித உரிமைப் பேரவை மக்களுக்கானதோ நீதிக்கானதோ அல்ல என்பதை அது தன் செயற்பாடுகளினூடு பலமுறை நிரூபித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் உலகில் நடந்த எந்த அவலத்துக்காவது நியாயம் கிடைத்ததா? மனித உரிமைகளின் பேரால் எத்தனை பேரின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இருப்பு, மனித உரிமைகள் பற்றிய தோற்றப் பொலிவுக்கானது. அதற்கப்பால் அதற்கு ஒரு பெறுமதியும் இல்லை.
ஒடுக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடும் மக்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் இவை. எந்தச் சபையோ பேரவையோ அமைப்போ அமெரிக்காவோ விடுதலையை வென்று தரா.
அவற்றின் மீது வைக்கும் நம்பிக்கைகள் எமது பேரில் அவர்கள் நீதியைக் காவுகொள்ளும் செயல்களே. மனித உரிமைகள் மீதான அவர்களது கரிசனை ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையன்றி வேறல்ல.