பாடசாலை விடுமுறையின் முதற்பயணமாக இன்று ஆனையிறவு உப்பளத்துக்கு காலையிலேயே சென்றுவிட்டோம். இரண்டு பேரும் மாணவர்கள் என்றபடியால் உப்பளத்தில் பணிபுரியும் என்னுடைய நண்பி ஒருவர் மூலம் உள்ளே சென்று பார்வையிட அனுமதி எடுக்க முடிந்தது. அவருக்கும் கள உத்தியோகத்தருக்கும் அன்பும் நன்றியும். 💙
700 ஏக்கர் விஸ்தீரணத்தில் 1937 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உப்புவயலில் 60 சதுர அடி அளவான 237 உப்பு விளையும் பாத்திகள் உள்ளன.
கடல்நீரை இயந்திரம் மூலம் பம்ப் பண்ணி, அதன் செறிவை படிப்பியாக அதிகரித்து இறுதி விளைவான மேசையுப்பும் பக்க விளைவுகளான சுண்ணாம்பு, ஜிப்சம், எப்சம் போன்றவற்றை எவ்வாறு பிரித்து எடுக்கின்றார்கள் என்று கள உத்தியோகத்தர் மூலம் மிக விளக்கமாகத் தெரிந்து கொண்டோம்.
உப்பு அறுவடை பகுதியில் பெரும்பாலும் பெண்களே பணி புரிகிறார்கள். வெள்ளைவெளேர் என்று கூரான முனைகளோடு கண்ணைக் கூச குவிந்திருக்கும் உப்பில் நின்று அசாத்திய வேகத்தோடு வேலை செய்கின்றனர். 🙁
சேகரிக்கப்படும் ஆயிரக்கணக்கான தொன் உப்பு, குவியல்களாக்கப்பட்டு தென்னம் கிடுகுகளால் மூடப்பட்டு விற்பனைக்காலம் வரை பேணப்படுகின்றது.
உப்பு எங்கே விற்கப்படுகின்றது? என்றால்…. அம்பாந்தோட்டை, புத்தளம் பகுதிகளில் இருந்து லொறிகளில் வரும் பெருவியாபாரிகள் கிலோ 12/= படி கொள்வனவு செய்கின்றார்கள். கொள்வனவு செய்து அவர்கள் கொண்டு போகும் மேசையுப்பு.. தூய்மையாக்கப்பட்டு, வெளுற்றப்பட்டு, அயடீன் சேர்க்கப்பட்டு பக்கற்றுக்களில் அடைக்கப்பட்டு கிலோ 60/= படி திரும்ப எங்களுக்கே விற்கப்படுகின்றது. 😯😯
ஆனையிறவு என்ற பெயர் கூட நாம் வாங்கும் உப்புப்பக்கற்றுகளில் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. 😕
சரி, இந்த கிலோ 12/= உப்பு முழுவதையும் வடமாகாணத்திலேயே தூய்மையாக்கி, வெளுற்றி, அயடீன் சேர்த்து பக்கற்றுக்களில் அடைத்து விற்றால் பணப்புழக்கம் வடமாகாணத்துக்குள்ளயே நிற்குமல்லவா? வெளி இடங்களுக்கும் “ஆனையிறவு உப்பை” நாங்கள் விற்கலாமல்லவா? எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும்? இது ஏன் சாத்தியமாக்கப்படக்கூடாது? இந்த மாதிரியான வளங்களை அடையாளப்படுத்தி அதனைக் கொண்டு பிரதேச பொருளாதாரத்தை மேம்படுத்துவதுவதற்கான முயற்சிகளை விட்டு வேறென்ன வேலை இந்த அரசியல்வாதிகளுக்கு?
ஆருக்கு வேணும் அரசியல் தீர்வு? 😏 பொருளாதாரம் தானே எல்லாம்