மாநிலத்தின் தென் மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் இராஜினாமாச் செய்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தல். இரு தொகுதிகளுமே தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியிடமிருந்து, அ.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது.
விக்ரவாண்டியில் வன்னியர் சமுதாய வாக்காளர்கள் அதிகம் என்றாலும், அதற்குச் சற்று குறைவாகப் பட்டியலினத்து வாக்காளர்கள், தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகத் திகழ்கிறார்கள். இதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், அவ்வளவு அதிகமாக இல்லை.
சமீப காலமாகவே, தேர்தல் முடிவுகளை ஒரு வேட்பாளரின் ஜாதி தீர்மானிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்குள்ள ஒரே தொகுதி இது. ஆகவே, அ.தி.மு.கவுடன் அக்கட்சி கூட்டணி வைத்திருந்தது, இந்த வெற்றிக்கு வித்திட்டுள்ளது.
அதற்கு காரணம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்றும் கூறவில்லை. பட்டியலினத்தவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படத்தையும் பாராட்டவில்லை. ஆனால், இது இரண்டையும் தி.மு.க செய்தது. ஆகவே, தோல்வியை அறுவடை செய்தது.
வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற அந்தஸ்தைக் கொடுத்து, அந்தப் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்தவர் தி.மு.க தலைவர் கருணாநிதிதான்.
ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸோ, எப்போதெல்லாம் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறுகிறாரோ, அப்போதெல்லாம் “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறி விட்டு, 108 ஜாதிகளைக் கொண்டு வந்து, இந்த இட ஒதுக்கீட்டில் சேர்த்து விட்டார் கருணாநிதி” என்றே விமர்சித்து வந்தார்.
இப்போது, மு.க. ஸ்டாலின், “வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராயப்படும்” என்று அறிவித்ததும் முதலில் எதிர்த்தவர் டொக்டர் ராமதாஸ்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நேரத்திலும், வன்னியர் சமுதாயத்தின் வாக்குகள், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்குப் போய் விட்டது என்ற கோபம், அவருக்கு இருந்திருக்க வேண்டும். அதனால், இந்த எதிர்ப்பை முதலில் பதிவு செய்து, “ஸ்டாலின் வன்னியர்களுக்கு விரோதி” என்று முத்திரை குத்தினார்.
இந்நிலையில், ‘அசுரன்’ திரைப்படத்தை ஸ்டாலின் பாராட்டியது, வன்னியர்களை அ.தி.மு.க பக்கம், முழுவதும் திருப்பியது. இதை, மீண்டும் எதிர்த்த ராமதாஸ், “தி.மு.கவின் அதிகார பூர்வ நாளேடான ‘முரசொலி’ அலுவலகம், பஞ்சமி நிலத்தில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
“அதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார்” என்று, ஸ்டாலின் பதிலடி கொடுத்தாலும், இடைத்தேர்தல் வாக்குகள் பதிவாகும் வரை, தேர்தல் களம் ராமதாஸுக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போட்டியாகத் திசை திரும்பியது.
வன்னியர் வாக்குகள், அ.தி.மு.கவின் பக்கம் திரள, அதற்கு எதிராகத் திரள வேண்டிய பட்டியலின சமுதாய வாக்குகள், தி.மு.க நிறுத்திய, வன்னியர் சமுதாய வேட்பாளருக்கு, ஆதரவாகத் திரளவில்லை. விளைவு, தி.மு.க 44 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில், 2016 இல் வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதியை இழக்க நேர்ந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில், இவ்வளவு அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும், முதல் இடைத் தேர்தல் விக்ரவாண்டி இடைத் தேர்தல் ஆகும்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டில், சென்ற முறை, தி.மு.க கூட்டணியில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பெற்ற 74 ஆயிரம் வாக்குகளை, இந்தமுறை காங்கிரஸின் வேட்பாளர் ரூபி மனோகரனால் பெறமுடியவில்லை.
“தொகுதிக்கு வெளியில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் ரூபி மனோகரன்” என்ற எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம், அ.தி.மு.கவினர் மத்தியிலும் எடுபட்டது. அந்த வேட்பாளரை நிறுத்திய காங்கிரஸ் காரர்கள் மத்தியிலும் எடுபட்டு விட்டது.
