இலங்கை போன்ற நாடு விவசாயத்துறையில் தன்னிறைவையும், விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் தங்கியிருந்தும் வளர்ச்சிபெற்ற நாடாகும். தற்போதைய நிலையில், விவசாயத்தை சார்ந்திருந்த எமது பொருளாதாரம் மெல்ல மெல்ல சேவைகள் சார்ந்த துறை மூலமான வருமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை ஏற்பட என்ன காரணம் என்பதையும், நாம் விவசாயம் சார்ந்த வருமானங்களை இழந்துகொண்டு செல்கின்றோமா? அல்லது விவசாய வருமானங்கள் வேறுவடிவில் வேறுயாரிடமாவது செல்கிறதா? என்பதைப் பற்றிச் சிந்தித்து இருக்கிறோமா?
இலங்கை போன்ற நாட்டில் விவசாயத்துறையில் நவீனமயப்படுத்தலும், வணிகமயப்படுத்தலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளது. அத்துடன், விவசாயம் மூலம் கொள்ளை இலாபம் பெறுபவர்களாக விவசாயிகள் அல்லாமல், விநியோகஸ்தர்கள் இருப்பதனாலும் நமது விவசாயத்துறையில் வீழ்ச்சியும், வருமான இழப்பும் மிக அதிகமாகவுள்ளது. குறிப்பாக, இன்றைய நிலையில் இலங்கையில் விவசாயிகளாகவிருப்பவர்கள், தொடர்ந்தும் ஒரேவிதமான வாழ்க்கை தரத்ைதயே கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், விவசாயப் பொருள்களை விநியோகிக்கும், விற்பனை செய்யும், ஏற்றுமதி செய்யும் தனிநபர்கள், நிறுவனங்கள், பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சியையும், அதன் வருமானத்தையும் ஒருதடவை பரீட்சித்து பாருங்கள். அந்த இலாபங்கள் எதுவுமே, விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளுகின்ற விவசாயிகளுக்கு போய் சேராததன் விளைவாக, இன்றைய நிலையில் விவசாயம் ஒரு வறுமைத் தொழிலாகச் சித்தரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
விவசாயிகள் அனைவரும் பல்தேசிய நிறுவனங்களின் கூலித்தொழிலாளியாக அவர்களின் நிலங்களில் விவசாயிகளாக இருக்கிறார்கள். இந்தநிலையில், மாற்றம் ஏற்படவேண்டுமாயின், விவசாயம் செய்கின்றவர்கள் நேரடியாக இலாபம் பெறக்கூடியவர்களாக மாற்றம் பெறவேண்டுமாயின், அவர்களுக்கு இந்த நிலைமை தெள்ளத் தெளிவாக விளக்கப்படுத்தப்படுவது அவசியம்.
விவசாய செயன்முறைகளையும், விவசாயம் சார் நடைமுறைகளையும் நவீனமயப்படுத்துவதென்பது தனியே உற்பத்திகளை அதிகரிக்க பாரிய இயந்திரங்களை பயன்படுத்துவதோ, புதிய புதிய கிருமிநாசினிகளை பயன்படுத்துவதோ என்றாகிவிடாது. மாறாக, விவசாயத்ைத சூழலுடன் இணைந்ததாக முன்னேற்றம் செய்யக்கூடிய வகையிலான மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு முன்னேறுவதாக அமைய வேண்டும். பழமையான முறைகளை புதுமையுடன் இணைந்ததாக விவசாயத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் மியன்மார், வியட்நாம் போன்ற தென்கிழக்காசிய நாடுகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகவுள்ளது.
இன்றையநிலையில், விவசாய பயிர்ச்செய்கையிலும், அதுசார் உற்பத்திகளிலும் உடலுக்கு ஆரோக்கியமான மூல உணவுகளுக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதன்காரணமாக, இதற்கான சந்தை அதிகரித்துள்ளதுடன், அதற்காக அதிக விலையையும் மக்களை செலுத்த தயாராகவுள்ளார்கள். எனவே, இந்தச் சந்தை மாற்றங்களை உள்வாங்கி நமது விவசாய முறைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
விவசாயத்ைத வணிகமயப்படுத்தல்
நமது விவசாயிகள் பயிர்ச்செய்கை நடைமுறைகள், உற்பத்திகள் என்பவற்றில் எவ்வளவுதான் முன்னேற்றகரமான விற்பனர்களாகவிருந்தாலும், தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த்துவதிலும், வணிகமயப்படுத்துவதிலும் தோற்றுப்போய் விடுகிறார்கள். இதுதான், விவசாய உற்பத்திகளை விநியோகம் செய்பவர்களுக்கும், பல்தேசிய நிறுவனங்களுக்குமுள்ள வாய்ப்பாகவுள்ளது. இதன் காரணமாகத்தான், ஒரு விவசாயின் தனது வாழ்க்கைதரத்ைத எந்த நிலையிலும் முன்னேற்றிக்கொள்ள முடியாதநிலை காணப்படுகிறது.
