ஆனால், பெண்ணுக்கு இவ்வளவு கொடூரங்களைச் செய்யும் உங்களை ஒரு கனமாவது குற்றவாளியாக்காமல் என்னால் எப்படித்தான் கடந்து செல்ல முடியும் என்று நீங்களே சொல்லுங்களேன்.
தவறவிடாதீர்
ஆண்களுக்காக 6: அவள் அப்படித்தான் இருக்க வேண்டுமா?!
மன்னித்து விடுங்கள். இந்த முறை உங்களை நான் குற்றவாளியாக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் எனக்கு அவளது அலறல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அவள் நண்பனுடன் சினிமாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தாள், 6 பேர் சேர்ந்து வன்புணர்ந்தீர்கள். அவள் பள்ளிக்கூடம் சென்றாள், அவளைப் பேத்தி என்று நினைக்காமல் காமவெறியாட்டம் ஆடி முட்புதரில் வீசினீர்கள். அவள் கிராமப்புறத்திலிருந்து படித்துவிட்டு ஐடி கம்பெனியில் வேலை செய்ய வந்திருந்தாள். அவளைக் கொன்று வீசினீர்கள். அவள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள், வீட்டுக்குள் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றீர்கள். அவள் குதிரை மேய்த்துக் கொண்டுதான் இருந்தாள், அவளைக் கோயில் கருவறையில் சிதைத்துக் கொன்றீர்கள். அவள் ஆன்மிகம் நாடித்தான் வந்தாள். ஆனால் சாமியார் என்ற போர்வையில் சல்லாபம் செய்தீர்கள். அவளும் அது இயல்பென ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மூளைச்சலவை செய்தீர்கள்.
அவள் உங்களால் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து விட்டாள். அதற்காகவே அவளது தலையை துண்டித்தீர்கள். அவள் காதல் ஏற்பதற்கில்லை என்றுதான் சொன்னாள். அதனாலேயே ஆவேசப்பட்டு ஆசிட் வீசினீர்கள். அவள் காதலிக்க முடியாது என்றாள் வகுப்பறைக்குள் சென்று குத்திக் கொன்றீகள்.
அவள் மலம் கழிக்க கொல்லைக்குச் சென்றாள். அங்கேகூட அவளை கூட்டுப் பலாத்காரம் செய்தீர்கள். அவளுக்கு அப்போது மாதவிடாய் காலம். ஆனால், உங்கள் காமத்துக்கு அது தெரியவில்லை. அவளை விடாமல் துன்புறுத்தினீர்கள். காமுகர்களே…எனக்குக் கேட்பதுபோல் அந்த அலறல் சத்தம் உங்களுக்கும் கேட்கிறதா?
இதோ இப்போதும்கூட பொள்ளாச்சி சம்பவத்தில் அந்தப் பெண்ணின் கதறலைக் கேட்டும் அவளது அலறலைக் கேட்டும்கூட அவளுக்கு ஏன் ஆண் சகவாசம்?! அவள் ஏன் அவனுடன் தனியாகச் சென்றாள்?! என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதே கேள்விதான், நிர்பயாவுக்குக் கேட்ட அதேகேள்வியைத் தான் இன்றும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களிடம் அவள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள். “உன்னை நம்பித்தானே வந்தேன்..” என்று அவள் கேட்கிறாள். கலாச்சாரக் காவலர்களே… அதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான சில உணர்வுகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் நம்பிக்கை. உன்னை நம்பி வந்த பெண்ணை நீ இப்படி சீரழிப்பாய் என்றாள் உன்னை நான் துரோகி என்றழைக்கவா?
சிறுமி என்று பாராமல்கூட பலாத்காரம் செய்வாய் என்றால் உன்னை நான் அரக்கன் என்று அழைக்கவா? இவையெல்லாம் மென்மையாக இருக்கின்றன. அதனால், அவளை அப்படி நிர்வாணமாக்கி படம் எடுத்து வியாபாரம் செய்யும் உன்னை நான் பாலியல் பயங்கரவாதி என்று அழைக்கிறேன். பாலியல் பயங்கரவாதிகளே.. அந்த அலறல் கேட்கிறதா?
