அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும் போது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 1957 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மேற்கொண்ட பாத யாத்திரையே ஞாபகத்துக்கு வரும்.
1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்திய அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, அதனால் மனமுடைந்த தமிழ்த் தலைவர்களை சமாதானப்படுத்த தமிழர்களின் சில உரிமைகளைப் பற்றி, அப்போதைய தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் 1957 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார்.
பண்டா-செல்வா ஒப்பந்தம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தே ஜே.ஆர். ஜயவர்தன தமது பாத யாத்திiயை மேற்கொண்டார். ஆனால் அது கம்பஹா, இம்புல்கொட என்னும் இடத்தில் வைத்து முன்னாள் எம்.பி., எஸ்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஒரு குழுவால் வழிமறித்துத் தடுக்கப்பட்டது.
ஓர் அரசாங்கம் பதவிக்கு வந்து சில மாதங்களில் அந்த அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதை மக்கள் அவ்வளவு அறிவுபூர்வமான செயலாகக் கருதுவதில்லை. 1970 ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி நடத்திய போது, அதற்கு எதிராக எழுந்த பிரதான குற்றச்சாட்டு – புதிய அரசாங்கம் செயற்படும் முன்னரே கிளர்ச்சி நடத்தினார்கள் என்பதாகும்.
மஹிந்த அணியினரும் கடந்த வருடம் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்து ஒரு சில வாரங்களிலேயே அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கினர். அது அப்போது ஏற்கக்கூடியதாக இருக்கவில்லை ஆயினும் அவர்களிடம் மற்றவர்களிடம் இருக்காத சில நியாயங்கள் இருந்தன. முதலாவதாக வரலாற்றிலேயே முதன் முதலாக அவர்கள் தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட எதிர்க்கட்சியாக இருந்தார்கள். அதேவேளை மைத்திரி – ரணில் அரசாங்கமும் பதவிக்கு வந்து ஒரு சில வாரங்களிலேயே எதிர்க்கட்சிக்கு தம்மைத் தாக்க ஆயுதம் வழங்கியது.
அதாவது பதவிக்கு வந்து ஒரு சில வாரங்களிலேயே கோடிக் கணக்கில் நாட்டுக்கு நட்டத்தை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி பிரச்சினை அம்பலமாகியது. அதேவேளை வரலாற்றில் முதன்முறையாக திகதி வாரியாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளைக் கொண்ட அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் தவறிவிட்டது.
இது ஒருபுறமிருக்க பெரிய இரண்டு கட்சிகளின் தயவின்றி இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஆறு சிறிய கட்சிகளுக்கு தமது எதிர்க்காலத்தைப் பற்றிய அச்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேரவும் முடியாது. மைத்திரிபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருடன் சேரவும் முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் தொற்றிக் கொள்ள மஹிந்த மட்டுமே இருந்தார்.
எனவே, அவர்கள் மஹிந்தவுடன் எழுவோம் என்ற புதிய கோஷத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். நுகேகொடையிலிருந்து ஆரம்பித்து நாட்டின் நான்கு நகரங்களில் நான்கு பெரிய கூட்டங்களை நடத்தினர். கூட்டங்கள் முடிவடைந்து ஓகஸ்ட் மாதம் பொதுத் தேர்தலை எதிர்க் கொண்டு பார்த்தால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை பலமும் இல்லாமல் போய்விட்டது. அவர்களுடன் செயற்பட்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட பலர் அவர்களைவிட்டுப் பிரிந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில் சுமார் ஐம்பது உறுப்பினர்களே இப்போது அவர்களுடன் இருக்கிறார்கள்.
அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான அவர்களது புதிய முயற்சி தான் பேராதனையிலிருந்து கொழும்புக்கான பாத யாத்திரை. பொருளாதார பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் மற்றும் இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இந்தப் பாத யாத்திரைக்கான சுலோகங்களை தயாரித்துள்ளனர். ஆனால், அவர்களில் சிலரிடையே இந்தச் சுலோகங்கள் தொடர்பாக கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
சில சுலோகங்கள் இனவாதச் சுலோகங்கள் எனக் குற்றம் சாட்டிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. யூ. குணசேகர உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த சிலர், பாத யாத்திரையை பகிஷ்கரித்தனர். அரசியலமைப்பு மரணப் பொறியை தோற்கடிப்போம் என்ற விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் சுலோகமானது புதிய அரசியலமைப்பு வரைவொன்றே இல்லாத நிலையில் பொருத்தமற்றது என்றும் அது தமிழ் மக்களிடையே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்றும் குணசேகர வாதிடுகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் தம்முடன் இருக்கும் ஆறு சிறிய கட்சிகளினதும்அடிமட்ட உறுப்பினர்களிடையே மஹிந்த வெகுவாக ஜனரஞ்சகமானவர் என்பதால் இது போன்றதோர் பாத யாத்திரைக்கு மக்களை ஈர்ப்பது மஹிந்த அணியினருக்கு கஷ்டமாக இருக்காது. கண்டி, மாவனெல்ல போன்ற நகரங்களில் இந்த ஊர்வலத்துக்கு சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம்; விதித்த போதிலும் அதனை அரசியலாக்க மஹிந்த அணியினரால் முடியாமல் போய்விட்டது.