விவசாயத்ைத வணிகமயப்படுத்துவதென்பது, வார்த்தைகளில் சொல்வதுபோல மிக எளிதான காரியமல்ல. விவசாயிகளை கிட்டவும் நெருங்கவிடாத வகையில், தனிநபர்களாலும், பலதேசிய கம்பனிகளாலும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள வணிக வலைப்பின்னலை ஊடுருவி விவசாயம் செய்வோர் நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகும் வழிமுறை மிகவும் சிக்கலானது. ஆனால், இந்த வலைப்பின்னலை ஊடுருவிட்டால், இன்றைய நிலையில் விநியோகஸ்தர்களாகவுள்ள தனிநபர்களும், பல்தேசிய நிறுவனங்களும் உழைக்கும் கொள்ளை இலாபம் விவசாயினையே வந்து சேரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உதாரணமாக, இலங்கையின் இயற்கை வேளாண்மை (Organic Agriculture) தொடர்பில் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள், அதாவது, ஒரு பயிைர உற்பத்தி செய்வதற்கு பயன்படும், பதப்படுத்தும் மண் தொடங்கி, அதில் பயன்படுத்தும் உரம், முடிவுப்பொருள் வாடிக்கையாளரை சென்றடையும் வரை எந்தச் செயற்பாட்டிலும், செயற்கையான எந்தவொரு இரசாயனப் பயன்பாடு இல்லாதவகையில் பயிர்செய்கையை முன்னெடுப்பதாகும். இவ்வாறான பயிர்செய்கை முறையில் கிளிநொச்சியிலிருந்து பப்பாசி பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சாதாரணமாக, இவ்வாறு இயற்கை முறைமை மூலமாக உற்பத்தி செய்யப்படும் பப்பாசி பழங்கள் கிலோகிராெமான்றுக்கு 50 ரூபாய் முதல் 80 ரூபாய்க்குள் பயிர்செய்கை செய்பவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் பழங்கள் உள்நாட்டு சந்தையில் குறிப்பாக கொழும்பில் மட்டும் கிலோ கிராம் 200 ரூபாய்க்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது குறைந்தது கிலோகிராம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடைநடுவேயிருக்கும் இடைத்தரகர்களுக்கு உள்நாட்டில் கிலோகிராெமான்றுக்கு 100 ரூபாயும் ஏற்றுமதியில் கிலோகிராெமான்றுக்கு 300 ரூபாயும் இலாபம் கிடைக்கிறது. ஆனால், அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோகிராெமான்றுக்கு 10 ரூபாய் இலாபம் கிடைப்பதே குதிரைக்கொம்பாகவிருக்கிறது.
உற்பத்தியாளர்களுக்கு மேலே கூறியதுபோல, மிகச் சொற்பமான இலாபமும், விநியோகஸ்தங்களுக்கு கொள்ளை இலாபமும் கிடைப்பதற்கு மிகமுக்கிய காரணம், உற்பத்தியாளர்களுக்கு தனது பொருளுக்கான சந்தை தொடர்பிலும், தனது வாடிக்கையாளர் யாரென்பது தொடர்பிலான போதிய அறிவின்மையும், அதனை அறிகின்றபோது, தனது உற்பத்திகளை கொண்டுசேர்க்க ஏற்படும் மேலதிக வேலைப்பளு, செலவீனங்களை கருத்தில்கொண்டும் அந்த இடநேர்வை (Risk) எடுக்க துணியாமையும்தான் இதற்கான காரணமாகும். விவசாயம்சார் தொழில்முறையின் ஆதாரமாகவுள்ள உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு நலிவடைவதுடன், விவசாயம்சார் தொழில் முறையிலிருந்தும் வெளியேறுகின்றார்கள் அல்லது வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்தநிலையிலிருந்து மீண்டுவர விவசாய உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைக்கு கொண்டுசேர்க்கக் கூடிய மேலதிக அணுகுமுறையையும் தம்மிடத்தே கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இயற்கை வேளாண்ைம கூட கணினியின் உதவியுடன் செய்கின்ற அளவுக்கு முன்னேறி விட்டது. என்னதான் நாம் பழமையான, இயற்கை முறைகள் மாறாத வேளாண்மையை காரணம் காட்டி, தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்க மறுத்தாலும், உண்மையில் இயற்கை வேளாண்மைக்கு பாதகமல்லாதவகையில் மிகப்பெரும் நன்மையைத் தரக்கூடிய தொழில்நுட்பங்களை உள்வாங்க முயற்சிக்க வேண்டும் அல்லது பரீட்சார்த்த அடிப்படையில் பயன்படுத்தியாவது பார்க்க வேண்டியது அவசியமாகும். இதன்மூலமாக, பருவநிலைகளுக்கு ஏற்றவகையிலும் சரி, சந்தை கேள்விகளுக்கு ஏற்றவகையிலும் சரி, விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையிலும் சரி தமது விவசாய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
இதற்கு அடுத்ததாக, விவசாயம் சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் இன்றைய தலைமுறைக்கும், அதில் ஈடுபட தயாராகவுள்ள தலைமுறைக்குமிடையான இடைவெளியை குறைத்து ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, விவசாய செயற்பாடுகளில் ஈடுபடும் இன்றைய தலைமுறையினர் விவசாய கல்வியல் செயற்பாடுகளை பார்க்கிலும், அனுபவரீதியாக தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அதுபோல,எதிர்கால தலைமுறையினர் தொழில்நுட்பம் உட்பட ஏனையவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கிடையிலான இணக்கம் ஏற்படும்போது, அனுபவமும், புதிய நுட்பங்களும் இணைந்து மிகப்ெபரும் மாற்றத்துக்கு வித்திடுவதாக இருக்கும்.
