(சமரன்)
புதிய பதிவுக்காகவும்
புதிய தலைமுறைக்காகவும்
இவற்றைச் சொல்லியே ஆகவேண்டும்.
கால் நூற்றாண்டுகளுக்கு முந்திய நிகழ்வுகளின் நினைவுகள்.
1991 இலங்கை வடமாகாணம் முற்று முழுதாகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதி. புலிகளாலும் இராணுவத்தாலும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான தரைவழிப் போக்குவரத்து மிகவும் கடுமையான கெடுபிடிகளுக்கு உள்ளாகி இருந்த நேரம். பெரும்பாலும் தடைப்பட்டு இருந்ததென்றே சொல்லலாம். உணவு விநியோகம் முதல் தபால் பட்டுவாடா ஈறாக எதுவுமே சரிவர நடைபெற முடியாமல் இருந்த காலகட்டம். கருத்துச் சுதந்திரம் என்பது, புலிகள், அரசு இரண்டு தரப்பினராலும் ஒடுக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலைமை இருந்த சமயத்தில், சிறிய அளவிலான கைநூல் ஒன்று, யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க சில இடங்களுக்கு தபால் மூலமாக விநியோகிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆயர்(பிஷப்) இல்லம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், ஒரு சில பிரபல பாடசாலைகள், ஊர் சனசமூக நிலையங்கள், சில பிரமுகர்கள் என அந்தப் புத்தகம் அஞ்சலிடப்பட்டிருந்தது. கொழும்பில் இருந்து முதல் தடவையாக அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள் அந்தந்த இடங்களுக்கு சரியாக விநியோகிக்கப்பட்டது. புத்தகத்தைப் படித்துப் பார்த்த யாரோ அலறியடித்துக் கொண்டு ஓடிப் போய் புலிகளிடம் போட்டுக் கொடுத்து விட்டார்கள். புத்தகப் பிரதிகள் புலிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டதும் புலிகளும் அலறியடித்துக் கொண்டு யாழ் பிரதான தபால் நிலையத்தை நோக்கி ஓடினார்கள். அங்கு விநியோகிக்கப்படாமல் இருந்த புத்தகங்களைப் புலிகள் பறித்துக் கொண்டு சென்றார்கள். ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட இடங்களில் இருந்தும் கணிசமான அளவு புத்தகங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் திகைத்து நின்றார்கள். எப்படி இது சாத்தியமானது.
புலிகளால் கைப்பற்றப்பட்ட புத்தகங்களை சாவகச்சேரிப் பகுதியில் புலிகளால் இயக்கப்பட்டு வந்த வதைமுகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த சகல கைதிகளையும் கூடி வரச்செய்த புலிகள், கொண்டு வந்த சகல புத்தகங்களையும் அங்கே போட்டார்கள். அங்கே வந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சலீம் அந்தப் புத்தகங்களை தீயிட்டுக் கொழுத்தினான். எம்மிடமிருந்து தப்பிய ஒரு துரோகி எமக்கெதிராக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளான். அவன் எழுதியிருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் இப்படியாக எமக்கு எதிராக எழுதியிருப்பவன் எம்மிடமிருந்து தப்பவே முடியாது. விரைவில் அவனுக்குரிய தண்டனை வழங்கப்படும். எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம். யாரையுமே நம்ப முடியாது. புலிகள் எவரையுமே நம்புவதுமில்லை. உங்களை வெளியில் விட்டால் நீங்களும் இப்படித்தான் ஏதாவது செய்வீர்கள். உங்களில் எவரையுமே வெளியிலே விடுவதில்லை. யாருக்கும் விடுதலை கிடையாது இப்படியாக சலீம் பேசி முடித்தான்.
இந்தப் புத்தகத்தின் பிரதிகள் சில கிளிநொச்சியில் எரிக்கப்பட்டதை தான் நேரடியாகக் கண்டதாக ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை என்பவர் தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி புத்தகம் புலித் தலைமையைப் பயங்கொள்ளச் செய்திருந்தது. உலகின் அதி நவீன கொலைக் கருவிகளைக் காவிக்கொண்ட திரிந்த புலிகள,; பேனாவுக்கும் பேப்பருக்கும் பயந்தார்கள். அச்சங்கொண்டு ஓடித் திரிந்தார்கள்.