தெற்காசியாவின் எதிர்கால அரசியல், சமூக போக்கை தீர்மானிப்பதில் மதங்கள் கணிசமான பங்கு வகிக்கப் போகின்றன என்பதையே நம் கண் முன்னே நடைபெற்று வரும் சம்பவங்கள் உறுதி செய்து வருகின்றன. இந்த மாற்றமானது தேசங்களினதும் வெவ்வேறு மக்கள் கூட்டத்தினரதும் இன்றைய பண்பை புரட்டிப் போட்டு அம்மக்களை வெறும் மதக் குழுக்களாக குறுக்கி விடும் ஆபத்தை தன்னகத்தே கொண்டிருப்பது சமூக நலன் சார்ந்து செயற்படும் சக்திகளின் கரிசனையாக உள்ளது.
சித்தாந்த ரீதியிலான வேற்றுமைகளைக் கடந்து தமது “பொது எதிரிகளை” எதிர் கொள்ளும் வகையில் உருப்பெற்று வளர்ந்து வரும் இந்து-பௌத்த கூட்டணி, வெளிப்படையாக தனது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நகரத் தொடங்கியிருக்கிறது. தமிழ் நாட்டில் இந்துத்துவ வாதிகள் உதட்டளவில் தமிழ் தேசியம் பேசினாலும் அவர்களது செயற்பாடுகள் இந்து,இந்திய தேசியத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து தேசங்களையும் கரைத்து விடுவதையே நோக்காகக் கொண்டவை. “மண்ணின் மதங்கள்” என்ற அவர்களது வரைவிலணக்கப்படி இந்து, பௌத்த மதங்கள் மட்டுமல்லாது சமண, சீக்கிய மதங்களையும் அரவணைத்து செல்லும் போக்கை அவதானிக்க முடிகிறது. இந்த வகைக் கூட்டானது “அன்னிய மதங்கள்” என்ற வகையறாவில் குறிப்பாக இஸ்லாத்தை குறி வைத்தே வளர்ந்து வருகிறது. கிறிஸ்தவ மத நிறுவனங்களின் மத மாற்றங்களை தீவிரமாக எதிர்த்தாலும் இஸ்லாத்தின் மீதும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மீதும் போர் தொடுத்து வரும் மேற்குலகின் போக்கை ஒத்த நிலையையே இந்துத்துவாவும் கையிலெடுத்திருக்கிறது.
மக்களின் அன்றாட பிரச்சனைகள் புறந்தள்ளப்பட்டு மத அடையாளங்களும் வழிபாட்டு தலங்கள் குறித்த பிரச்ச்னைகளுமே இன்றைய தலையாய பிரச்சனைகளாக அவர்களால் முன் நிறுத்தப் பட்டுள்ளன. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அபயா சம்பந்தப் பட்ட சர்ச்சையானது வெறும் “சீருடை” குறித்த பிரச்சனையாக இருந்திருந்தால் கல்லூரி நிர்வாகத்தினரால் அதன் வளாகத்தினுள்ளேயே தீர்க்கப் பட்டிருக்கக் கூடிய விடயமாக இருந்திருக்கும். மரபு என்பதற்கப்பால் ஒரு பாடசாலையோ அல்லது நிறுவனமோ, சில எல்லைகளுக்குட்பட்டு தனது ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை விதிக்க உரித்துடையவர்கள். ஆனாலும் இவ்விடயம் குறித்த பின்னணிகளை ஆராயும் எவருக்கும் இந்த முறுகல் நிலையின் தோற்றுவாய் கல்லூரிக்கு வெளியே உள்ள வெவ்வேறு சமூக காரணிகளால் தீர்மானிக்கப் படுவதை கண்டறிய முடியும்.
ஆசியாவின் எல்லா சமூகங்களிலும் ஆண்களே கலாச்சார காவலர்களாக இருந்து கொண்டு தமது சமூகம் சார்ந்த பெண்கள் என்ன உடை அணிய முடியுமென்பதை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். கலாச்சாரம் என்ற பெயரில் வரும் அனைத்து சுமைகளும் வெவ்வேறு அளவுகளில் பெண்கள் மீதே சுமத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் தேசத்தின் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாத தமிழ் தலைமையானது தமிழ் தரப்பின் பல்வேறு தரப்பினரதும் வெறுப்பைச் சம்பாதித்து வரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் வளங்கள் தொடர்பாக தமிழ், முஸ்லீம் சமுகங்களிடையே இருந்துவரும் பல முரண்பாடுகள், சச்சரவுகள் தொடர்பாக எந்த தலையீடும் செய்யாமல் இருந்து கொண்டு; திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்களின் ஆடை விடயத்தில் தலையிட்டிருப்பதன் மூலம் தனது இயலாமையை மறைக்க முயல்வதுடன் ஒரு நாடகதாரிகள் என்பதையும் நிரூபித்துள்ளனர்.
