முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வீ.ஆனந்தசங்கரிக்கு 15 ஏக்கர் மத்திய வகுப்பு காணியாக இருந்தது. இக் காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்து வருகின்றனர். இந்தக் காணியை தமக்கே பகிர்ந்தளிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் இக் காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஆனந்தசங்கரி எழுத்துமூலமான கோரிக்கையை பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரிடம் முன்வைத்திருந்தார். கொவிட்19 பரவல் காரணமாக இந்த நடவடிக்கை மந்த கதியில் நடைபெற்று வந்தது.
காணியை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.
நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியிலுள்ள ஆனந்தசங்கரியின் இல்லத்துக்குச் சென்ற பிரதேச செயலக காணி அலுவலக உத்தியோகத்தர்கள் பகிர்ந்தளிப்பு செய்வது தொடர்பில் பேசியதுடன், மத்திய வகுப்பு காணியை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான ஆவணத்தையும் வழங்கியிருந்தனர்.
ஆவணத்தில் கையொப்பமிட்ட ஆனந்தசங்கரி, அவற்றை உரிய முறையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். காணிகள் அரச காணியாக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் காணியற்ற மக்களுக்கு பகிர்நதளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், 03 மாத காலத்துக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
காணி பகிர்நதளிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி, மத்தியவகுப்பு காணி என்பதற்காக வீட்டுத்திட்டங்களை இழந்து நிற்கும் மக்களுக்கு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், இயலுமானவரை மக்களின் கரங்களுக்கு காணி விரைவாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறும் கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.
- தினகரன் செய்தி
திரு. ஆனந்தசங்கரியின் இந்த முன்மாதிரியை யாழ்ப்பாணத்திலும், திரிகோணமலையிலும், மட்டக்களப்பிலும், கொழும்பிலும், சென்னையிலும் வீடுகளை வைத்திருக்கும் ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்களும் பின்பற்றுவார்களா?