அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!!
“ஆதலினால் காதல் செய்வீர்”
இந்த பிரபஞ்சத்தில் இனிய மனித வாழ்வு என்பது மிக அபூர்வமான அதிசயமான வரம். வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு அன்பும் காதலும் மிக அவசியம். ஒருவருக்கு ஒருவர் என ஆரத் தழுவி வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது மிகவும் இனிமையான சுகமான ஆனந்தமான அனுபவமாகும்.
நெருங்கிப் பழகி முழுமையாக உட் கிரகித்து பரிவுடன் பாசத்துடன் உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் ஓர் உறவுதான் உண்மையான காதல். ஒருவர் மீது ஒருவர் காட்டும் அரவணைப்பால், ஆதரவினால் கிடைக்கும் சுகமே அலாதியானது.
ஒருவர் மனதை மற்றவர் அறிந்தும் தெரிந்தும் புரிந்தும் வாழ்வது தான் உண்மையான திருமண வாழ்க்கை. திருமண உறவு வலுப்பட மனங்களின் பிணைப்பு அவசியம்.
உடல் இன்பத்தை அனுபவிப்பதில் ஆரம்பித்து பின்னர் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிப் பவர்களாக மாறி உடலோடும் உயிரோடும் கலந்த அன்பு நாளடைவில் உயிரினும் மேலான அன்பாக மாறி விடும்.
ஒருவருக்கு ஒருவர் துணையாக முழுமையாகப் புரிந்து கொண்டு இறுதி வரை சேர்ந்து வாழ வேண்டும் என்ற திருமண வாழ்வின் மிகவும் பிரதான சாரம் காதல் தான்..
எப்போதும் காதல் உயிர்ப்புடன் இருக்க தீராத அன்பை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் வற்றாத ஜீவ நதி அன்பு மட்டும் தான்.
காதலையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்வதும் தவறுகளை ஒத்துக் கொள்வதும் மன்னிப்புக் கேட்பதும் தவறுகளை மன்னித்து உடனே மறந்து விடுவதும் சந்தோசமான திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானவை.
அன்பான தம்பதிகள் மிக அழகாக நேர்மையாக இனிமையாக சுவையாக, ஒருவருடன் ஒருவர் பழகுவார்கள்.
உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறியதில் இருந்து சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமானதாக உருவாகி, சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடை முறையாகி, பல நூறு வருடங்களாக வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக் கொள்ள எங்களுக்கு தடை போடப் பட்டதால் நேசமும் மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் இதயங்கள் இணையாது ஏதோ அவசர கோலத்து சம்பிரதாய சடங்கு போல வெறும் உடல்கள் மட்டும் இணைந்த உடலுறவு மட்டுமே எமக்குத் தெரிந்த திருமண வாழ்க்கை என ஆகிவிட்டது.
நாடு விட்டு நாடு சென்று திரை கடல் ஓடி திரவியம் தேடுவதில் வல்லவராகிய நாம், பணத்திற்கும் பணத்தால் கிடைக்கும் பகட்டுக்கும் அடிமையாகி இதயத்தில் என்றும் உயிர்த்து இருக்கும் காதலைப் புரியாத ஒரு வகையான மனோ வியாதியில் வாழ்கின்றோம்.
ஒருவரை ஒருவர் நேசிக்காத காதலிக்காத போலியாக நடித்து வேஷங்களுடன் வாழும் மோசமான திருமண வாழ்க்கை நரகமாகவே இருக்கும். இதனால் தான் “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவினான் பாரதி.
எங்களோடு ஒத்துப் போகாத இணைவு இல்லாத ஓருவரோடு ஒரு நிமிடம் கூட எதையுமே பேச முடியாத நிலையில் ஒத்துப் போகாத இணைவு இல்லாத அன்பும் காதலும் புரிந்துணர்வும் இல்லாத ஒருவரைக் கல்யாணம் செய்து எப்படி வருடக் கணக்கில் உறவைத் தொடர முடியும்?
இறுகிப் போன எங்கள் கலாச்சாரத்தில் காதல் செய்வது இன்னமும் தடை செய்யப் பட்ட ஒன்றாக இருப்பதனால் உண்மையான காதல் என்றால் எது எனத் தெரியாது தற்செயலாக அருகில் பழக நேர்ந்தால் ஏற்படும் வெறும் கவர்ச்சியே கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.