சித்தரிப்புப் படம்.
அவள் பூட்டிய அறைக்குள் பலாத்காரம் செய்யப்பட்டாள். அவள் தப்பு ஏதும் அதிலில்லை. கெடுத்துவிட்டார்களே என்று உச்சு கொட்டாதீர்கள். கெட்டுப்போக அவள் ஒன்றும் உணவுப் பதார்த்தம் இல்லை. அவள் உடல் படமாக்கப்பட்டதற்காக அவள் வெட்கப்பட வேண்டியத்தில்லை. ஆனால், அந்தப் பயங்கரவாதத்தை உங்கள் ரேட்டிங்குக்காக வெளியிட்டீர்களே. ஒருவேளை ஒரு கெட்ட கனவாக அவள் அதை மறந்திருக்கக்கூடும். மீண்டும் அவளது நினைவைக் கிளறி துடிக்கச் செய்யும் ஊடக, சமூக வலைதள நண்பர்களே.. அவளது அலறல் கேட்கிறதா?
பெண் பிள்ளைக்கு மட்டும் இப்படித்தான் நிற்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும், இவ்வளவு சத்தமாகப் பேசக்கூடாது, இவ்வளவு இறுக்கமாக ஆடை கூடாது, இரவில் வெளியில் செல்லக்கூடாது என்றெல்லாம் இரவல் வாங்கி கற்பிதங்கள் சொன்னீர்களே என்றைக்காவது மகனே நீ பெண்ணை அடிமைப்படுத்தாதே, பெண்ணை மாண்போடு நடத்து, அவளும் நீயும் தனித்தனி. ஆனால் சரி சமம். அவளது முடிவுகள் முக்கியமானவை, அவளது உணர்வுகள் மதிப்பிற்குரியவை, அவளது சுதந்திரம் உன் கட்டுக்குள் இல்லை என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? மகன்களை ஆண்மை தவறாமல் வளர்க்கத் தெரியாதவர்களே… அவளது அலறல் கேட்கிறதா?
ஆண் வாரிசு சிங்கக் குட்டி என்று மார்தட்டிக் கொண்ட தந்தையரே.. அவன் அன்னையை, தங்கையை, ஆசிரியையை, தோழியை சமமாகப் பாவிப்பதை உறுதி செய்ய என்ன செய்தீர்கள்? முன்னுதாரணமாக இருந்தீர்களா? இல்லை.. மகனே நான்தான் பிற்போக்குத்தனமாக இருந்துவிட்டேன். நீ பெண்ணை மதி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? மகன்களை நேர்வழியில் வளர்க்காமல் அவனின் தவறுகளை மறைக்க அதிகார பலத்தை பயன்படுத்துவது எல்லாம் எவ்வளவு இழிவானது என உணர முடிகிறதா? இதில் எதுவுமே செய்யவில்லை என்றால் உங்களுக்கு… அவளது அலறலாவது கேட்கிறதா?
அரசியல்வாதிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை, இனிமேல் எந்த வீடியோவும் கசியாது, குண்டர் சட்டத்தில் கைது செய்துவிட்டோம். குற்றவாளிகள் 4 பேர் மட்டுமே என அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்கும் காவல்துறையினரே… பிரஸ் நோட்டிலேயே பாதிக்கப்பட்ட நபரின் பெயர், அவரது வீட்டு முகவரி என எல்லாவற்றையும் விவரமாக அளிப்பதன் நோக்கம்தான் என்ன?
இனி அடுத்து யாரும் புகார் கொடுக்க வரக்கூடாது. வந்தால் தாக்கப்படுவார்கள் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் முயற்சியா? நீங்கள் போடும் குண்டர் சட்டம் எவ்வளவு வலிமையானது என்பதை தஷ்வந்த் வழக்கிலேயே நாங்கள் பார்த்துவிட்டோம்.
அடுத்த வீட்டுப் பிரச்சினைதானே என்ற தொனியில் விலகி நின்று அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் அதிகாரிகளே.. அவளது அலறல் கேட்கிறதா? டாஸ்மாக் போராட்டத்தின்போது பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிகாரிதானே நீங்கள். உங்களுக்கு அந்த அலறல் கேட்கிறதா?
