ஆயுதம் வாங்க எவ்வாறு பணம் தேடுகிறது ஐ.எஸ்?

பாரிஸ் படுகொலைகளுக்குப் பின்னர் ஐ. எஸ். பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அதை எப்படி இயங்காமல் செய்யலாம் என்பதைவிட அது எப்படித் தோன்றியது என்பதைப் பற்றிய விவாதங்களே ஊடகங்களில் அதிகம் இடம்பெறுகின்றன. அதன் தோற்றத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என்பதில் சந்தேகம் இல்லை. ஐ. எஸ். தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, ஈராக்கில் இருந்த புக்கா சிறையில் பல ஆண்டுகள் கைதியாக இருந்தவர். அவரை விடுவித்திருக்காவிட்டால் இந்த இயக்கம் தோன்றியே இருக்காது என்று சொல்பவர்களும் உள்ளனர்.

நாம் ஐ.எஸ். பற்றிப் பேசும் போது அது பிரிட்டனைவிடப் பெரிய பரப்பளவை தன் கட்டுப்பாடில் வைத்திருக்கிறது. என்பதையும் 80 இலட்சத்திற்கும் மேலாக மக்கள் இந்தப் பரப்பில் வசிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுவது முக்கியம். ஜூன் 2015 வரை அதன் கீழ் 3 இலட்சம் சதுர கி.மீ. இருந்தது என்று அல் ஜசீரா பதிவு ஒன்று சொல்கிறது. அது லஷ்கர் போலவோ, ஜைஷ்-இ-முஹம்மது போலவோ அரசு மேற்பார்வையில் இயங்கும் பயங்கரவாத அமைப்பு அல்ல. அதுவே ஒரு அரசை தனது மேற்பார்வையின் கீழ் இயக்குகிறது.

ஐ.எஸ். அமைப்பின் கீழ் இயங்கும் உலகம் நமது சிறிய ஊர்களில் இவ்வாறு இயங்குமோ அவ்வாறு இயங்குகிறது. மக்கள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குகிறார்கள். தினமும் சமையலறையில் அடுப்பு எரிகிறது இந்தப் பொருளதாரம் இயங்க வேண்டும் என்றால் இங்குள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் அவர்களோடு வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த வியாபாரத்தை வெளியுலகம் நிறுத்திவிட்டால் அப்பாவி மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

உலகத்திற்கு எதிரிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அல்ல. உலகத்திற்கு எதிரிகள் அதன் தலைவர்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் இராணுவமும் என்றே கூற வேண்டும். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கணக்கின்படி சென்ற வருடம் சுமார் 30,000 பேர் இயக்கத்தின் தலைமையில் போர் புரிந்தார்கள். 50,000 பேர் என்று வைத்துக் கொண்டாலும் உலகம் அடக்க வேண்டியது இவர்களைத்தான்.

இயக்கத்திற்குப் பணம் எண்ணெய் வியாபாரத்திலிருந்து கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டொலர்களிலிருந்து இரண்டு மில்லியன் டொலர்கள் வரை எண்ணெய் வியாபாரம் நடக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இதிலிருந்து கணிசமான தொகை ஐ.எஸ்.இற்குக் கிடைக்கிறது. ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியின் எல்லைகளில் கணக்கிலடங்காத எண்ணெய்த் தாங்கிகள் வரிசையில் நிற்கின்றன என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தவிர தனி மனிதர்கள் மூலம் எண்ணெய்க் கடத்தல் நடக்கிறது. 25 லீட்டர் எண்ணெய்க்குப் பண்டமாற்று சுமார் 25 கிலோ கோதுமை மாவு. மேலும் ஐ.எஸ். பல அரபுப் பணக்காரர்களிடம் மிரட்டிப் பணம் வாங்குகிறது. தாமாகவே முன்வந்து பணம் அளிப்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டுதான் அது ஆயுதங்களை வாங்குகிறது.

வாங்கும் ஆயுதங்களைப் பற்றிப் பேசும் முன்னர் அதற்குக் கிடைத்த ஆயுதங்களைப் பற்றிப் பேச வேண்டும். லிபியா போர் முடிந்தவுடன் அங்கு இருந்த ஆயுதங்கள் பல ஈராக் மற்றும் சிரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டன. அமெரிக்கா ஈராக் போர் வீரர்களுக்கு கொடுத்த ஆயுதங்களும் ஐ.எஸ்.இற்குக் கிடைத்தன. 40 ஆப்ராம்ஸ் தாங்கிகள் உட்பட 220 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள அமெரிக்க ஆயுதங்கள் ஐ.எஸ் கைவசம் இருக்கின்றன என்று ‘சிஎன்பிசி’ சொல்கிறது. ஆனால் அதன் கையில் இருக்கும் 35 வகை ஆயுதங்களில் 19 வகைகள் ரஷ்யாவைச் சேர்ந்தவை. முக்கியமாக கஜகிஸ்தான் வழியாக கத்தப்பட்ட ஆயுதங்கள்.

இன்று ஐ.எஸ். குலமுறை எப்படி எப்படி ஆரம்பித்தது என்று ஆராய்வது முக்கியம் அல்ல. அதை எப்படி ஒழிப்பது என்பதே உலகுக்கு முக்கியமாகிப் போயுள்ளது. ஹிட்லர் சோவியத் ஒன்றியத்தைத் தாக்கியபோது நாஜி கட்சி எப்படிப் பிறந்து என்பதில் ஸ்டாலின் நேரத்தைச் செலவிடவில்லை.

இன்னொன்றையும் முக்கியமாகச் சொல்ல வேண்டும். ஐ.எஸ் பிறப்பதற்கு அமெரிக்கா உதவி செய்தது என்றாலும் அது பிறந்த வயிறு மதவாதம் என்பதே உண்மை. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் சவுதி அரேபியாவின் கிரேண்ட் மஃப்டி உட்பட பெருமளவானோர் ஐ.எஸ்.இற்கு எதிரானவர்கள். ஐ.எஸ். உலகத்தின் முதல் எதிரி. இஸ்லாமின் மிகப் பெரிய எதிரி” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்துக்களும் ஷியா, அகமதியா முதலானவர்களும். கிறிஸ்தவர்களும், பெளத்த, ஜைன, சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களும், கம்யூனிஸ்ட்டுகளைப் போல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் ஐ.எஸ். பின்பற்றும் மதத்திற்கு மாற்றத்தக்கவர்கள் அல்லது இந்த உலகத்திலிருந்து துரத்தப்பட்டு நரகத்தில் வேகத்தக்கவர்கள் என்று ஐ.எஸ். உறுதியாக நம்புகிறது.

அடிமை வியாபாரத்தை அது அனுமதிக்கிறது. யெஸ்தி பெண்களுக்கு நடந்தது ஞாபகம் இருக்கலாம். இச்சம்பவம் இனிமேலும் பெண்களுக்கு நடக்காது என்று எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே ஐ.எஸ். என்பது உலகுக்கு ஆபத்தானதாகவே நோக்கப்படுகிறது.

(Thinakaran)