அன்றைய போக்குவரத்தில், பலரோடு பலவித எண்ணங்களைப் பகிரும் சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்பட்டன. அதில் ஒருவர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்; மற்றையவர் வணிகம் செய்பவர். இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைய பத்தியை இருவரது மன உணர்களைத் தொட்ட விடயங்களைஅடிப்படையாக வைத்து எழுதலாம் எனக் கருதுகின்றேன்.
ஓய்வு பெற்ற உத்தியோகத்தர், குடும்பத்தினருடன் சொந்த விடயம் காரணமாக, அண்மையில் கொழும்புக்குச் சென்று வந்தவராம். வரும் வழியில், கொழும்பிலிருந்து ஓமந்தை வரை, எந்தவோர் இடத்திலும் இறக்கி ஏற்றிப் பரிசோதிக்கவில்லையாம். ஆனால், ஓமந்தை, மாங்குளம், ஆனையிறவு என மூன்று இடங்களில் கடும் பரிசோதனை எனப் பொருமிக் கொண்டார்.
“அவர்கள், உங்கள் மேற்கொண்ட அன்பு போலும்” எனக் கூறியவாறு, மற்றையவர் தனது கதையைக் கூறத் தொடங்கினார். அண்மையில், தென் இலங்கையைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய சிங்களப் பெண், யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வரும் வழியில், தான் வேலை செய்யும் பலசரக்குக் கடைக்கு வந்தார். அவர் சிங்களத்தில் பொருள்களின் விலையைக் கேட்டார். நான், எனக்குச் சிங்களம் தெரியாது எனத் தமிழில் கூறினேன்.
உடனே அவரது முகம் மாறி விட்டது. கோபம் கொண்டார்; கொதித்தார். அதேவேகத்தில் சிங்களத்தில் முழங்கித் தள்ளினார். உடனேயே அந்த இடத்தை விட்டு அகன்றும் விட்டார். அவர் என்ன சொன்னார் என, அவ்விடத்தில் நின்றவர்களிடம் பின்னர் கேட்டேன். “ஒரு பௌத்த சிங்கள நாட்டில் வாழும் உனக்கு, சிங்களம் தெரியாதா” எனக் கேட்டு ஏசியதாக, அவர்கள் கூறினார்கள்.
“சிறுபான்மை இனத்தவர்கள் என்ற ஒரு காரணத்துக்காக, நாட்டின் பூர்வீகக் குடிகள் எப்படியெல்லாம் வேதனைப்படுகின்றார்கள். எமக்கு ஏன் இந்த இழி நிலை” என அவரும் நொந்து கொண்டார்.
‘நம் நாட்டவர்’ என்ற பொதுப்பாடு இன்றி, ‘நம் இனத்தவர் இல்லையே’ என்ற குறுகிய கோட்பாட்டால், தினசரி அனுபவிக்கும் அட்டூழியங்கள் ஏராளம் ஏராளம்.
மக்களின் தேவைகளை இனங்காணல் என்பது, ஓர் இலகுவான விடயம் அல்ல. தேவைகளைத் தெட்டத் தெளிவாக இனங்காண முடியாத செயற்றிட்டங்கள் படுதோல்விகளையே சந்தித்து உள்ளன.
குளிரில் நடுங்கியும் வெயிலில் வதங்கியும் வாழும் மக்களின் தேவைகளை விருப்பங்களை, சரியாக இனங்காணாது, குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்து கொண்டு எடுக்கப்படும் பொருளாதாரத் திட்டங்கள், தீர்மானங்கள், இலக்குகளை எப்போதும் அடைந்ததில்லை.
அதுபோலவே, ஆட்சியாளர்களும் இனம், மதம் என்ற அடையாளங்களுக்குள் ஒழிந்து இருந்து கொண்டு, தீர்மானங்களை எடுக்கின்றார்கள். இதனால் பிற இனம், பிற மதம் சார்ந்தவர்கள் தலை குனிந்து, மனம் உடைந்து, எதிர்காலம் தொலைத்து, நடைப்பிணமாக வாழ்கின்றனர்.