ஏனெனில், நீதிமன்றம் அவற்றில் சில நகரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார திட்டமொன்றுக்கும் அத்தோடு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அதேவேளை பாத யாத்திரையை கட்டுப்படுத்துமாறு பொலிஸார் அத்தனகல்ல, வரக்காபொல மற்றும் கொழும்பு நீதிமன்றங்களிடம் விடுத்த கோரிக்கைகளை அந்நீதிமன்றங்கள் நிராகரித்திருந்தன. எனவே, நீதிமன்றங்களை தமக்கு எதிராக முடுக்கிவிட்டதாக மஹிந்த அணியினரால் கூற முடியாமல் போய்விட்டது.
பாதயாத்திரை போன்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதில் மஹிந்த பெயர் பெற்றவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் வெறும் எட்டு ஆசனங்களை மட்டும் வைத்திருக்க, அவ்வெதிர்க் கட்சியின் சகல நடவடிக்கைகளும் குண்டர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகிய 1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்தில் மஹிந்தவின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்கு நடத்திய பாத யாத்திரை மிகவும் பிரசித்தி வாய்ந்ததாகும்.
1992 ஆம் ஆண்டு, ஜனாதிபதி
ஆர். பிரேமதாசவின் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட அந்தப் பாத யாத்திரை மற்றும் ‘ஜனகோஷா’ என்ற ஆரப்பாட்டம் போன்றவற்றினால் பிரேமதாசவின் அரசாங்கம் கவிழாவிட்டாலும் 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க அப்போராட்டங்களினால் ஏற்பட்ட மக்கள் உத்வேகம் பெருமளவில் உதவின.
ஆயினும், அன்றைய பாத யாத்திரைக்கும் இன்றைய பாத யாத்திரைக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. 1988-89 ஆண்டுகளில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது 60,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆயுதப் படையினராலும் பிறா, சிறா, பச்சை புலி போன்ற பெயர்களில் இயங்கிய கொலைக் கும்பல்களினாலும் படுகொலை செய்யப்பட்டனர். அக்கிளர்ச்சியை மிகக் கொடூரமாக அடக்கியதன் காரணமாக அப்போதைய ஐ.தே.க. அரசாங்கம் மக்கள் மத்தியில் பெரும் வெறுப்புக்கு உள்ளாகியிருந்தது.
மறுபுறத்தில் மூடிய பொருளாதார கொள்கையொன்றை பின்பற்றி நாட்டில் பெரும் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி, மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகிய சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் 1992 ஆம் ஆண்டளவில் முற்றாக மறந்து இருந்தனர். எனவே, மஹிந்தவின் அக்கால பாத யாத்திரை மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
ஆனால், இன்றைய நிலைமை வேறு. மத்திய வங்கி பிணைமுறிப் பிரச்சினை, சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு, ஊடகங்கள் மீதான அடக்குமுறை மற்றும் அரச வளங்களை உறவினர்களுக்காக செலவு செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போதிலும் இந்த அரசாங்கம் அன்றைய பிரேமதாச அரசாங்கம் மக்களால் வெறுக்கப்பட்ட அளவுக்கு இன்னமும் வெறுக்கப்படவில்லை.
