ஆர்ப்பாட்டம் ஒரு ஜனநாயக உரிமை

இதன் ஒரு படியாக, அதிகரித்து வரும் விலைவாசி, ஊழல், தனியார்மயமாக்கல், அதிகரிக்கும் கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒரு புதுவிதமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. அதுதான் ‘ஜன கோஷா’.

அரசாங்கத்துக்கு தனது எதிர்ப்பைக் காட்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பொதுமக்களும், ஏறத்தாழ ஏககாலத்தில் 15 நிமிடமளவுக்கு ஊதுகுழல்களை ஊதுவதன் மூலம், மேளங்களை அடிப்பதன் மூலம், உலோகப் பாத்திரங்களைத் தட்டுவதன் மூலம், வாகனங்களின் ‘ஹோர்ன்’ சத்தத்தைத் தொடர்ந்து அடிப்பதன் மூலம், வணக்கஸ்தலங்களின் மணிகளை ஒலிக்கச் செய்வதன் மூலம் சத்தமெழுப்புவதுதான் இந்த ஆர்ப்பாட்டமாக இருந்தது.

இந்த ‘ஜன கோஷா’ ஆர்ப்பாட்டத்தின் முன்னரங்கில் நின்றவர்களில் ஒருவர், இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம், இங்கிரியவில் இடம்பெற்றபோது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரண பிரேதேச சபை உறுப்பினராக இருந்த அமரதுங்க என்பவர், மேளங்களுடன் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

அங்கிருந்த பொலிஸார் சிலர், மேளங்களை அடிக்க வேண்டாம் என்று அவரை அச்சுறுத்தினார்கள், அதன் பின்னர், அவருடைய மேளத்தைப் பறிமுதல் செய்து, உடைத்து எறிந்ததுடன், அவர் மீது தாக்குதலும் நடத்தியிருந்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையால், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று, அமரதுங்க உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்களான மார்க் பெர்னான்டோ, தீரறட்ண, இராமநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு, ஏனைய இரு நீதியரசர்களின் இணக்கத்துடன், நீதியரசர் மார்க் பெர்னான்டோவால் வழங்கப்பட்டது. பேச்சுரிமை தொடர்பில், இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்புகளுள் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தீர்ப்பு, ‘ஜன கோஷா வழக்குத் தீர்ப்பு’ என்று பொதுவில் அறியப்படுகிறது.

தனது தீர்ப்பில், நீதியரசர் மார்க் பெர்னான்டோ, “மேளமடித்தல், கைதட்டுதல், சத்தம் எழுப்புதல் என்பன, பேச்சு மற்றும் வௌிப்பாட்டு உரிமையின் ஒருவகைதான். மேலும், அரசியலமைப்பானது, உள்ளார்ந்த மற்றும் 15ஆம் சரத்து குறிப்பிடும் மட்டுப்பாடுகளுக்கு அமைவாக, நீங்கள் விரும்பியபடி சிந்திப்பதற்கும், நீங்கள் சிந்திப்பதன் படி பேசுவதற்குமான உரிமையை வேண்டுகிறது. அதற்கமைவாக, கருத்துகளின் வௌிப்பாடானது, அது வன்முறையை அல்லது சட்டவிரோத நடவடிக்கையை ஆதரிக்காத அல்லது தூண்டாத வரையில், அந்தக் கருத்துகள் பிரபல்யமற்றதாக, அருவருப்பானதாக, வெறுக்கத்தக்கதாக, பிழையாக இருப்பினும் கூட, அது பேச்சு மற்றும் வௌிப்பாட்டுச் சுதந்திரத்தின் வரம்புக்கு உட்பட்டதே” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் குறித்த வழக்கின் தீர்ப்பில், “பொலிஸாரின் நடவடிக்கைகள் மனுதாரரின் பேச்சுரிமையை மீறிய செயல்” என்று கூறிய நீதியரசர் மார்க் பெர்னான்டோ, அரசாங்கத்தை, அல்லது அரசியல் கட்சிகளை அல்லது கொள்கைகளை, திட்டங்களை, ஆதரிப்பதற்கு அல்லது விமர்சிப்பதற்கான உரிமையானது, ஜனநாயக வழியிலான வாழ்க்கைக்கு அடிப்படையானதாகும் எனவும், பேச்சுரிமையை மறுத்தல் என்பது, எல்லா சிவில், அரசியல் நிறுவனங்களின் அடிப்படையாக உள்ள அடிப்படைக் கொள்கைகளான விடுதலை மற்றும் நீதியை மறுப்பதாகும் என்றும் குறிப்பிடுகிறார். நிற்க!

சில தினங்களுக்கு முன்னதாக, சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவரது வாகனப் பேரணி கடக்கும் வரையில், வீதிப் போக்குவரத்து தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து, அங்கே வாகனங்களில் இருந்தவர்கள் ‘ஹோர்ன்’ அடித்து சத்தமெழுப்பி, தமது எதிர்ப்பை வௌியிட்டிருந்தார்கள்.
இதனை ஒருவர், தனது திறன்பேசியில் படம்பிடித்திருந்தார். அது, சமூக ஊடகங்களில் வௌியாகி இருந்தது.

அந்தக் காணொளிப் பதிவில், அந்நபர் அங்கிருந்த வாகனச் சாரதிகளை, ‘ஹோர்ன்’ சத்தத்தை எழுப்பி, பிரபுகள் செல்வதற்காக, பொதுமக்களின் வாகனங்களைத் தடுத்துவைப்பதற்கு எதிர்ப்புக் காட்டுமாறு ஊக்குவிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் பலரும் ‘ஹோர்ன்’ அடித்துத் தமது எதிர்ப்பை வௌியிட்டு இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

மறுநாளே, வாகனச் சாரதிகள் ‘ஹோர்ன்’ சத்தத்தை எழுப்புவதற்கு ஊக்குவித்த குறித்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட செய்தி வௌியாகியிருந்தது. பிணையில் வௌிவந்த அந்நபர், நீதிமன்றத்துக்கு வௌியே, ஊடகவியலாளர்களிடம், “நான் இலங்கை அரசாங்கத்திடம், எனது செயலுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

மன்னிப்புக் கேட்பது, கேட்காமல் விடுவது என்பது, அவரது தனிப்பட்ட எண்ணம் மற்றும் விருப்பம்!

