ஆந்திரப் புரட்சி நடிகர் ‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் மரணமடைந்தார்.

உடல்நலம் குன்றியிருந்த ஆந்திரப் புரட்சி நடிகர்
‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் கடந்த
மே 27 ஆம் தேதி ஹைதராபாதில் மரணமடைந்தார்.

என் நண்பன் ஹுசைன் மூலம்தான்
அவர் எனக்குப் பரிச்சயமானவர்.
‘ஜீவா முழக்கம்’ பத்திரிகைக்காக
நெடிய நேர்காணல் ஒன்றை அவரை சந்தித்துப் பெற்றேன்.
அதற்கு ‘பாரதம் சிவக்கட்டும்’ என்று தலைப்பிட்டிருந்தேன்.

அதை வாசித்துவிட்டு மாதலா என்னைத்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு,
“எனது பேட்டிகளில் இந்த நேர்காணலுக்குத்
தனியிடம் உண்டு காம்ரேட் ரதன் . நீங்கள் இதற்குக் கொடுத்த தலைப்புத்தான் எனது அடுத்த படத்தின் டைட்டில்!”
என்றார் புளகாங்கிதத்துடன்.

அதேபோல,”விப்ளவ சங்கம் படத்தை நீங்கள்
‘போர்க்களம்’ என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்து
வெளியிடலாம் தோழர்” என்று அவரிடம்
என் விருப்பத்தை வெளியிட்டிருக்கிறேன்.
“செய்வோம் காம்ரேட். காலம் கைகூடட்டும்…” என்றார்.

அவரது திரைப்படங்களைத் திரையிடும்
‘மாதலா வாரம்’ திரை விழா
சென்னை சோவியத் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்டது. அந்நிகழ்வுக்கான எனது பேரார்வ முனைப்பு குறித்து
பெரிதும் மகிழ்ந்த மாதலா,
அதன் நிறைவு விழாவில் நான் பேசவேண்டும்
என்று வலியுறுத்தினார். மேடை அச்சம் குறித்து நான் நாணி,
நன்றி நவின்றதோடு நிறுத்திக்கொண்டேன்.

இரண்டு மூன்று ஆண்டுகள் இருக்கக்கூடும்…

கோவை பீளமேடு பாலதண்டாயுதம் நகரில்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடக்கவிருந்த
மே தின விழாவில் மாதலா பங்கேற்கவேண்டும்
என்று தோழர் வடிவேலு அண்ணன்
மிக விழைந்தார். மாதலாவிடம் சொன்னேன்.
‘கால் வலி’ குறித்துச் சொன்னவர், ‘எதற்கும் தோழர் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்’ என்று வாங்கி வைத்துக்கொண்டார்.

அப்புறம் வடிவேலு அண்ணன் சொன்னபோதுதான் தெரியும்.
கட்சி செலவில் டிக்கெட் எடுக்கக்கூடாது – அறை ஏற்பாடு செய்யக்கூடாது என்று ‘சத்தியம்’ வாங்கிக்கொண்டு
‘மே’ தின விழாவில் போய்ப்
புரட்சிப் பிரசங்கம் செய்துவிட்டு வந்திருக்கிறார்
காம்ரேட் மாதலா.

எந்த சினிமாவில் நடித்தாலும்
கம்யூனிஸ்ட் கொடியை ஏந்தித்தான் நடிப்பேன்
என்று அடம் பிடித்த ‘செங்குழந்தை’ அவர்.

“கோழி கூவுது படத்தின் தெலுகு உருவாக்கத்தில்
பிரபு நடித்த கேரக்டரில் என்னை நடிக்கக் கேட்டார்கள்.
அது கம்யூனிஸ்ட் கேரக்டர் அல்ல என்பதால் நான் நடிக்க மறுத்துவிட்டேன்” என்றபோது எனக்கு மஹா ஆத்திரம் வந்தது. கம்யூனிஸ்டுகள் அடமண்ட்டுகளாயிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை . அதில் நீங்கள் நடிக்கவேண்டும் காம்ரேட்
என்று அடம் பிடித்தேன். நடித்தாரா என்று நினைவில் இல்லை.

அவருக்கு மகன் பிறந்தபோது ‘புரட்சி’ (விப்ளவம்) என்று
பெயர் வைத்தார். மூத்தமகன் ரவி ரஷ்யாவில் பயின்ற டாக்டர்.
அப்பா பாணியில் முஷ்டியை உயர்த்தியபடி
தெலுகு சினிமாவில் தோன்றிக்கொண்டிருக்கிறார் மாதலா ரவி.

லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியை தெலுகு சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் மாதலாதான்.

அதேபோல ‘பூ ஒன்று புயலாகிறது’ போன்ற படங்களின்மூலம்
சமூக அவலங்களைப் படமாக்கி – இளம் வயதிலேயே இறந்துபோன புரட்சி டைரக்டர் கிருஷ்ணா மாதலாவின் சிஷ்யன்தான்.

ஆயுதப் போராட்டத்துக்கு விடை கொடுத்து – ஜனநாயகப் பாதையில் அரசியல் நடத்துவேன் என்று மனந்திரும்பிய மாபெரும் நக்சல் தலைவர் கொண்டப்பள்ளி சீதாராமையாவை தனது
– ‘எர்ரப் பறவாலு’வோ, ‘எர்ர சூர்யலு’வோ –
படத்தில் நடிக்கவைத்து அழகு பார்த்தார் மாதலா.

தமிழில் அவர் நடித்த ஒரே படம் ‘சங்கநாதம்’.
ஒரு சின்ன வேடத்தில் தலைகாட்டிப்போனதோடு சரி.

நடிகனுக்குரிய ‘லட்சணங்களை’ப் பின்னுக்குத் தள்ளிவிட்டு- தோழமைக்குரிய பிம்பமாகவே
தன்னை நிறுவிச் சென்றவர் அவர்.

மரணம்
மக்களிடமிருந்தும்…
என் போன்ற தோழர்களிடமிருந்தும்….
உங்களை நிச்சயம்
பிரிக்கமுடியாது காம்ரேட் மாதலா!

(Rathan Chandrasekar)