எங்களுக்குள் காணப்படுகின்ற வேற்றுமைகளை மறந்து, இலங்கையர் என்ற கொடியின் கீழ் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகப் பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும் எனத் தற்போது, தெற்கு அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.
ஆனால், காலத்துக்குக் காலம் இனவாதங்களையும் மதவாதங்களையும் விற்பனை செய்தே, சிறப்பாகச் சந்தைப்படுத்தியே வாக்குகளைக் கொள்வனவு செய்கின்றார்கள். அதன் ஊடாகவே, தமக்கான கதிரையை அலங்கரிக்கின்றனர்.
நாட்டில் பெரும்பான்மை மக்களை ஒருவிதமாகவும் சிறுபான்மை மக்களை பிறிதொரு விதமாகவும் நடத்துகையில், சிறுபான்மை இன மக்களது நடத்தைக் கோலத்திலும் மாற்றங்கள் வரும். இதை விட, இங்குள்ள மூன்று இனங்களுக்குள்ளும் முறுகல்கள் உள்ளன. இதனாலேயே மூன்றாவது நபர்கள் (வெளிநாடுகள்) எங்கள் விடயத்தில் மூக்கை நுழைத்து வருகின்றனர்.
இலங்கைக்குள் சர்வதேச தலையீடுகள் வருவதற்கான சுலபமான ஒற்றைப் பாதையாக, இனப்பிணக்கே உள்ளது. 1987இல் இந்திய விமானப்படைகள் அத்துமீறி, நம்நாட்டு வான் பரப்புக்குள் நுழைவதற்கான ஏதுநிலையை, இனப்பிணக்கே ஏற்படுத்தியது. எமது பிணக்கைக் கொண்டு, வல்லரசுகள் நாட்டுக்குள் நுழைந்து, தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். இன்று நம்நாடு, சர்வதேசங்களின் ஆடுகளமாக, வேகமாக மாறி வருகின்றது.
எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினை (இனப்பிரச்சினை) தீர்க்கப்படாத வரை, எவ்வாறு நாம் இலங்கையர்கள் என ஒன்று சேர்ந்து, கை கோர்க்க முடியும்? அதுவரைச் சர்வதேசத் தலையீகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால், சர்வதேசத் தலையீடுகள் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை; தமிழ் மக்களது உரிமைகள் வழங்கக் கூடாது என்பதில், பேரினவாதம் உறுதியாக உள்ளது.
தமிழ் மக்களது ஆயுதப் போராட்டத்தை அழிக்க, பல நாடுகள் ஆதரவு வழங்கின. அதில் பிரதான பங்கு வகித்த நாடுகள் இன்று இலங்கையை ஆட்டிப் படைக்கும் நிலைகள் ஏற்பட்டு உள்ளன. முக்கியமாக, அமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை உறையப் போகின்றது.
இலங்கையைத் தங்களது பிடிக்குள் கையாள இரு நாடுகளுமே முற்படுகின்றன. அதன் ஊடாக அவர்கள், தங்களது இலக்குகளை அடையப் போகின்றார்கள். பேரினவாதத்தை, மதவாதத்தைக் கொண்டு நாட்டின் ஆட்சியாளர்கள் அரசியல் செய்ய, இனப்பிணக்குத் தோன்றுகின்றது. அதே இனப்பிணக்கைக் கொண்டு, வெளிநாடுகள் எம்மீது அரசியல் செய்கின்றன.
அடுத்த கணம் என்ன நடக்குமோ என நடுங்கியவாறு, முஸ்லிம் மக்கள் இருக்கையில், இலங்கை பௌத்த சிங்கள நாடா, இல்லையா என்ற பட்டிமன்றம் தெற்கில் நடக்கின்றது.
கடந்த ஏப்ரல் 21இல் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் கிறிஸ்தவர்களும் வெளிநாட்டவர்களும் இறந்தார்கள் எனக் கூறுகின்றனர். ஆனால், இலங்கையர்கள் இறந்தார்கள் என்று கூற மறந்து விட்டோம்.
இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் அண்ணளவாக 70 சதவீத சிங்கள பௌத்தர்கள் ஆவர். இவ்வாறாக, இலங்கை பௌத்த சிங்கள நாடு என 70 சதவீத மக்கள் கூறுவதை மிகுதி 30 சதவீத மக்கள் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார்களா அல்லது சகிப்புத் தன்மையுடன் தாங்கிக் கொண்டார்களா என எவருமே சிந்தித்துத் பார்க்கவில்லை; ஏன் அது பற்றிச் சிந்திக்க முற்படவே இல்லை. ஏனெனில், அவர்கள் முழுமையாகப் பேரினவாதத்துக்குள் முழ்கி உள்ளனர். அரசியல்வாதிகள், அப்பாவி மக்களை மூழ்கடித்து விட்டனர். ஏனையோர் உள்ளுணர்வையும் மதிப்பையும் இழந்து வாழ்வது ஒரு வாழ்வா?
மறுவளமாக 70 சதவீத மக்கள் தொகையால் எவ்வாறு முழு நாட்டையும் ஒன்று திரட்ட முடியும், எவ்வாறு பொது அடிப்படையில் அணி திரள வழி முடியும்?
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துகின்ற போது, வாய்ப்புகள் மேலும் பெருகுகின்றன. ஆனாலும் நாட்டை ஒற்றுமைப்படுத்தும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும், பேரினவாதம் அவற்றை எட்டித் தட்டி விட்டது.
‘ஒரு தீமையைப் பிறிதொரு தீமையால் ஒதுக்கி விட முடியாது’ என்றார் கௌதம புத்தர். ஆனால், தமிழ் மக்கள் பேரினவாதத்தால் தங்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற தொடர்ச்சியான தீமைகளால் நசுங்கிப் போய் உள்ளனர்.
வீணே கடலுடன் சங்கமிக்கும் மகாவலியை வடக்கு நோக்கித் திருப்பி, பல்வேறு நீர்ப்பாசன விவசாயத் திட்டங்களை உருவாக்கலாம். ஆனால், வடக்கு நோக்கித் திருப்பி, தமிழ் மக்கள் பெருளாதார சுபீட்சம் காண்பதற்குப் பேரினவாதம் குறுக்கே நிற்கின்றது. இதே வேளை, ‘வீணே கடலுக்குள் போனாலும் பரவாயில்லை; மகாவலி வடக்கு நோக்கித் திரும்பினால், பெரும்பான்மையினத்தவரையும் கூடவே கூட்டிக் கொண்டு வந்து விடும்’ என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.
ஆகவே, இவ்வாறான சிறுபான்மை இனத்தவரின் வெளிப்படையான அச்சங்களும் பெரும்பான்மை இனத்தவரின் மறைமுகத் திட்டங்களும் சகவாழ்வையும் ஏற்படுத்தாது சுகவாழ்வையும் ஏற்படுத்தாது. ஆளும் வர்க்கம் இன்னமும் முன்னோக்கியும் சிந்திக்கவில்லை; புதிதாகவும் சிந்திக்கவில்லை. அதே பழைய பாடத்தையே மீட்டல் செய்கின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நல்லிணக்க வகுப்புகள் சாதாரண பெறுபேற்றைக் கூட வழங்கவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதலின் எதிரொலியாக, நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மகிழ்ச்சியான வாழ்வே மனித வாழ்வின் அதி உயர்ந்த குறிக்கோள் ஆகும். அடிப்படையில் ஒற்றுமையாக வாழ்வதே பெரும் (பேறு) மகிழ்ச்சியே. இதனை அடைவதற்கு, இலங்கை நாட்டில் செயலாற்றல் உடைய நபர்களும் இல்லை; செயலாற்றல் மிக்க கலாசாரமும் இல்லை.
இந்நிலையில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே சுதந்திரம் கண்ட தேசத்தில் இன்னமும் போர்கள் நடக்கின்றன; குருதி ஓடுகின்றது. மனிதம் மரணிக்கின்றது; வேறு என்ன…?