ஆனால், எந்தவித வன்முறையுமின்றி, தான் விரும்பாத அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சிக்கவும் எதிர்க்கவும் ஆர்ப்பாட்டம் செய்யவுமான அடிப்படை உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. அதை முறியடிக்கும் வகையில், குறித்த நபரை, ஏதோ பெருங்குற்றம் செய்தவரைக் கைதுசெய்வது போல, மறுநாள் கைது செய்ததே, மனித உரிமைகள் மீறலாகப் பார்க்கப்பட வேண்டியதாக அமைகின்றது.

ஆனால், குறித்த நபர் மறுநாளே பொது வௌியில் மன்னிப்புக் கேட்டது, அவர் எந்தப் பின்புலமும் இல்லாத, ஒரு சாதாரண குடிமகன் என்பதையே வௌிக்காட்டி இருந்தது. கைது, வழக்கு, என்று இழுபறிப்பட்டு, சுமூக வாழ்க்கையைத் தொலைத்துவிட முடியாத ஒரு சாதாரண குடிமகன், பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்வானோ, அதையே அந்நபரும் செய்திருக்கிறார்.

ஆனால், இந்தக் கைது என்ற செய்தியின் பின்னால் இருக்கும் தன்மையானது மிகவும் ஆபத்தானது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்ச உணர்வை, மறைமுகமாக இந்தச் சம்பவங்கள் மக்களுக்கு ஊட்டுகின்றன.

ஒரு சர்வாதிகாரி, எப்படித் தனது மக்களை அச்சத்தின் மூலம் ஆள்வானோ, அதுபோன்ற சிந்தனையின் பாற்பட்டது இந்த நடவடிக்கைகள். இவை ஜனநாயக விரோதமானவை மட்டுமல்ல; ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் செயல்களுமாகும்.

இதற்குச் சொல்லப்பட்ட நியாயங்களில் குறிப்பிடத்தக்கது, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, ட்விட்டரில் குறிப்பிட்ட கருத்தாகும். அதாவது, ‘வியன்னா உடன்படிக்கையின் கீழ், வௌிநாட்டுப் பிரமுகர்கள் வருகைதரும் போது, உச்சப்பட்ச பாதுகாப்பு அளிக்கும் கடப்பாடு, அரசாங்கத்துக்கு உண்டு. அதன்படியே வீதிப்போக்குவரத்து தடுக்கப்பட்டது, என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால், வௌிநாட்டுப் பிரமுகர்கள் வருகை தரும் போது, வன்முறையற்ற ரீதியில் பொதுமக்கள் எதிர்ப்பை வௌிக்காட்ட முடியாது என்று, எந்த ஒரு சர்வதேச சட்டமுமில்லை. அப்படியானால், ‘ஹோர்ன்’ அடிக்கத் தூண்டிய அந்த நபரைக் கைது செய்தது ஏன்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல நாடுகளுக்கு விஜயம் செய்த போதும், அங்கு பொதுமக்கள் தமது கடும் எதிர்ப்பை அமைதியாக ஆர்ப்பாட்டங்கள், பதாதைகள், இராட்சத உருவப்பொம்மைகள் மூலம் வௌிப்படுத்தி இருந்தனர். அமெரிக்காவின் நட்பு நாடான ஐக்கிய இராச்சியத்தில் கூட, இது நடந்தது.

ஜனநாயக விழுமிய வழி நடந்த அந்த அரசுகள், பொதுமக்களின் அமைதியான எதிர்ப்புகளை, இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை. அவை, தமது குடிமக்களின் உரிமை என்பதை, அந்த அரசுகள் புரிந்து கொண்டுள்ளன.

நிச்சயமாக, தனது மக்களை அடக்குமுறைக்குள் உள்ளாக்கியுள்ள, ஒரு கட்சியின் வல்லாட்சி கொண்ட சீனாவுக்கு, இந்த ஜனநாயக விழுமியங்கள் அந்நியமானவையாகவே இருக்கும். சீனாவால் இந்த ஜனநாயக விழுமியங்களின் தாற்பரியங்களைப் புரிந்துகொள்ள முடியாது இருக்கலாம்.

ஆனால், இலங்கை வல்லாட்சி நடைபெறும் நாடு அல்லவே! ஆகவே, சீனா தன் மக்களை நடத்துவது போல, இலங்கை அரசாங்கம் தனது மக்களை நடத்த முடியாது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இலங்கையின் ஆட்சியில் இருப்பவர் எவராக இருந்தாலும், இதை ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியம்.

‘ஜன கோஷா’ வழக்கின் தீர்ப்பில் நீதியரசர் மார்க் பெர்னான்டோ, ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட்டிருப்பார்.

“இன்று, மாற்றுக் கருத்தின் சட்டபூர்வமான அமைதியான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதானது, தவிர்க்க முடியாமல், எதிர்காலத்தில் வன்முறைப் பேரழிவின் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்ற எச்சரிக்கையை நீதியரசர் மார்க் பெர்னான்டோ தனது தீர்ப்பில் கோடிகாட்டியிருந்தார்.

இந்தக் கூற்றின் உண்மைத்தன்மைக்கு, இலங்கையின் அண்மைய வரலாறே சான்றுபகரும்.