தமிழ்-சிங்கள புதுவருடமான 14.04.2017 அன்று கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பிரதேசமான மீதொட்டமுல்லயில் திண்மக்கழிவு (குப்பை) மேடு சரிந்ததில், அதனைச்சூழ இருந்த 147 வீடுகள் புதையுண்டு, மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரையில் 30 சடலங்கள் மீடகப்பட்டுள்ளன. மேலும் குறைந்தது 20 பேராவது புதையுண்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வேறு இடங்களிலிருந்து வந்த மக்களும் அங்கு கூடியிருந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கையினைச் சரியாகக் கணிக்க முடியாதுள்ளதாகத் தெரியவருகின்றது. உலகெங்கிலும் அடிக்கடி மண்சரிவு மற்றும் பனிச்சரிவு ஏற்படுவதுபற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் திண்மக்கழிவு மேடு சரிந்து இவ்வளவு தொகையாக மக்கள் இறந்தது முதன்முறையாக இலங்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
மீதொட்டமுல்லயில் சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இங்கு தினமும் 850 தொன் (8 இலட்சத்து 50 ஆயிரம் கிலோ) திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக்கேடுகளால் அப்பகுதியைச் சூழவுள்ள 8 கிராம சேவகர் பகுதிகளில் வாழும் 8700 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரம் மக்கள் கடந்த 20 வருடங்களாகப் பாதிப்புக்களைச் சந்தித்து வந்துள்ளனர். இந்த திண்மக்கழிவு மேட்டின் உயரம் 100 மீட்டருக்கும் அதிகமானதாகும். இங்கு ஏறத்தாள 235 இலட்சம் தொன் நிறையுடைய திண்மக்கழிவுகள் சேர்ந்திருப்பதாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அமைச்சரொருவர் பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தக் கணக்குத் தெரிவித்த பின்னர், கடந்த 14 மாதகாலத்தில் மேலும் மூன்றரை இலட்சம் கழிவுகள் அங்கு கொட்டப்பட்டுள்ளன.
கடந்த 5 வருடங்களாக இந்தக் கழிவு மேட்டுக்கெதிராக மக்கள் பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். கடந்த அரசாங்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக பொலிசாரின் வன்முறையும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபை ஆட்சி ஐக்கிய தேசியக்கட்சியிடமும், நாட்டின் ஆட்சி ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணியிடமும் உள்ளதால், இப்பிரச்சனையை தீர்க்க முடியாதுள்ளதாக அப்போது காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் 2015 இற்குப் பின்னர், இரு கட்சியும் சேர்ந்து ஆட்சி செய்கின்ற நிலை உருவாகியபோதும் இப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. 2015 ஆண்டு ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி கழிவுகள் கொட்டப்படுவது 2 நாட்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்த மக்கள், பாதாளக் குழுவினர் துணைகொண்டு தாக்கப்பட்டுமுள்ளனர். கடந்த மாதம் ஆறாம் திகதியும் அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திண்மக்கழிவு மேட்டுக்கெதிரான போராட்ட அமைப்பின் தலைவர் கீர்த்திரத்தனவின் மூன்று குழந்தைகள் இச்சரிவில் புதையுண்டு பலியாகியதுடன், அவரது மனைவியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ”நாம் இதனை எப்போதும் கூறினோம். இவ்வாறு நடக்குமென்றே கூறினோம். ஏன் இறுதிவரை எவரும் விளங்கிக்கொள்ளவில்லை. நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இதனை விளங்கிக்கொள்ள முடியாமல் போனதேன்? இந்த அரசிற்கும், இதற்கு முன்னர் இருந்த அரசிற்கும் கூறினோம். யாரும் இதனைக் கருத்திற் கொள்ளவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து எம்மைக் கொன்று குவித்தனர்.” என்று கீர்த்திரத்தன அழுதவாறு கூறியுள்ளார்.
கொழும்பு மாநகரக் கழிவுகள் மாத்திரமன்றி, பொதுவாகவே திண்மக்கழிவுகளை என்ன செய்வதென்பது ஓர் உலகளாவிய பிரச்சனை. ஆனால் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் இது ஒரு பிரச்சனையேயல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். திண்மக்கழிவுகளில் உணவுக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள், எலக்ரோனிக் கழிவுகள், கட்டிடக்கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுகள் என பல வகையுண்டு. இவற்றை பொதுவாக உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள் என இரண்டாக பிரிக்கலாம். அதாவது மறுசுழற்சி செய்யத்தக்க, மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளாகப் பிரிக்கலாம். பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி, உலோகங்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யலாம். காய்கறி, உணவு, தாவரம் போன்ற மறுசுழற்சி செய்ய முடியாத உக்கும் கழிவுகளிலிருந்து உரம், மீதேன் வாயு போன்றவற்றைத் தயாரிக்கலாம். உக்கும் கழிவுகளை நீண்ட நாட்களுக்குக் கொட்டிக் குவித்து வைப்பதால், அது மீதேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக்கூடியது. இது குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக், இரப்பர் முதலான உக்காத குப்பைகளோடு சேர்ந்து எரியும்போது சுற்றஞ்சூழலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் திண்மக்கழிவுகளுக்கு என்ன நடக்கிறது? கழிவுகளை மொத்தமாக சேகரித்து அதை அப்படியே கலந்துகட்டி நகரிற்கு அல்லது கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற இடங்களில் கொட்டி நிரப்புகின்றது கழிவுகள் அதிகரிக்க, அதிகரிக்க, புதிதாக இடம் பார்த்து, அந்த இடத்தில் கொட்டுவதும் தொடர்கிறது. அதாவது கொழும்பு மாநகரக்கழிவுகளுக்கு மீதொட்டமுல்லயில் இடமில்லையென்ற நிலைமை உருவாகியவுடன், பிலியந்தல-கரதியானவில் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அங்குள்ள மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பததால், இப்போது புதிய இடம் தேடுகிறார்கள்!
இந்தத் திண்மக்கழிவு மேட்டினைச் சுற்றி வாழ்ந்தவர்கள் விளிம்பு நிலை மக்கள். இந்த மக்கள் தங்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தை எண்ணி பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள். முன்னைய, தற்போதைய ஆட்சியாளர்களுடன் நேரடியாக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார்கள். வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்து, மக்களைப் பலிகொள்ளும் ஆட்சியாளர்களை தண்டிக்கும் நிலை இலங்கையில் உருவாகுமா?
(நன்றி: வானவில் 76)