இன்றைய இயந்திர மயமான வாழ்க்கை மனோ ரீதியான நெருக்கத்தை குறைத்து விடுகின்றது. மனம் விட்டுப் பேசுவதை வழக்கப் படுத்திக் கொள்ளாத தம்பதிகளிடம் நெருக்கம் இல்லாத வெறுமையான உரையாடல்களுடன் வெறும் ஒப்புக்கு போலியாக சம்பிரதாயங்கள் சில பயன் பாடுகள் தேவைகள் போன்ற காரணங்களால் கடமைக்கு கணவன் மனைவி எனக் குறுகி விடும்.
காதல் இல்லாத குடும்பங்களில், கணவன் வாழ் நாள் பூராக பணம் சம்பாதிக்கும் வெறும் இயந்திரமாக அல்லது மனைவி வாழ் நாள் பூராக சம்பளம் இல்லாத வெறும் வீட்டு வேலைக் காரியாக இருப்பதைக் காணலாம். சிலர் பணத்தையும் சொத்துக்களையும் மட்டுமே விரும்பும் பாசமில்லாத பணச் சுரண்டிகளோடு பிள்ளைகள் சமூக அந்தஸ்துக்கள் சம்பிரதாயங்கள் போன்ற காரணங்களுக்காக புறத் தோற்றத்துக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு வாழ்கின்றனர்.
உண்மையான அன்பும் மதிப்பும் இல்லாத நிலையில் எவ்வளவு சொத்துக்களையும் பணத்தையும் சேர்த்துக் கொண்டாலும் திருமண வாழ்க்கை இனியதாக சந்தோசமாக இருக்க முடியாது.
விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவம் இல்லாத நிலையில் மிகச் சிறிய பிரச்சினைகள் கூட மலை அளவு பெரிதாக இருக்கும். வாக்கு வாதங்கள் அதிகரித்து அனுசரித்துச் செல்ல முடியாத நிலையில் திருமண வாழ்வு நரகமாகி விவாகரத்தில் முடிந்துவிடும்.
வெறும் பயத்தின் அடிப்படையில் அமையும் உறவுகள் காலப் போக்கில் கசந்து போய்விடும். சிலர் நெருக்கமான அதிகாரப் போட்டியில் ஒருவரை ஒருவர் அடக்கி வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். கருத்து வேறுபாடுகளும் தவறாக புரிந்து கொள்ளுதலும் அதிக வெறுப்பை உருவாக்குவதால் வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன் தொலைக் காட்சியிலும் கணணித் திரையிலும் கதைப் புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலைப் பார்த்து விட்டு திருமண வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர்.
வெறுப்பு பரவப் பரவ அக்கறை ஒத்துழைப்பு விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாமல் போய் குறை சொல்வதும் எதிர்வாதம் பண்ணுவதும் மனம் புண்படும் விதத்தில் அநியாயமாகத் திட்டுவதும் சிறுமைப் படுத்துவதும் கேவலப் படுத்துவதும் எந்த நேரமும் எப்படியாவது பிழை பிடித்து சண்டை பிடிப்பதும் சந்தேகமும் சதா தற் பெருமை பேசுவதும் வாழ்க்கை என்றாகி வெறுப்பு குறுகிய குட்டைக்குள் கூத்தாடும்.
கோபம் வரும் போது, இதயங்களுக்கு இடையில் இடைவெளி அதிகரித்து விடுவதால் சத்தமாக உரத்த குரலில் பேசுவர். அன்பு வயப்பட்ட மனமொத்த இணை பிரியா காதலர்கள் தமக்குள் பேச வேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை. ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடை வெளியே இருக்காது. இதயங்கள் இடம் மாறிவிட்ட காதலர்களுக்கு வார்த்தைப் பரிமாற்றமே தேவை இல்லை.
காதலற்ற திருமண வாழ்வு மன அழுத்தத்தை அதிகரித்து ஊக்கத்தைக் கெடுத்து வாழ்க்கையே சீரழித்துவிடும். அதிகரித்த மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாது கூடிய நேரம் வேலையில் கழிப்பதன் மூலமாக அல்லது கணனியுடனும் தொலை பேசியுடனும் தொலைக் காட்சியுடனும் முக நூலிலும் அதிக நேரத்தைச் செல விடுவதன் மூலமாக, கணவனும் மனைவியும் ஒன்றாக இருப்பதைத் தவிர்த்துக் கொள்வதால் பெரிதும் பாதிப்படுவது குழந்தைகளே.