அது ஒரு புறம். மறுபுறத்தில் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மாபெரும் ஊழல்கள், படுகொலைகள், அடாவடி ஆட்சி, ஊடக அடக்குமுறை மற்றம் மத்தல விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற மாபெரும் வீண் விரயங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஞாபகம் மக்கள் மனதில் இன்னமும் பசுமையாக இருக்கின்றன. எனவே, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த அணியினர் ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் போது அவர்களுக்கு எதிராக அதை விட படுமோசமான குற்றச்சாட்டுக்களை சுமத்த அரசாங்கத்தின் தலைவர்களால் முடிந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த அணியினருக்கு எதிராக அவர்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதமான ‘கெரில்லா’ தாக்குதல்களை நடத்தி அவர்களின் நோக்கங்களை சிதறடிக்கச் செய்வதில் வல்லவர். கடந்த பொதுத் தேர்தலின் போது அவர் அவ்வாறான இரண்டு ‘கெரில்லா’ தாக்குதல்களை நடத்தினார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக வருவதை நோக்கமாகக் கொண்டு போட்டியிட்ட அத்தேர்தல் மிகவும் நெருங்கிய நிலையில் மஹிந்த அணியினர் நாடாளுமனறத்தின் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றாலும் அவரை பிரதமராக்குவதில்லை என ஜனாதிபதி கூறினார். அதனால் மஹிந்தவின் ஆதரவாளர்கள் பலர் மனமுடைந்து போனார்கள்.
அத்தோடு அதுவரை மஹிந்தவுக்கு ஆதரவாக இருந்த அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகிய இருவரையும் அவர், சு.கவினதும் ஐ.ம.சு.கூவினதும் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார். சு.க தேசிய பட்டியல் மூலம் எவர் எவரை எம்.பியாக நியமிப்பது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அதன் மூலம் அவர், மஹிந்த அணியிடமிருந்து பறித்துக் கொண்டார். இதனாலும் மஹிந்த அணியினர் மனமுடைந்து போனார்கள். இது போன்றவற்றின் இறுதி விளைவே கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகள்.
அதே போன்ற கெரில்லாத் தாக்குதல் ஒன்றை இந்தப் பாத யாத்திரையின் போதும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இரண்டாண்டுகளுக்கு மட்டும் கைச்சாத்திடப்பட்டு இருந்த ஐ.தே.க – சு. க கூட்டு ஒப்பந்தத்தை அவர், ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தார். அடுத்த வருடம் ஒப்பந்தத்துக்கு இரண்டாண்டுகள் முடிவடைந்தவுடன் தற்போதைய கூட்டரசாங்கம் வீழ்ந்துவிடும் எனக் காத்திருந்த மஹிந்த அணியினர் பலருக்கு அதனால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இப்போது மஹிந்த அணியைச் சேர்ந்த மேலும் பல எம.;பிக்களும் எப்படியோ அரசாங்கத்தின் பக்கம் சார்ந்து அமைச்சர் பதவியொன்றை பெற்றுக் கொள்வதே நல்லது என நினைக்கலாம். அது மஹிந்த அணியின் ஐக்கியத்தை மேலும் பலவீனப்படுத்தும்.
இவை எதுவுமே இல்லாவிட்டாலும் எத்தனை பாத யாத்திரைகளை நடத்தினாலும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி மேலும் மூன்றரை வருடங்களுக்கு மஹிந்த அணியினருக்கு ஆட்சிக் கனவு காண முடியாது. ஏனெனில், அந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் ஓர் அரசாங்கம் தேர்தல் மூலம் பதவிக்கு வந்து ஒரு வருடத்தில் ஜனாதிபதி விரும்பினால் அந்த அரசாங்கத்தை கலைக்க முடியுமாக இருந்தது. ஆனால், 19 ஆவது திருத்தத்தின் படி ஓர் அரசாங்கம் அவ்வாறு பதவிக்கு வந்து நாலரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஜனாதிபதி அரசாங்கத்தை கலைக்க முடியும். அதற்கு மேலும் மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன.
இப்போது ஆர்ப்பாட்;டங்களை நடத்தி அரசாங்கம் இராஜினாமாச் செய்யும் நிலையை ஏற்படுத்தினாலும் மஹிந்த அணியினருக்கும் ஆட்சியை நடத்த முடியாது. ஏனெனில், அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் 52 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. தற்போதைய அரசாங்கம் வீழ்ந்து ஐ.ம.சு.கூ எம்.பிக்கள் அனைவரும் மஹிந்தவை ஆதரித்தாலும் 95 எம்.பிக்களின் ஆதரவு மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது.
எனவே, இந்தப் பாத யாத்திரையால் ஏற்படக் கூடிய ஒரே விளைவு, மஹிந்த அணியினர் அரசாங்கத்துக்கு எதிராக ஏதோ செய்துவிட்டோம் என ஆத்ம திருப்தியை அடைவது மட்டுமே.
(எம்.எஸ்.எம். ஐயூப்)