இத்தொகுதியில் தி.மு.க வேலை செய்தாலும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த ‘கோஷ்டி பூசல்’ தோல்விக்கு வித்திட்டு விட்டது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் நின்ற தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம், 83 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். ஆனால், இந்த முறை தி.மு.க கூட்டணியில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர், 61 ஆயிரம் வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வி கண்டுள்ளார்.
இங்கு, அ.தி.மு.கவுக்குக் கிடைத்த வெற்றியில் உள்ள இரகசியம் டொக்டர் கிருஷ்ணசாமி, தேர்தலைப் புறக்கணித்ததில் இருக்கிறது. தனது சமுதாயத்தில் உள்ள ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்று அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தி அ.தி.மு.கவுடனான கூட்டணியை டொக்டர் கிருஷ்ணசாமி முறித்துக் கொண்டார். கிருஷ்ணசாமி எதிர்க்கும் அ.தி.மு.கவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நாங்குநேரி தொகுதியில் உள்ள தேவர் சமுதாய வாக்காளர்கள் முடிவு செய்து விட்டதால், அ.தி.மு.க வேட்பாளர் இங்கு 95 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஆகவே, இந்த இரு இடைத் தேர்தல்களிலும் ‘ஜாதி அரசியல்’ முடிவுகளை நிர்ணயித்துள்ளது. ‘ஜாதி வளையத்துக்குள்’ சிக்காமல், தனது பிரசாரத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.கவுக்கு வெற்றியை தேடிக் கொண்டு, அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில், 125 ஆக உயர்த்திக் கொண்டுள்ளார். ஆனால், ‘ஜாதி வளையத்துக்குள்’ மாட்டிக் கொள்ளும் பிரசாரத்தை மேற்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், இடைத் தேர்தலில் வெற்றியைப் பெற இயலவில்லை. இதுதான், இரு இடைத் தேர்தல்களும் உணர்த்தும் பாடம்.
இந்த இடைத் தேர்தல் வெற்றி, வேறு சில பாடங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இரு தொகுதிகளிலுமே, தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர்கள், சென்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை, இந்த முறை பெற முடியவில்லை.
ஆனால், அ.தி.மு.க வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்று, அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். வாக்காளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் பண விநியோகம், ஒரு காரணம் என்று சொல்வதை மறுக்க முடியாது. ஆனால் இன்னொரு உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் ‘மோடி எதிர்ப்பு அலை’ இருக்கிறதே தவிர, எடப்பாடி எதிர்ப்பு அலை இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டமன்றத் தேர்தலுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 13 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றதும் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்ப்பு அலை இல்லை என்பதையே எடுத்துக் காட்டியது. அதே நிலைமை மீண்டும் இந்த இடைத் தேர்தல் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மோடி எதிர்ப்பு அலை, தமிழகத்தில் நடைபெற்ற இந்த இரு இடைத் தேர்தல்களிலும் எதிரொலிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தமட்டில், “மக்கள் தீர்ப்பை வணங்கி ஏற்கிறோம். வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து உழைப்போம்” என்று இடைத் தேர்தல் முடிவுகள் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, “உண்மைக்குக் கிடைத்த வெற்றி. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோடி, இந்த வெற்றி” என்று கூறியிருக்கிறார்.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இடைத் தேர்தல் வெற்றி என்பது கடந்த காலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.கவுக்கும் உதவியதில்லை. ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.கவுக்கும் உதவியதில்லை. 2006-2011 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க பென்னகரம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க அந்த இடைத் தேர்தலில் கட்டுத் தொகையைப் பறி கொடுத்தது. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது.
அதேபோல், முதலமைச்சராக எடப்பாடி வந்த பிறகு நடைபெற்ற ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தி.மு.க கட்டுப்பணம் இழந்தது. ஆனால், அதன் பிறகு நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 39 இடங்களில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றது.
ஆகவே, நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத் தேர்தல் வெற்றி, அ.தி.மு.கவுக்கு 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரம் இல்லை. ஆனால், இடைத் தேர்தலில் அ.தி.மு.கவுக்குக் கிடைத்துள்ள அதிக வாக்குகள் வித்தியாசம், தி.மு.கவுக்கு எச்சரிக்கை மணி.
இந்த எச்சரிக்கை மணியை, தி.மு.க உணர மறுத்தால், 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்பக்கமும் திசை மாறலாம் என்பது, இடைத் தேர்தல் தெரிவிக்கும் செய்தி.