ஆளுங்கட்சி பிரமுகர்களே, எதிர்க்கட்சி பிரளயங்களே உங்கள் அறிக்கைகளும் பதிலடிகளும் ஒரு ஓரமாக இருக்கட்டும். தேர்தலும், பிரச்சாரமும் காத்திருக்கட்டும். அவளுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கூட்டணி அமையுங்கள். அவள் மனதை வெல்லுங்கள். அதற்கு முதலில் அரசியல் கண்ணாடியைக் கழற்றிவிட்டு அவளைப் பாருங்கள்…
அவள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளது அலறல் நம்மில் யாருக்குமே கேட்கவில்லை. அதனால்தான் அந்த பயங்கரவாதம் வெவ்வேறு பெண்களுக்கு வெவ்வேறு வடிவங்களில் நீண்டுகொண்டே இருக்கிறது.
உங்களை எல்லாம் அவதாரப் புருஷர்களாக இருக்கச் சொல்லவில்லை. அவளை அலறவிடாமல் வைத்திருங்கள் போதும். இல்லாவிட்டால் அந்த அலறல் உங்கள் சவப்பெட்டிக்குள் இருந்தும் கொள்ளிக் கட்டையிலிருந்தும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
மீண்டும் சொல்கிறேன், குற்றவாளியாக்கக் கூடாது குற்ற உணர்ச்சியை மட்டுமே தூண்ட வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில் தொடங்கப்பட்ட தொடர் இது. ஆனால், அவளுக்கு இவ்வளவு செய்யும் உங்களை ஒரு கனமாவது குற்றவாளியாக்காமல் என்னால் எப்படித்தான் கடந்து செல்ல முடியும். மன்னித்துவிடுங்கள் எனக்கு அவளது அலறல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அண்டம் தோன்றியபோது எழுந்த பேரொலிபோல் என்னுள் கேட்கும் அந்த அலறலுக்கு ஊடே அவளுக்கு சிறு விழிப்புணர்வும் ஏற்படுத்துவது இங்கே கடமையாகிறது. விழிப்புணர்வு என்றால் பாதுகாப்பு நடைமுறைகள் சொல்லப்போகிறேன் என்று யோசிக்காதீர்கள்.
பெப்பர் ஸ்ப்ரே வைத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள், ஜிபிஎஸ் வாட்ச் கட்டச் சொல்கிறீர்கள், கராத்தே, சிலம்பம் கற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள், இது என்னுடைய உலகம். இந்த உலகத்தின் மீது எனக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் உங்களுக்கு உள்ள சுதந்திரம் ஏன் எனக்கு இல்லை. இதோ பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பின் புதுமாதிரியான அறிவுரைகள் வரத்தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வந்து துணிச்சலாகப் புகார் அளிக்க வேண்டும் என்று.
உங்கள் நிர்வாணம் இணையத்தில் கசிந்தாலும்கூட துணிச்சலாக நில்லுங்கள் என்று கூறுகிறார்கள். நான் ஏன் நிர்வாணமாக வேண்டும் அல்லது நிர்வாணமாக்கப்பட வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாக பயங்கரவாதம் செய்யும்போதும் தற்காத்துக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமா?
திருந்த வேண்டியது யார்? என்ற கேள்வியை மட்டும் இங்கு விட்டுவைக்கிறேன். பதில் இருந்தால் நடைமுறைப்படுத்துங்கள்.
திருக்குறள் போல் இருந்தது..
எனது நண்பரும் ஊடகவியலாளருமான பாலவேல் சக்கரவர்த்தியிடம் பொள்ளாச்சி சம்பவத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது ஆழமான வாதத்தை அவர் முன்வைத்தார்.
“இந்த சமூகத்தில் ஆண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்துவிடுவோம். பெண் பிள்ளைகள் பத்திரமாக இருந்துவிடுவார்கள்” என்றார். இது எனக்கு திருக்குறள் போல் ஒலிக்கிறது என்றேன். பாலியல் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தண்டனைகளைக் கடுமையாக்குவதைவிட இது மிகவும் எளிதானது சிறப்பானது என்றேன்.