கிழக்கில் முஸ்லிம் அரசியல் வாதிகளாலும் இஸ்லாமிய தீவிர போக்கு கொண்டோராலும் கல்வி, பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு விடயங்களில் காட்டப்படும் பாரபட்சம் கூடவே முஸ்லிம் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான காணி அபகரிப்புகளை எதிர் கொள்ளும் வகையில் தமிழ் தலைமைகளிடம் உருப்படியான எந்த திட்டமும் இல்லாத நிலையில் சில தமிழ் தரப்புகள் காட்டும் வெறும் உணர்ச்சிபூர்வமான எதிர்ப்புகள் தவறான அத்தியாயங்களாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றன.
இன நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சமத்துவம் போன்ற அம்சங்கள் கருத்தில் எடுக்கப்பட்டு வர்த்தக நிறுனங்கள் கூட தமது ஊழியர் சீருடை விடயத்தில் முடிந்தவரை விதிவிலக்களிப்பது உலக நடைமுறையாக உள்ளது. முஸ்லிம்களின் ஆடைக் கலாச்சாரத்தை ஆக்கிரமிப்பு வடிவமாக வர்ணிப்பதும் அவர்களது பேச்சு வழக்கை கேலி செய்யும் வகையில் பதாதைகள் தாங்கி போராட்டம் நடாத்துவதும் வெறும் சீண்டல் வகைப்பட்டதாகவே இருக்கிறது.
மறுமுனையில் முஸ்லிம்களின் ஒரு பிரிவினர், இலங்கையில் பெரும்பான்மையாக எல்லா மக்களும் அணியும் சேலையை ஆபாச உடையாக சித்தரிப்பதும் அதற்கும் ஒரு படி மேலே போய் தமிழ், சிங்கள பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் கருத்துக்களை பகிரங்கமாக வைக்கத் துணிந்துள்ளனர். இஸ்லாம் அடிப்படைவாதம் ஏழாம் நூற்றாண்டு அரபு கலாச்சாரத்தையே இன்றைய முஸ்லிம் மக்கள் மீது திணிக்கிறது. முஸ்லிம் பெண்களின் ஆடைத் தெரிவில் தலையிடும் உரிமை மற்றைய சமூகத்தவருக்கு இல்லையாயினும் கைமணிக்கட்டு, முகம் தவிர்ந்த மிகுதி அனைத்து பகுதிகளும் மூடிய ஆடைக் கட்டுப்பாட்டை முஸ்லிம் பெண்கள் சுய தெரிவாக ஏற்றிருக்கிறார்கள் என்று கதையளப்பது ஏமாற்று வேலையே. இலங்கை முஸ்லிம்களின் கணிசமான பிரிவினர் இன்று வரித்துக் கொண்டுள்ள வஹாபிச இஸ்லாமிய சிந்தனை முறை அம்மக்களை மற்றைய சமூகங்களிலிருந்து அன்னியப்படுத்தி வருவது இன்றைய யதார்த்தமாக உள்ளது.
தமிழ், முஸ்லீம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைமைகள் சந்தர்ப்பவாதம் மற்றும் ஊழலில் திளைத்திருப்பதும், இரு தரப்பிலும் இருக்கும் சமூக அக்கறை கொண்ட சக்திகள் பார்வையாளார்களாக தொடர்ந்து நீடிப்பதும் இந்த இரு சமூகங்களுக்கிடையில் இருக்கும் பிரச்சனைகளை சந்தர்ப்பவாத,இனவாத,மதவாத சக்திகள் கையிலெடுத்து இரு சமூகங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வழிவகுத்து விடுகிறது.
பேரினவாதிகளின் தவணை முறையிலான ஒடுக்குமுறை எனும் தந்திரோபாய நடவடிக்கைகளில் சிறுபான்மையினர் தொடர்ந்து சிக்குண்டு போகும் நிலை இலங்கையில் இன்னும் தொடர்கிறது. தமிழ், முஸ்லிம் உறவென்பது மத நிறுவங்களைப் புறந்தள்ளி சிவில் சமூகங்கள் மத்தியிலேயே கட்டியெழுப்பப் படமுடியும். இதற்கான முன்னெடுப்புகளை செய்வதே இரு சமூகங்களிலுமுள்ள சமூக அக்கறை கொண்ட சக்திகளின் கடமையாக இருக்க முடியும்.
புதிய திசைகள்
22/05/18