மிருகங்களுக்கு இருக்கும் நன்றி உணர்வின் ஒரு துளி கூட இல்லாத பணத்திலேயே குறியாக உள்ள மனச் சாட்சி இல்லாத நன்றி மறந்த சுபாவம் உள்ள பெற்றார்களால் தம் பிள்ளைகள் மீது கூட அன்பாக இருக்க முடியாது.
மனம் விட்டுப் பேசாததால் காதல் வற்றி விடும் போது புரிந்துணர்வு தொடர்பாடல் மதிப்பு மரியாதை போன்ற அனைத்தும் மறைந்து ஒருவரை ஒருவர் புறக்கணிப்பது இயல்பாகி நெருக்கமான எதிரிகளாக கணவனும் மனைவியும் வெறுப்புடனும் பகையுடனும் வாழ குடும்பம் என்பதற்கான உண்மையான அர்த்தம் நீர்த்துப் போய் குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடமிருந்து அன்பான இணக்கமான உறவு என்பது என்னவென்று தெரியாமல் உணராமல் வளர்கின்றார்கள்.
கோபமும் எரிச்சலும் அவ நம்பிக்கையும் வெறுப்பும், ஆணவமும் பகையும் கொண்ட இதயத்தில் பசுமையான நட்பும் ஆனந்தமான அன்பும் இனிமையான காதலும் இருக்க முடியாது. அன்பும் காதலும் இல்லாத நிலையில் பேச்சிலும் எண்ணத்திலும் செயலிலும் புறக்கணிப்பும் மோசமான எதிர்மறையும் ஏகோபித்து இருப்பதால் தமது பிள்ளைகளிடம் எதை எப்படிச் செய் எது சரியானது எது நல்லது எது சிறந்தது என்று இனிமையாகச் சொல்லி சரியாக வழி காட்டாது கடுமையான கொதியிலும் கோபத்திலும் ஆவேசமாகத் திட்டுவார்கள்.
எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும் குத்திக் காட்டுவதும் அன்பு இல்லாத போலி உறவுகளில் தான் இருக்க முடியும். எரிந்து விழுந்து சிடு சிடுத்து வசை பாடித் திட்டித் தீர்த்துக் கொள்ளும் சுபாவம் உள்ளவர்களால் ஒரு போதும் உண்மையான சந்தோசத்தை அனுபவிக்க முடியாது. அவர்களது அற்ப சந்தோசமே எரிந்து விழுவதும் சிடு சிடுப்பதும் வசை பாடுவதும், திட்டித் தீர்த்துக் கொள்வதும் தான்.
மற்றவர்கள் கஷ்டப் படும் போதும் நஷ்டப் படும் போதும் மட்டுமே சந்தோஷப் படுவது தான் ஆணவம். ஆணவத்திற்கு எடுத்துக் கொள்ளவும் கெடுத்துக் கொள்ளவும் மட்டும் தான் தெரியும்.
பயன் கருதாது உதவி செய்யும் போதும் சுகத்தை கொடுக்கும் போதும் சந்தோஷப் படுவதுதான் உண்மையான அன்பு. அன்பு எப்போதுமே கொடுத்துக் கொண்டே இருக்கும். அன்பு மலர்ந்து பாசம் மிளிரும் இடத்தில் ஆணவமும் அதிகாரமும் ஆதிக்கமும் இருக்க முடியாது.
அன்பினால் அற்புதங்களைச் செய்ய முடியும். அன்பினால் தான் நாய்களின் வால்களை ஆட்டச் செய்ய முடியும். பாசமான அன்பு, பரி சுத்தமான நேசம், ஆத்மார்த்தமான காதல் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்?
பாசத்தையும் நேசத்தையும் பெருக்கிக் கொள்ளும் கலாச்சாரத்தில் தான் காதலைச் சரிவர அணுகவும் நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர் கொள்ளவும் முடியும்.
திருப்தியான திருமண உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.
– நல்லையா தயாபரன்