இவற்றுக்கு மேலதிகமாக, விவசாய கற்கை நெறிகளில், விவசாயம்சார் கற்கை நெறிகளை எவ்வாறு வணிகமயப்படுத்துவது என்பதனையும் உள்ளடக்க அவசியமாகிறது. காரணம், தனித்து விவசாய கற்கை நெறிகளை கற்பதன் மூலமாக, விவசாய உற்பத்திகளில் முன்னேற்றத்தை காணமுடியுமே தவிர, அதனை உற்பத்தி செய்ப்பவர்களுக்கு வணிகரீதியில் எவ்வித முன்னேற்றத்தையும் பெற்றுத்தர போவதில்லை. எனவே,ஒவ்வொரு விவசாயம் சார் உற்பத்திகளில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தமது உற்பத்திகளை எவ்வாறு இறுதி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க முடியும் என்கிற வழிமுறைகளை உள்ளடக்கிய புத்துருவாக்க கற்கைநெறிகளை உருவாக்குவது அவசியமாகிறது. இவ்வாறான கற்கைநெறிகள் வரும்போதுதான், விவசாயம் சார் உற்பத்திகள் பக்கமாக இளையோரையும் ஈர்த்திழுக்க முடியும்.
பெரும்பாலான வணிகங்கள் தலைமுறை தலைமுறையாக பெற்றோர்களிடமிருந்து வாரிசுகளுக்கு கையளிக்கப்பட்டு, அவற்றின் பாரம்பரியமும், இலாபமும் அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகின்றன. ஆனால், விவசாயம்சார் உற்பத்திகளில் ஈடுபடுபவர்கள் தமது விவசாயத்தையும், துட்சார் தொழிலையும் தனது எதிர்கால தலைமுறையிடம் கையளிக்க தயங்கி நிற்பதுடன், இந்த தொழில் எப்பாடுபட்டாலும் தமது சந்ததியினரை வைத்தியராகவோ, கணக்காளராகவோ, அரச ஊழியர்களாகவோ கரை சேர்க்க எண்ணுகிறார்கள். இதற்கு காரணம், விவசாய உற்பத்திகள் மூலம் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் வருடம்தோறும் நலிவடைந்து கொண்டு போவதுடன், விவசாய உற்பத்திகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்களும் காரணமாக உள்ளன. இந்தநிலையில் மாற்றம் ஏற்படவேண்டுமாயின், விவசாயம் சாரி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும், விவசாயம் சார் உற்பத்திகள் விநியோக சங்கிலியானது பல்தேசிய கம்பெனிகளிடமோ அல்லது தனிநபர்களிடமோ சிக்கிக்கொள்ளாத வகையிலான ஏற்பாடுகளை செய்யவும் அரசு முன்வரவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலமாகத்தான், விவசாயத்தை வருமானம் தரும் உத்திரவாதத் தொழிலாக மாற்ற முடியும்.
மேற்கூறிய அனைத்துமே,விவசாயம் சார் உற்பத்திகள் நாட்டில் வருமானம் தரும் தொழிலாக விவசாய உற்பத்திகளில் ஈடுபடுவர்களுக்கு இருக்கவேண்டும் என்பதை பரிந்துரை செய்யும் விடயங்களாகவே உள்ளது. உணவு என்பது அடிப்படையான தேவைகளில் ஒன்றாகவுள்ள நிலையில், அதற்காக எத்தகைய பெறுமதியையும் நாம் வழங்க தயாராகவுள்ளநிலையில், நாம் வழங்கும் எத்தகைய பெறுமதியும் அவ்வுணவை நமக்கு வழங்கும் உற்பத்தியாளர்களை சென்றடையாமல், அவர்களை வறுமை நிலைக்குள்ளேயே வைத்திருக்கும் நிலை நிச்சயமாக மாறவேண்டும்.