அதன் நீட்சியாக அவர் இன்னும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
“இந்தச் சமூகம் இன்னும் பாதிக்கப்பட்ட நபர்களையே மேலும் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. பாதிப்பை துணிச்சலோடு சொல்லச் சொல்கிறார்கள். அப்படி சொன்னால், புகார் கொடுத்தால் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறதா? என்றால் இல்லையே? இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருப்பவரே பாலியல் சர்ச்சையில் சிக்கியவர். எஸ்.பி., பெண்ணை அடித்த புகாரில் சிக்கியவர்.
பொள்ளாச்சி வழக்கில் புகார் அளித்த பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டிருக்கிறார். இப்படியிருக்க, இனிமேலும் அந்த 4 பேருக்கு எதிராக யாராவது சாட்சி சொல்ல வருவார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட நபர் உண்மையைச் சொன்னால்தான் நீதி கிடைக்கும். ஆனால் அவர் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றபோது எப்படி முன்வருவார்? பாதிப்பை ஏற்படுத்தியவரை நோக்கி நம் கேள்விகள் திரும்புவதே இல்லை. நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்று நாம் கேட்க வேண்டும். கண்ணீரும் கம்பலையுமாக அந்தப் பெண் கேட்கிறாளே… உன்னை நம்பித்தானே வந்தேன் என்று அதுபோல் நாமும் பாதிப்பை ஏற்படுத்துபவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.
பாலினப் பாகுபாடு குறைந்துகொண்டுதான் வருகிறது. ஆனால் பாலினப் பாகுபாட்டைப் பற்றி பேசுபவர்கள் அதை சமமாகப் பாவிக்கிறார்களா என்ற கேள்வியும் எனக்கு இருக்கிறது? ஒரு பக்கம் சுமை அதிகமாகவும் ஒரு பக்கம் குறைவாகவும் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அதனால்தான் பாதிக்கப்பட்டவர்களே காவல் நிலையம், நீதிமன்றம், ஊடகம், சமூகம் என எல்லா இடங்களிலும் பதில் சொல்லிக் கொண்டு மேலும் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்தான். ஆனால் இது தொடர்கதையாக இருக்க வேண்டுமா என்ன?
பாலின பேதத்தை ஒரு பாரம்பரியம் போல் இன்னும் சிலர் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். 20 வயது இளம் பெண்கள் இருவர் வெளியில் சென்றால் துணைக்கு 5 வயது சிறுவனை அனுப்பி வைக்கின்றனர். சாண் பிள்ளையென்றாலும் ஆண் பிள்ளை என்கின்றனர். மாற்றம் வீட்டிலிருந்து ஏற்பட வேண்டும்.
என் மகனுக்கு 6 வயது. மகளுக்கு 1 வயது. இப்போதிருந்தே என் மகனுக்குப் பாலின சமத்துவத்தை சொல்லிக் கொடுக்கிறோம். தங்கையை, தோழியை போடி.. வாடி என்று பேசக் கூடாது என்று சொல்லியிருக்கிறோம். இது ஆண் வேலை, இது பெண் வேலை என வீட்டில் வேலையில் பேதமில்லை எனக் கூறியிருக்கிறோம்.
பள்ளியில் உடன் படிப்பவர்கள் செய்யும் தவறில் ஆண் செய்தால் ஏற்றுக் கொள்ளக்கூடியது பெண் செய்தால் தண்டனைக்குரியது என்று எதுவும் இல்லை என சொல்லியிருக்கிறோம்.
6 வயதுக்கு எந்த அளவில் பாலின சமத்துவத்தை கற்றுக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சொல்லி வருகிறோம். அவன் வளர வளர வயதுக்கேற்ப இந்த ஒழுக்கப்பாடம் தொடரும். அவன் தவறு செய்யும் ஆணாகவும், அவன் செய்யும் தவறுக்கு முட்டுக்கொடுக்கும் தகப்பனாக நான் இல்லாமலும் இருக்கும் அளவுக்கு சேர்ந்தே வளர்கிறோம்” என்று பால சக்கரவர்த்தி சொல்லி முடித்தபோது அந்த அலறல் சத்தம் எதிர்காலத்தில் கேட்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.